செக்ஸை ஸ்வீடன் நாடு விளையாட்டாக அங்கீகரித்தது என்று ஒரு தகவல் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive

சன் நியூஸ் வெளியிட்ட நியூஸ் கார்டு பகிரப்பட்டுள்ளது. அதில், "முதல் செக்ஸ் சாம்பியன்ஷிப்பை வெல்லப்போவது யார்? உலகிலேயே முதல்முறையாக செக்ஸை விளையாட்டாக அங்கீகரித்து, அதிகாரப்பூர்வமாக அறிவித்து வரலாறு படைத்துள்ளது ஸ்வீடன்! முதலாவதாக ஐரோப்பிய செக்ஸ் சாம்பியன்ஷிப் தொடர் ஜூன் 8ல் தொடங்கி, 6 வாரங்கள் நடைபெறவுள்ளது; பல்வேறு நாடுகளில் இருந்து 20 வீரர், வீராங்கனைகள் இதில் பங்கேற்கின்றனர்" என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

Krishnavaka Samuthayam என்ற ஃபேஸ்புக் ஐடி கொண்டவர் இந்த நியூஸ் கார்டை பகிர்ந்திருந்தார். இவரைப் போல பலரும் இந்த நியூஸ் கார்டை தங்கள் ஃபேஸ்புக், ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளனர்.

உண்மை அறிவோம்:

பாலுறவை விளையாட்டாக அங்கீகரித்தது என்று சன் நியூஸ் வெளியிட்ட நியூஸ் கார்டை பலரும் பகிர்ந்து வருகின்றனர். சன் நியூஸ் மட்டுமின்றி பல ஆங்கில ஊடகங்களும் இந்த செய்தியை வெளியிட்டிருந்தன. இந்தியாவின் முன்னணி ஊடகங்கள் இந்த செய்தியை வெளியிட்டதால் இது உண்மையாக இருக்கும் என்ற நம்பிக்கையில் வாசகர்கள் அதிக அளவில் இதை சமூக ஊடகங்களில் பகிர்ந்து விவாதித்து வருகின்றனர்.

உண்மையில் ஸ்வீடன் அரசு இப்படி அங்கீகாரம் வழங்கியதா என்று தேடினோம். ஆனால், ஸ்வீடன் அரசு அங்கீகாரம் அளித்ததாக எந்த ஒரு செய்தியும் நமக்குக் கிடைக்கவில்லை. பின்பு எப்படி இந்த தகவல் செய்தி ஊடகங்களில் வெளியானது என்று ஆச்சரியத்துடன் ஆய்வு மேற்கொண்டோம்.

சன் நியூஸ்-ல் இந்த நியூஸ் கார்டு உள்ளதா என்று தேடிப் பார்த்தோம். அவர்கள் அதை அகற்றியிருப்பது தெரிந்தது. இது குறித்து சன் டிவி டிஜிட்டல் பிரிவு பொறுப்பாளரைத் தொடர்புகொண்டு பேசினோம். அப்போது அவர், "பல முன்னணி ஆங்கில ஊடகங்களும் இந்த செய்தியை வெளியிட்டிருந்தன. அதனால் இது உண்மையாக இருக்கலாம் என்று கருதி செய்தி வெளியிட்டோம். இதற்கிடையே இந்த தகவல் உண்மையா என்று நாங்கள் ஆய்வு செய்தோம். அப்போது, இது தவறானது என்று தெரியவந்தது. அதனால், உடனடியாக அந்த நியூஸ் கார்டை அகற்றிவிட்டோம்" என்றார்.

அவர் அளித்த தகவல் அடிப்படையில், ஸ்வீடிஷ் மொழியில் சில கீ வார்த்தைகளை மொழிமாற்றம் செய்து கூகுளில் பதிவிட்டு தேடினோம். அப்போது இது தொடர்பாக ஸ்வீடனில் வெளியான செய்திகள் நமக்குக் கிடைத்தன. அதில், ஸ்வீடிஷ் செக்ஸ் பெடரேஷன் என்ற அமைப்பு செக்சை விளையாட்டாக அங்கீகரித்து போட்டிகள் நடத்த அனுமதி அளிக்க வேண்டும் என்று கோரி ஸ்வீடன் தேசிய விளையாட்டு கூட்டமைப்பில் விண்ணப்பம் செய்துள்ளது. கடந்த ஜனவரி மாதமே இதற்கான விண்ணப்பத்தை அளித்துவிட்டது. ஆனால், ஸ்வீடன் விளையாட்டு கூட்டமைப்பு இந்த விண்ணப்பம் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருந்துள்ளது.

மௌனம் சம்மதம் என்ற முடிவுக்கு வந்த ஸ்வீடன் செக்ஸ் கூட்டமைப்பு, ஐரோப்பிய சாம்பியன்ஷிப் போட்டி நடத்தப்போவதாக அறிவித்துவிட்டது. விஷயம் பெரிதாகவே, சுவீடன் விளையாட்டு கூட்டமைப்பு கடைசியில் விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டதாக அறிவிப்பை வெளியிட்டுள்ளது என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த செய்தியும் சில மாதங்களுக்கு முன்பே வெளியாகி இருந்தது.

உண்மைப் பதிவைக் காண: gp.se I Archive

இந்திய ஊடகங்களில் இந்த செய்தி தற்போது வைரல் ஆகவே, ஸ்வீடிஷ் விளையாட்டு கூட்டமைப்பின் ஊடகத் தொடர்புத் துறைத் தலைவர் அன்னா செட்ஸ்மேன் (Anna Setzman) இந்த தகவல் தவறானது என்று உறுதி செய்ததாக பல ஊடகங்களில் செய்தி வெளியாகி உள்ளது. உடலுறவை விளையாட்டாக ஸ்வீடன் அங்கீகரித்தது என்று பரவும் செய்தி ஸ்வீடன் நாட்டை கொச்சைப் படுத்தும் வகையில் உள்ளது. ஸ்வீடன் விளையாட்டு கூட்டமைப்பில் உறுப்பினராகக் கூட ஸ்வீடன் செக்ஸ் கூட்டமைப்பு இல்லை" என்று அவர் உறுதி செய்ததாக செய்திகள் தெரிவிக்கின்றன.

உண்மைப் பதிவைக் காண: dailymirror.lk I Archive I tv4.se I Archive 1

நம்முடைய ஃபேக்ட் கிரஸண்டோ தரப்பில் இருந்து ஸ்வீடன் செக்ஸ் ஃபெடரேஷனுக்கு மின்னஞ்சல் மூலம் தொடர்புகொண்டோம். அதற்கு பதில் அளித்த அந்த அமைப்பு, "செக்சை விளையாட்டாக இன்னும் அங்கீகரிக்கவில்லை. இதற்கு சில நிதி தொடர்பான பிரச்னை இருக்கலாம். விளையாட்டு கூட்டமைப்பானது விளையாட்டாக பயிற்சி அளிக்க, நடுவராக செயல்பட, நடுவராக செயல்பட பயிற்சி அளிக்க என்று பணம் அதிகம் செலவு செய்ய வேண்டும் சில அடிப்படையை எதிர்பார்க்கிறது. இந்த ஆண்டு இ-ஸ்போர்ட்ஸ்க்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. உட்கார்ந்த இடத்தில் இருந்து கம்ப்யூட்டர் முன்பாக அமர்ந்து வீடியோகேம் விளையாடுவதைக் காட்டிலும் ஆயுளை நீட்டிக்கும் உடல் உழைப்பைக் கொண்ட செக்ஸ் மோசமானதா என்பதை நீங்களே முடிவு செய்துகொள்ளுங்கள். அது விளையாட்டா இல்லையா என்பது எல்லாம் ஒரு புறம் இருந்தாலும், செக்ஸ் சாம்பியன்ஷிப் ஜூன் 8ம் தேதி நடைபெறும். ஸ்வீடன் செக்ஸ் ஃபெடரேஷன் மட்டுமே பாலியல் தொடர்பான பயிற்சிகள் அளிக்க அரசாங்க அனுமதியைக் கொண்ட உலகின் ஒரே அமைப்பு" என்று தெரிவித்திருந்தது.

இது தொடர்பாக நம்முடைய ஃபேக்ட் கிரஸண்டோ இலங்கையில் வெளியான கட்டுரையைக் காண இங்கே கிளிக் செய்யுங்கள்.

ஸ்வீடனில் செக்ஸ் விளையாட்டு போட்டி நடக்கிறதா, நடக்காதா என்பது பிரச்னை இல்லை. ஸ்வீடன் அரசு இப்படிபட்ட போட்டிக்கு அனுமதி எதையும் அளிக்கவில்லை என்பது உறுதியாகிறது. இதன் அடிப்படையில் நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட பதிவு தவறானது என்று உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:

பாலுறவை விளையாட்டாக அங்கீகரித்தது ஸ்வீடன் என்று பரவும் தகவல் உண்மையில்லை என்பதை தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில் உறுதி செய்துள்ளோம். எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…

Facebook I Twitter I Google News Channel

Avatar

Title:FactCheck: செக்ஸை விளையாட்டாக அங்கீகரித்ததா ஸ்வீடன்?

Written By: Chendur Pandian

Result: False