சொந்த பந்தங்களிடம் கூட தலைகாட்ட முடியவில்லை என்று அண்ணாமலை பற்றி அவரது மனைவி அகிலா கூறியதாக ஒரு நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. அது பற்றி ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive

அண்ணாமலை படத்துக்கு மாலை அணிவித்தது போன்று புகைப்படத்துடன் தந்தி டிவி வெளியிட்டது போன்று நியூஸ் கார்டு பகிரப்பட்டுள்ளது. அதில், "மனம் திறந்த அகிலா. சொந்த பந்தங்களிடம் கூட தலை காட்ட முடியவில்லை. நண்பர்கள் பணத்தில் அண்ணாமலை குடும்பம் நடத்தி வரும் நிலையில் மனைவி அகிலா பேட்டி" என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

நிலைத் தகவலில், "ஆட்டுக்குட்டியின் மனைவிக்கு வந்த பரிதாப நிலை... சொந்த பந்தங்களிடம் கூட தலை காட்ட முடியவில்லை!!!" என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த பதிவை Kalpana Senthil என்ற ஃபேஸ்புக் ஐடி கொண்டவர் 2023 ஜூலை 1ம் தேதி பதிவிட்டிருந்தார். இவரைப் போல பலரும் இந்த நியூஸ் கார்டை சமூக ஊடக பக்கங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

உண்மை அறிவோம்:

நண்பர்கள் உதவியுடன் அரசியல் நடத்தி வருகிறேன் என்று அண்ணாமலை கூறியிருந்தார். வீட்டு வாடகையை நண்பர்கள் தருவதாக அவர் குறிப்பிட்டிருந்தார். சமீபத்தில் பேட்டி ஒன்றில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மனைவியைக் குறிப்பிட்டு அண்ணாமலை பதில் அளித்திருந்தார். அரசியலில் உள்ளவர்களின் மனைவி, குடும்பத்தினர் பற்றி எல்லாம் பேசுவது சரியா என்று அப்போது கேள்வி எழுந்தது.

இந்த சூழலில் அண்ணாமலை மனைவி பேட்டி அளித்தது போன்று சிலர் சமூக ஊடகங்களில் நியூஸ் கார்டை பகிர்ந்து வருகின்றனர். இந்த நியூஸ் கார்டின் வடிவமைப்பு, இறந்தவர்களின் படத்துக்கு மரியாதை செய்வது போல் அண்ணாமலை படத்து மரியாதை செய்யப்பட்டிருப்பது போன்றவை எல்லாம் இந்த நியூஸ் கார்டு போலியானது என்று காட்டின. இதை உறுதி செய்ய ஆய்வு செய்தோம்.

அண்ணாமலையின் மனைவி அகிலா சமீபத்தில் பேட்டி ஏதும் கொடுத்தாரா என்று தேடிப் பார்த்தோம். ஆனால் அப்படி எந்த ஒரு செய்தியும் இல்லை. இந்த நியூஸ் கார்டை தந்தி டிவி வெளியிட்டதா என்று உறுதி செய்ய, அதன் ஃபேஸ்புக் பக்கத்தை பார்வையிட்டோம். அதில், "இந்த செய்தி தந்தி தொலைக்காட்சி வாயிலாக பகிரப்படவில்லை" என்று "FAKE" முத்திரையுடன் இதை பகிர்ந்திருந்தனர். இதன் மூலம் இந்த நியூஸ் கார்டு போலியானது என்பது உறுதியானது!

முடிவு:

அண்ணாமலையின் செயலால் சொந்த பந்தங்களிடம் கூட தலை காட்ட முடியவில்லை என்று அவரது மனைவி அகிலா கூறியதாக பரவும் நியூஸ் கார்டு போலியானது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…

Facebook I Twitter I Google News Channel

Avatar

Title:அண்ணாமலை பற்றி அவர் மனைவி கூறியதாகப் பரவும் போலி நியூஸ் கார்டு!

Written By: Chendur Pandian

Result: False