நாடாளுமன்றத் தேர்தலுக்காக திமுக வாக்காளர்களுக்கு மது, சிகரெட், பணம் அடங்கிய பரிசு பெட்டியை வழங்கி வருகிறது என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive

தெலுங்கு தேசம் கட்சித் தலைவர் சந்திரபாபு நாயுடு புகைப்படத்துடன் கூடிய தேர்தல் பரிசு பெட்டி வீடியோ பகிரப்பட்டுள்ளது. ஸ்டாலின் தான் வராரு என்ற பாடல் ஒலிக்கிறது. நிலைத் தகவலில், "ஓட்டுங்கடா ஸ்டிக்கர் இது கொலுசல்ல குவாட்டர் இல்லம் தேடி வரும் திட்டம் தேர்தலுக்கு தயாராகும் திமுக" என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த வீடியோவை பலரும் சமூக ஊடகங்களில் பகிர்ந்து வருகின்றனர்.

உண்மை அறிவோம்:

ஆந்திர மாநிலத்தில் நாடாளுமன்றத் தேர்தலுடன் சட்டமன்ற தேர்தலும் நடைபெற உள்ளது. இதையொட்டி ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி என அனைவரும் வாக்காளர்களுக்குப் பரிசுப் பொருட்களை வழங்கி வருவதாக செய்திகள் வந்தவண்ணம் உள்ளன. தெலுங்கு தேசம் கட்சி சார்பில் வாக்காளர்களுக்கு வழங்கப்பட்ட பரிசு பெட்டி என்று ஒரு வீடியோ சில தினங்களுக்கு முன்பு வைரல் ஆனது. அதில் மது பாட்டில், சிகரெட் உள்ளிட்ட பரிசுப் பொருட்கள் இருந்தது. இந்த நிலையில் அந்த வீடியோவை எடுத்துவந்து தமிழ்நாட்டில் வாக்காளர்களுக்கு திமுக வழங்கி வரும் பரிசு பெட்டி என்று பலரும் சமூக ஊடகங்களில் பகிர்ந்து வருகின்றனர்.

Archive

இப்படி சமூக ஊடகங்களில் பகிர்பவர்கள் வீடியோவை ஒரு முறை முழுவதுமாக பார்த்திருந்தால் பகிர்ந்திருக்க மாட்டார்கள். வீடியோவில் தெலுங்கு தேசம் கட்சித் தலைவர் சந்திரபாபு நாயுடு மற்றும் அவரது மகன் நரேஷ் ஆகியோர் படங்கள் தெளிவாகத் தெரிகிறது. மேலும், TDP என்று பெரிதாக எழுதப்பட்டிருந்ததை காண முடிகிறது. மேலும் தெலுங்கு தேசம் கட்சியின் சின்னமும் அதில் தெளிவாகத் தெரிகிறது. இவை எதையுமே பார்க்காமல் எதன் அடிப்படையில் திமுக வழங்கிய பரிசு பெட்டி என்று பகிர்கின்றார்கள் என்று தெரியவில்லை.

உண்மைப் பதிவைக் காண: freepressjournal.in I Archive

இந்த வீடியோ தொடர்பாக சமூக ஊடகங்களில் தேடியபோது தெலுங்கு தேசம் கட்சியினர் வழங்கிய தேர்தல் பரிசுப் பொருள் என்று குறிப்பிட்டு பலரும் பகிர்ந்திருப்பதைக் காண முடிந்தது. நாம் என்ன செய்கிறோம் என்று அறியாமலேயே, ஒரு குறிப்பிட்ட கட்சி மீது தங்களுக்குள்ள வன்மத்தைத் தணிக்கும் வகையில் வேண்டுமென்றே வதந்தி பரப்பியிருப்பது இதன் மூலம் தெளிவாகிறது.

முடிவு:

தேர்தலுக்காக மது, சிகரெட், பணம் உள்ளிட்டவை கொண்ட பரிசு பெட்டியை வழங்கிவரும் திமுக என்று பரவும் வீடியோ தவறானது என்பதை தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில் ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…

Facebook I Twitter I Google News Channel

Avatar

Title:‘திமுக கொடுத்த தேர்தல் பரிசு’ என்று பரவும் வீடியோ உண்மையா?

Written By: Chendur Pandian

Result: False