கோ பேக் ஸ்டாலின் ஹேஷ்டேக் இந்திய அளவில் டிராண்ட் ஆவதை சமாளிக்க முடியாமல் தி.மு.க திணறல் என்று புதிய தலைமுறை செய்தி வெளியிட்டதாக ஒரு பதிவு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

அசல் பதிவைக் காண: Facebook I Archive

மு.க.ஸ்டாலின் படத்துடன் கூடிய புதிய தலைமுறை நியூஸ் கார்டு பகிரப்பட்டுள்ளது. அதில், "இந்திய அளவில் முதலாவதாக டிரெண்டாகும் ஸ்டாலினுக்கு எதிரான #GoBackStalin ஹேஷ்டேக். உலகிலேயே முதன்முறையாக சொந்த மாநில முதல்வரையே திரும்பப் போக சொல்லும் தர்மசங்கட நிகழ்வை சமாளிக்க முடியாமல் திமுக திணறல்" என்று இருந்தது.

இந்த பதிவை கப்ஸா கட்டுமரம் என்ற ஃபேஸ்புக் பக்கம் 2021 மே 30ம் தேதி பதிவிட்டிருந்தது. பலரும் இதை ஷேர் செய்து வருகின்றனர்.

உண்மை அறிவோம்:

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கோவையில் கொரோனா தடுப்பு மற்றும் சிகிச்சை பணிகளை ஆய்வு செய்ய சென்றார். இதைத் தொடர்ந்து கோ பேக் ஸ்டாலின் ட்விட்டரில் டிரெண்ட் ஆனது. வட இந்தியர்கள் அதிக அளவில் டிரெண்ட் செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இதைத் தொடர்ந்து வீ ஸ்டாண்ட் வித் ஸ்டாலின் என தி.மு.க-வினர் டிரெண்ட் செய்தனர். அது கோ பேக் ஸ்டாலினை பின்னுக்குத் தள்ளி முதலிடம் பிடித்தது.

இரு கட்சியினரும் மாறி மாறி ட்வீட் பதிவு வெளியிட்டு யார் பெரியவர் என்று ட்விட்டரில் சண்டை போட்டுக்கொண்ட விவகாரத்துக்குள் நாம் செல்லவில்லை. புதிய தலைமுறை வெளியிட்டதாக பலராலும் பகிரப்படும் நியூஸ் கார்டு உண்மையா என்று மட்டுமே ஆய்வு செய்தோம்.

இந்த நியூஸ் கார்டை பார்க்கும் போது புதிய தலைமுறை வெளியிட்டது போன்று இல்லை. எனவே, போலியானது என்பது தெரிந்தது. அதை உறுதி செய்ய முதலில் புதிய தலைமுறையில் மே 30, 2021 அன்று வெளியான நியூஸ் கார்டுகளை பார்த்தோம். அப்போது, கோ பேக் ஸ்டாலின் தொடர்பாக நியூஸ் கார்டு ஒன்று வெளியாகி இருந்தது. அதில், "ட்விட்டர் இந்தியா ட்ரெண்டிங்கில் கோ பேக் ஸ்டாலின் ஹேஷ்டேக் முதலிடம். கோவை, திருப்பூர், ஈரோடு மாவட்டங்களில் கொரோனா தடுப்புப் பணிகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் ஆய்வு மேற்கொண்டுள்ள நிலையில், ட்விட்டரில் இந்திய அளவில் #GoBackStalin என்ற ஹேஷ்டேக் முதலிடம் பிடித்துள்ளது. இந்த ஹேஷ்டேகில் முற்பகல் 11.30 மணி வரை 94.9கே ட்வீட்டுகள் பதிவு" என்று இருந்தது.

தி.மு.க திணறல் என்ற வகையில் அதில் குறிப்பிடவில்லை. உண்மையில் தி.மு.க திணறவும் இல்லை. கோ பேக் ஸ்டாலினை ஓரம்கட்டி வீ ஸ்டாணட் வித் ஸ்டாலின் என டிரெண்ட் செய்து பதிலடி கொடுத்துள்ளனர். அது உலக அளவில் டிரெண்ட் ஆனதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

இந்த நியூஸ் கார்டு அசல்தானா என்று புதிய தலைமுறை டிஜிட்டல் பிரிவு நிர்வாகி சரவணனைத் தொடர்புகொண்டு கேட்டோம். அவரும் இது போலியானது என்று உறுதி செய்தார்.

அசல் பதிவைக் காண: Facebook I Archive

கோ பேக் ஸ்டாலின் ஹேஷ்டேக் டிரெண்ட் ஆனது உண்மைதான். தி.மு.க-வினர் திணறினார்களா இல்லையா என்று நாம் ஆய்வு செய்யவில்லை. அவர்கள் திணறினார்கள் என்று பகிரப்படும் நியூஸ் கார்டு புதிய தலைமுறையால் வெளியிடப்பட்டது இல்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் தகவல் உண்மை என்றாலும் நியூஸ் கார்டு போலியானது என்று உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:

கோ பேக் ஸ்டாலின் ட்விட்டர் டிரெண்டை சமாளிக்க முடியாமல் தி.மு.க திணறுவதாக பரவும் புதிய தலைமுறை நியூஸ் கார்டு போலியானது என்பதை தகுந்த ஆதாரங்களுடன் ஃபேக்ட் கிரஸண்டோ உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

Avatar

Title:#GoBackStalin டிரெண்ட் சமாளிக்க முடியாமல் தி.மு.க திணறல் என்று புதிய தலைமுறை செய்தி வெளியிட்டதா?

Fact Check By: Chendur Pandian

Result: Altered