நயினாரை சந்தித்தபின் அண்ணாமலையை விமர்சித்த சி.வி.சண்முகம் என்று பரவும் வீடியோ உண்மையா?

அரசியல் சார்ந்தவை | Political தமிழ்நாடு | Tamilnadu

தமிழ்நாடு பாஜக தலைவர் நயினார் நாகேந்திரனை சந்தித்துவிட்டு, முன்னாள் தலைவர் அண்ணாமலையை மிகக் கடுமையாக விமர்சித்த அ.தி.மு.க-வின் சி.வி.சண்முகம் என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive

நயினார் நாகேந்திரனும் அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகமும் இணைந்து எடுத்துக்கொண்ட புகைப்படத்துடன் சி.வி.சண்முகம் அளித்த பேட்டியை இணைத்து ஃபேஸ்புக்கில் பதிவிட்டுள்ளனர். அதில் அண்ணாமலையை பற்றி சி.வி.சண்முகம் மிகக் கடுமையாக பேசுகிறார். நிலைத் தகவலில், “நைனாரை சந்தித்த பின் ஆடு அண்ணாமலையை கழவி ஊற்றிய சிவி சண்முகம்..” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த வீடியோவை பலரும் சமூக ஊடகங்களில் பகிர்ந்து வருகின்றனர்.

உண்மை அறிவோம்:

தமிழ்நாடு பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன், அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகத்தை சமீபத்தில் சந்தித்ததாகச் செய்திகள் வெளியாகி இருந்தது. இந்த நிலையில் இந்த சந்திப்புக்குப் பிறகு தமிழ்நாடு பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை பற்றி சி.வி.சண்முகம் மிகவும் கடுமையாகப் பேசி பேட்டி அளித்ததாக ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது உண்மையா என்று அறிய ஆய்வு செய்தோம்.

வீடியோவில் ABP நாடு ஊடகத்தின் லோகோ உள்ளது. எனவே, சமீபத்தில் சி.வி.சண்முகம் பேட்டி ஏதும் அந்த ஊடகத்தில் வெளியாகி உள்ளதா என்று தேடிப் பார்த்தோம். ஆனால், அப்படி எந்த ஒரு வீடியோவும் நமக்குக் கிடைக்கவில்லை. எனவே, இது பழைய வீடியோவாக இருக்கலாம் என்ற சந்தேகத்தில் ஆய்வைத் தொடர்ந்தோம்.

ABP நாடு ஊடகத்தின் யூடியூப் பக்கத்தில் சி.வி.சண்முகம், அண்ணாமலை என்று சில அடிப்படை வார்த்தைகளைப் பயன்படுத்தித் தேடினோம். அப்போது, நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்டது போன்ற வீடியோவை அந்த ஊடகம் ஜூன் 13, 2023 அன்று வெளியிட்டிருப்பது தெரிந்தது. அந்த வீடியோவின் 2வது நிமிடத்தில் நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட ஃபேஸ்புக் பக்கத்திலிருந்த வீடியோ பகுதி இருந்தது. இதன் மூலம் தமிழ்நாடு பாஜக தலைவர் நயினார் நாகேந்திரனை சந்தித்த பிறகு அண்ணாமலையை விமர்சித்த சி.வி.சண்முகம் என்று பரவும் தகவல் தவறானது என்பது உறுதியாகிறது.

முடிவு:

2023ம் ஆண்டு சி.வி.சண்முகம் அளித்த பேட்டியை 2025ல் நயினார் நாகேந்திரன் தமிழக பாஜக தலைவரான பிறகு அவரை சந்தித்த பிறகு அளித்தது போன்று தவறாக பகிர்ந்திருப்பதை தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில் ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…

Facebook I X Post I Google News Channel I Instagram

Avatar

Title:நயினாரை சந்தித்தபின் அண்ணாமலையை விமர்சித்த சி.வி.சண்முகம் என்று பரவும் வீடியோ உண்மையா?

Written By: Chendur Pandian  

Result: False

Leave a Reply