குடியரசு தின அணி வகுப்பில் தமிழ்நாடு என தமிழில் எழுதப்படவில்லை என்று ஒரு பதிவு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. உண்மையில் தமிழ் புறக்கணிக்கப்பட்டதா என்று ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

அசல் பதிவைக் காண: Facebook I Archive

குடியரசு தின அணிவகுப்பில் தமிழ்நாட்டின் கலை, கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் ஊர்தியின் படம் பகிரப்பட்டுள்ளது. அதில் தமிழ்நாடு என இந்தியில் எழுதப்பட்டுள்ளதை வட்டமிட்டு காட்டியுள்ளனர். நிலைத் தகவலில், "தமிழ்நாடு என தமிழில் எழுதப்படாமல் இந்தியில் எழுதப்பட்டிருகிறது... உன் முகம் சிதஞ்சி செத்துப்போயிட்டினா.. எப்படி உன் பிணத்தை யாராலும் அடையாளம் காட்ட முடியாதோ... அப்படி தான் உன் மொழி சிதைந்து அழிந்தால் உன் இனத்தை எவராலும் அடையாளம் காட்டமுடியாது" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த பதிவை, நாஞ்சில் வைரவன் என்பவர் 2021 ஜனவரி 26 அன்று பதிவிட்டுள்ளார். இவரைப் போல பலரும் இந்த புகைப்பட பதிவை தங்கள் ஃபேஸ்புக் பக்கங்களில் பதிவிட்டுப் பகிர்ந்து வருகின்றனர்.

உண்மை அறிவோம்:

இந்த படத்தை பதிவிட்டு வரும் பலரும் இது தற்போது நடந்தது போலவும், தமிழ் புறக்கணிக்கப்படத் தமிழகத்தில் ஆட்சி செய்து வரும் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அ.தி.மு.க அரசுதான் காரணம் என்பது போலவும் பதிவிட்டு வருகின்றனர். பாரதிய ஜனதா கட்சிதான் தமிழை புறக்கணித்து, தமிழை நீக்கிவிட்டது என்பது போலவும் பலரும் கூறிவருகின்றனர்.

அசல் பதிவைக் காண: Facebook 1 I Archive 1 I Facebook 2 I Archive 2

இந்த பதிவில் இந்த புகைப்படம் எந்த ஆண்டு, எங்கே எடுக்கப்பட்டது என்று குறிப்பிடவில்லை. தமிழ்நாட்டில் நடந்த குடியரசு தின கலாச்சார ஊர்தி ஊர்வலத்தில் தமிழ் புறக்கணிக்கப்பட்டது என்கிறார்களா... அல்லது டெல்லியில் நடந்த குடியரசு தின ஊர்வலத்தில் தமிழ் புறக்கணிக்கப்பட்டது என்று குறிப்பிடுகிறார்கள் என்று தெளிவாக கூறவில்லை. ஆனால், காட்சியைப் பார்க்கும்போதே இது டெல்லியில் எடுக்கப்பட்டது என்பது தெளிவாகிறது.

டெல்லி குடியரசு தின ஊர்வலம் என்பது இந்தி பேசும் மக்கள் மத்தியில் நடத்தப்படுவது. இது என்ன மாநிலத்தைச் சார்ந்த ஊர்தி என அங்குள்ளவர்கள் தெரிந்துகொள்ள அவர்களுக்குத் தெரிந்த இந்தியில் எழுதப்பட்டிருக்கலாம். இந்தியில் எழுதப்படவில்லை என்றால் யாருக்கும் அது என்ன மாநிலம் என்று தெரியாமல் போய்விடும். அதே நேரத்தில் தமிழ் கட்டாயம் இடம் பெற்றிருக்க வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. அந்த ஊர்தியில் தமிழ் புறக்கணிக்கப்பட்டதா என்று ஆய்வு செய்தோம்.

2021ம் ஆண்டு குடியரசு தின ஊர்வலத்தில் தமிழகத்தின் சார்பில் மாமல்லபுரம் காட்சியை உருவாக்கியிருந்தனர். முன் பகுதியில் இந்தியிலும், பக்கவாட்டில் தமிழிலும் தமிழ்நாடு என எழுதப்பட்டிருந்தது. எனவே, இந்த புகைப்படத்தில் இருப்பது பழைய படம் என்பது உறுதியானது.

Youtube

படத்தை ரிவர்ஸ் இமேஜ் தேடலில் பதிவேற்றித் தேடியபோது இந்த ஊர்தி 2014ம் ஆண்டு குடியரசு தினத்தின் போது எடுக்கப்பட்டதாக செய்தி, புகைப்படம் நமக்கு கிடைத்தது. அதாவது, மத்தியில் காங்கிரஸ் தலைமையிலான அரசும், தமிழகத்தில் ஜெயலலிதா தலைமையிலான அ.தி.மு.க அரசும் இருந்த போது நடந்த குடியரசு தின விழா அது.

அடுத்ததாக, அந்த ஊர்தியில் தமிழ் புறக்கணிக்கப்பட்டதா என்று ஆய்வு செய்தோம். 2014 குடியரசு தின விழா வீடியோ பல நமக்கு கிடைத்தன. அதில், பக்கவாட்டில் தமிழ்நாடு என்று தமிழில் எழுதியிருப்பதைக் காண முடிந்தது. இதன் மூலம் தமிழ் புறக்கணிக்கப்படவில்லை என்பதும் தெரிந்தது. அந்த ஆண்டு மட்டுமின்றி ஒவ்வொரு ஆண்டும் ஊர்தியின் முகப்பில் இந்தியில் மட்டுமே எழுதப்பட்டிருப்பதைக் காண முடிந்தது.

Youtube Link

தமிழகத்துக்கு மட்டுமல்ல மற்ற எல்லா மாநில வாகனத்திலும் இந்தியில் எழுதப்பட்டிருந்தன. பக்கவாட்டில் அந்த அந்த மாநில மொழிகள் இடம் பெற்றிருந்ததையும் காண முடிந்தது. 2014ல் மட்டுமல்ல தமிழகத்தில் தி.மு.க ஆட்சி நடந்த 2009ம் ஆண்டு ஊர்வலத்திலும் கூட முகப்பில் இந்தியிலும் பக்கவாட்டில் தமிழிலும் 'தமிழ்நாடு' என எழுதப்பட்டிருந்ததைக் காண முடிந்தது.

மற்ற மாநிலங்கள் எப்படியோ, தமிழகத்தைப் பொருத்த வரையிலாவது தமிழ், இந்தி என இரண்டையும் முகப்பிலேயே வைத்திருக்கலாம். இருப்பினும் இந்த அலங்கார ஊர்தியில் தமிழ் புறக்கணிக்கப்படவில்லை என்பது உறுதியாகிறது. இதன் அடிப்படையில் இந்த பதிவு உண்மையுடன் தவறான தகவலும் சேர்ந்த பதிவாக உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:

குடியரசு தின ஊர்வலத்தில் தமிழைப் புறக்கணித்து தமிழ்நாடு பெயரை இந்தியில் எழுதியுள்ளார்கள் என்று பகிரப்படும் தகவல் தவறானது என்பதை தகுந்த ஆதாரங்களுடன் ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் நிரூபித்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

Avatar

Title:குடியரசு தின அணி வகுப்பில் தமிழ் புறக்கணிக்கப்பட்டதா?

Fact Check By: Chendur Pandian

Result: False