
துருக்கியில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் அதிர்வை காரில் இருந்த கேமரா பதிவு செய்தது என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. அது பற்றி ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:

உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive
காரில் உள்ள கேமராவில் பதிவான நிலநடுக்கத்தால் வாகனங்கள், கட்டிடங்கள் குளுங்கும் காட்சி பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “துருக்கி 🇹🇷 காரில் உள்ள கேமராவில் இருந்து பூகம்பத்தின் நேரடி பதிவு” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த வீடியோவை Mohamatu Hasan என்ற ஃபேஸ்புக் ஐடி கொண்டவர் 2023 பிப்ரவரி 8ம் தேதி பதிவிட்டுள்ளார். இதை பலரும் பகிர்ந்து வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
துருக்கி நிலநடுக்க பாதிப்பு தொடர்பான புகைப்படங்கள், வீடியோக்கள் சமூக ஊடகங்களை ஆக்கிரமித்துள்ளன. பல உண்மை படங்களுடன் சில பழைய படங்கள், வீடியோக்களும் வைரலாக பரவி வருகின்றன. தற்போது காரில் உள்ள வீடியோவில் பதிவான காட்சி என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. நிலநடுக்கம் இரவில் ஏற்பட்டது. அதைத் தொடர்ந்து சிறிய அளவில் அதிர்வுகள் ஏற்பட்டன. ஆனால், இந்த வீடியோ பகலில் எடுக்கப்பட்டுள்ளது. சந்தேகத்தின் அடிப்படையில் இதை ஆய்வுக்கு எடுத்துக்கொண்டோம்.
வீடியோவை புகைப்படங்களாக மாற்றி கூகுள் ரிவர்ஸ் இமேஜ் தேடலில் பதிவேற்றித் தேடினோம். அப்போது துருக்கியில் பதிவான வீடியோ என்று செய்தி ஊடகங்கள் உள்பட பலரும் இந்த வீடியோவை பகிர்ந்திருந்தனர். இதனால், இந்த வீடியோ உண்மையானதாக இருக்கலாம் என்ற எண்ணம் ஏற்பட்டது. இருப்பினும் நிலநடுக்கம் இரவில் ஏற்பட்டது என்ற ஒரு விஷயம் நெருடலாக இருந்தது. எனவே, மாற்றி மாற்றி புகைப்படங்களை பதிவேற்றித் தேடினோம்.

உண்மைப் பதிவைக் காண: redrum.tokyo I Archive
அப்போது, ஜப்பான் மொழி இணையதளம் ஒன்றில் இந்த வீடியோ 2017ம் ஆண்டு பதிவிடப்பட்டிருப்பது தெரிந்தது. இதன் மூலம் இந்த வீடியோ 2023 துருக்கி நிலநடுக்க வீடியோ இல்லை என்பது தெளிவானது.
இந்த வீடியோ எங்கு, எப்போது எடுக்கப்பட்டது என்று அறிய தொடர்ந்து தேடினோம். நமக்குக் கிடைத்த இணையதள பக்கத்தில் இந்த வீடியோ யூடியூபில் பதிவேற்றம் செய்திருந்த இணைப்பை வைத்திருந்தனர். அதில், “மெட்ரோபாலிட்டன் எக்ஸ்பிரஸ்வே 6” என்று குறிப்பிட்டிருந்தனர். மேலும் அந்த வீடியோவில் தேதி, நேரம் ஆகியவை குறிப்பிடப்பட்டிருந்தது. மார்ச் 11, 2011ம் தேதி இந்த வீடியோ பதிவானதாகக் குறிப்பிடப்பட்டிருந்தது. தொடர்ந்து தேடிய போது, இது ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் எடுக்கப்பட்டது என்று தெரிந்தது.

நம்முடைய ஃபேக்ட் கிரஸண்டோ ஆங்கிலத்தில் இந்த வீடியோவை ஃபேக்ட் செக் செய்துள்ளனர். அதில், டோக்கியோவின் குறிப்பிட்ட சாலையின் புகைப்படத்தைக் கூகுள் மேப்பில் இருந்து எடுத்து வீடியோவின் காட்சியுடன் ஒப்பிட்டிருந்தனர். வீடியோ டோக்கியோவில் எடுக்கப்பட்டது என்பது அதில் தெளிவானது. இந்த ஆதாரங்கள் அடிப்படையில் நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட வீடியோ துருக்கியில் எடுக்கப்பட்டது இல்லை என்று உறுதி செய்யப்படுகிறது.
முடிவு:
2011ம் ஆண்டு ஜப்பானில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் போது பதிவான வீடியோவை 2023 துருக்கி நிலநடுக்க காட்சி என்று தவறாக சமூக ஊடகங்களில் பகிர்ந்து வருவதை தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில் ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.
சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…
Facebook I Twitter I Google News Channel

Title:துருக்கி நிலநடுக்கத்தின் அதிர்வை கார் கேமரா பதிவு செய்ததா?
Fact Check By: Chendur PandianResult: False
