FACT CHECK: சுகன்யா திட்டத்தில் ஆண்டுக்கு ரூ.1000 செலுத்தினால் ரூ.6 லட்சம் கிடைக்குமா?

இந்தியா | India சமூக ஊடகம் | Social சமூகம்

எஸ்.பி.ஐ வங்கியில் சுகன்யா சம்ரிதி யோஜனா திட்டத்தின் கீழ் பெண் குழந்தை பெயரில் கணக்கு தொடங்கி ஆண்டுக்கு 1000 ரூபாய் வீதம், 14 ஆண்டுகள் செலுத்தினால் 21 வயதாகும் போது ரூ.6 லட்சம் கிடைக்கும் என்று ஒரு பதிவு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது உண்மையா என்று ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

அசல் பதிவைக் காண: Facebook I Archive

ஃபேஸ்புக் பதிவு ஒன்று வைரலாக பகிரப்பட்டு வருகிறது. அதில், “Thanks to SBI, ஒன்றுமுதல் பத்து வயது பெண் குழந்தை பாக்கியம் பெற்வர்களுக்கு ஆனந்த செய்தி. உங்கள் அருகாமையில் உள்ள ஸ்டேட் பேங்கில் சென்று சுகன்யா யோஜனா திட்டத்தில் வருஷத்துக்கு ஆயிரம் வீதம் கட்டி வந்தால் அந்த பெண்ணின்15ம் வயது துவக்க நாளில் ரூபாய் ஆறு லட்சங்கள் கிடைக்கும். ஒரு வயது பெண் குழந்தைகள் முதல் 10 வயது பூர்த்தியடையாத பெண்குழந்தைகள் உள்ளவர்அருகில் உள்ள ஸ்டேட் வங்கிக்கு உடனே செல்லுங்கள்.அருகில் உள்ள பெண்குழந்தைகள் உள்ள  பெண்களுக்கு  இந்த விஷயத்தை உடனே  தெரிவியுங்கள். நன்றி!!!

“STATE BANK OF INDIA” have introduced new scheme called “Sukanya Yojana” In this they have mentioned Any person having daughter from age 1 to 10, They have to pay Rs.1000/- per year, after 14 years, meaning in 14 years after paying 14000 when daughter will become 21 years old a person will have Rs.600000/-. Forward this message to all your relatives. Government has implemented this scheme all over in India. Only for Girl Always share good information to others.

இதை அனைவருக்கும் பகிருங்கள் பயன்பெறுங்கள் பயனடையச் செய்யுங்கள்…!!!” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த பதிவை மயிலை போஸ்ட் என்ற ஃபேஸ்புக் பக்கத்தில் Siva Subramanian என்பவர் 2021 ஆகஸ்ட் 27 அன்று பதிவிட்டுள்ளார். இவரைப் போல பலரும் இதை பதிவிட்டும் ஷேர் செய்தும் வருகின்றனர்.

உண்மை அறிவோம்:

சில ஆண்டுகளுக்கு முன்பு சுகன்யா சம்ரிதி யோஜனா என்ற செல்வமகள் திட்டம் அறிமுகம் ஆனது. அப்போது இருந்தே இது தொடர்பான சில தவறான தகவல்கள் சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இத்திட்டத்தில் ஆண்டுக்கு 1000ம் வீதம் 14 ஆண்டுகள் செலுத்தினால் 21 வயதில் ரூ.6 லட்சம் கிடைக்கும் என்று குறிப்பிட்டுள்ளனர். இது தெளிவற்றதாக உள்ளது. வெறும் 14 ஆயிரம் ரூபாய் செலுத்தினால் 6 லட்ச ரூபாய் கிடைக்கும் என்று குறிப்பிட்டிருப்பது மக்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தும் வகையில் உள்ளது. இது உண்மையா என்று ஆய்வு செய்தோம்.

அசல் பதிவைக் காண: nsiindia.gov.in I Archive

மத்திய அரசு வெளியிட்ட சுகன்யா சம்ரிதி திட்டத்தின் விவரங்களைப் பார்த்தோம்.  என்று மத்திய அரசின் நேஷனல் சேவிங் இன்ஸ்டிடியூட் வெளியிட்ட தகவல் அடிப்படையில், 

எஸ்.பி.ஐ வங்கியில் மட்டுமல்ல… நாடு முழுக்க உள்ள தபால் நிலையங்கள், அங்கீகரிக்கப்பட்ட வங்கிக் கிளைகளில் இத்திட்டத்தை தொடங்கலாம். 

10 வயதுக்கு உட்பட்ட பெண் குழந்தை பெயரில் மட்டுமே தொடங்க முடியும். 

ஒரு குழந்தை பெயரில் ஒரு கணக்கு மட்டுமே தொடங்க முடியும். 

ஒரு குடும்பத்தில் இரண்டு பெண் குழந்தைகள் பெயரில் மட்டுமே இந்த கணக்கைத் தொடங்க முடியும்.

ஆண்டுக்கு குறைந்த பட்சம் ரூ.250 முதல் அதிக பட்சமாக ரூ.1.5 லட்சம் வரை மட்டுமே டெபாசிட் செய்ய முடியும்.

கல்விக் கட்டண தேவைக்காக இந்த கணக்கை முடித்துக்கொள்ளலாம்.

கணக்கு தொடங்கப்பட்ட பெண் குழந்தைக்கு திருமணம் முடிந்துவிட்டால் வங்கிக் கணக்கு நிரந்தமாக மூடப்படும்.

வங்கிக் கணக்கு தொடங்கப்பட்டதிலிருந்து 21 ஆண்டுகள் நிறைவடையும் போதே பணம் முதிர்வு அடையும்.

அசல் பதிவைக் காண: sbi.co.in I Archive

இந்த பணம் டெபாசிட் மற்றும் வட்டிக்கு வருமான வரி விலக்கு உண்டு என்று குறிப்பிடப்பட்டு இருந்தது. இந்த திட்டம் தொடர்பாக பல ஊடகங்களிலும் விரிவான செய்தி வெளியாகி இருப்பதைக் காண முடிந்தது. தமிழ் சமயம் வெளியிட்டிருந்த செய்தி ஒன்றில் மாதம் ரூ.1000ம் செலுத்தி ரூ.5 லட்சம் வரை லாபம் ஈட்டுங்கள் என்று குறிப்பிட்டிருந்தனர். எந்த ஊடகத்திலும் ஆண்டுக்கு 1000ம் செலுத்தினால் 6 லட்சம் கிடைக்கும் என்று கூறவில்லை.

அசல் பதிவைக் காண: samayam.com I Archive 1 I bbc.com I Archive 2

படம்: லலிதா ஜெயபாலன், நிதி ஆலோசகர்

இது தொடர்பாக மணிவேதம் (moneyvedam.com) என்ற நிறுவனத்தின் நிதி ஆலோசகர் லலிதா ஜெயபாலனைத் தொடர்புகொண்டு கேட்டோம். அவர் இந்த தகவல் தவறானது. லைக்ஸ் கிடைக்க வேண்டும் என்பதற்காக இப்படி வதந்தியைப் பரப்பியுள்ளனர். ஆண்டுக்கு ரூ.1000ம் செலுத்தினால் 15 ஆண்டுகள் வரை செலுத்த வேண்டும். இவர்கள் கூறியது போல் 15வது ஆண்டில் பணம் முதிர்வு அடைந்துவிடாது. 21 ஆண்டுகள் ஆகும்” என்றார்.

ஆண்டுக்கு ரூ.1000ம் செலுத்தினால், குழந்தைக்கு 21 வயது ஆகும் போது 6 லட்ச ரூபாய் கிடைக்குமா என்பதை அறிய எஸ்.பி.ஐ வங்கிக் கிளையைத் தொடர்புகொண்டு கேட்டோம். அவர்கள் இது தவறான செய்தி என்று கூறினர். மேலும் வங்கிக் கிளைக்கு நேரில் வந்தால் இது தொடர்பாக விரிவாக விளக்கம் அளிப்பதாக கூறினர். எனவே, சுகன்யா சம்ரிதி திட்டத்தில் இணைவது போல் வங்கிக்குச் சென்று விவரத்தை கேட்டோம். அப்போது நாம் மேலே குறிப்பிட்ட விஷயங்களை தெரிவித்தனர்.

சுகன்யா திட்ட கால்குலேட்டர்: groww.in I hdfcbank.com

ஆண்டுக்கு 1000ம் ரூபாய் டெபாசிட் செய்தால் எவ்வளவு கிடைக்கும் என்பதை இணையத்தில் உள்ள சுகன்யா சம்ரிதி யோஜனா கால்குலேட்டர் அடிப்படையில் கணக்கிட்டு நம்மிடம் தெரிவித்தனர். அதன்படி, “ஆண்டுக்கு 1000ம் ரூபாய் செலுத்துகிறோம் என்றால், 15 ஆண்டுகளுக்கு நாம் செலுத்த வேண்டும். 21 ஆண்டு முடியும் போது நம்முடைய மொத்த முதலீடு என்பது 15 ஆயிரமாக இருக்கும். வட்டியாக ரூ.27,434 கிடைக்கும். மொத்தம் 42,434 ரூபாய் கிடைக்கும் என்றனர். 2021ம் ஆண்டு வங்கிக் கணக்கு தொடங்கினால் 2042ம் ஆண்டு இத்திட்டம் முதிர்வடையும். அப்போதுதான் ரூ.42,434 கிடைக்கும்” என்றனர்.

6 லட்ச ரூபாய் கிடைக்க வேண்டும் என்றால் ஆண்டுக்கு எவ்வளவு முதலீடு செய்ய வேண்டும் என்று கேட்டோம். ஆண்டுக்கு ரூ.14,500 செலுத்த வேண்டும். 15 ஆண்டுகள் நாம் செலுத்தும் முதலீடு ரூ.2,17,500 ஆக இருக்கும். இதற்கு வட்டியாக ரூ.3,97,798 கிடைக்கும். 2042ம் ஆண்டு இத்திட்டம் முதிர்வடையும் போது ரூ.6,15,298 கிடைக்கும். இந்த வட்டிக்கு நீங்கள் வருமான வரி செலுத்த வேண்டியது இல்லை” என்றனர்.

இதன் மூலம் ஆண்டுக்கு 1000ம் வீதம் 14 ஆண்டுகள் பணம் செலுத்தினால் 15வது ஆண்டில் ரூ.6 லட்சம் கிடைக்கும் என்று பகிரப்படும் தகவல் தவறானது என்று உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:

செல்வ மகள் திட்டத்தின் கீழ் எஸ்.பி.ஐ வங்கியில் ஆண்டுக்கு ரூ.1000ம் செலுத்தினால் 15வது ஆண்டில் ரூ.6 லட்சம் கிடைக்கும் என்று பரவும் தகவல் தவறானது என்பதை தகுந்த ஆதாரங்களுடன்  ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…

Facebook I Twitter I Google News Channel

Avatar

Title:சுகன்யா திட்டத்தில் ஆண்டுக்கு ரூ.1000 செலுத்தினால் ரூ.6 லட்சம் கிடைக்குமா?

Fact Check By: Chendur Pandian 

Result: False