FACT CHECK: பாலில் இருமல் மருந்தை கலந்தால் விஷமாக மாறுமா?- விபரீதமான பதிவு

சமூக ஊடகம் தமிழ்நாடு மருத்துவம் I Medical

பாலில் இருமல் மருந்தை கலந்ததால் நான்கு குழந்தைகள் மரணமடைந்துவிட்டார்கள் என்று ஒரு பதிவு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

அசல் பதிவைக் காண: Facebook I Archive

போஸ்டர் போல ஒட்டப்பட்ட ஒரு தகவலை புகைப்படம் எடுத்து பதிவிட்டுள்ளனர். அதில், எச்சரிக்கை! எச்சரிக்கை!! சென்னை அருகே ஒரு கணவன் மனைவிக்கு நான்கு குழந்தைகள் இருந்துள்ளனர். ஒரு நாள் குழந்தைகளுக்கு இருமல் அதிகமாக இருந்ததால் அருகில் உள்ள மருந்து கடையில் இருமல் டானிக் வாங்கி வந்து குழந்தைகளுக்கு கொடுத்துள்ளார். அவர்கள் அந்த டானிக் கசப்பதாக கூறியதால் உடனே அந்த தாய் இருமல் மருந்தை பாலில் கலந்து 4 குழந்தைகளுக்கும் கொடுத்துள்ளார். காலையில் நான்கு குழந்தைகளும் படுக்கையில் இறந்து கிடந்தன. இது கதை அல்ல நிஜம். எனவே அனைவரும் மிகவும் எச்சரிக்கையாக நடந்து கொள்ளுங்கள்

இருமல் டானிக் பாலில் கலந்தால் விஷமாகி விடும் என எல்லாம் முடிந்த பின் டாக்டர்கள் தெரிவித்துள்ளனர். நீங்களும் அந்த டாக்டரை போல் உயிர்ப்பலி ஆகும் வரை காத்திருக்க வேண்டாம். இதனை உங்களுக்கு வேண்டிய வேண்டாத அனைவருக்கும் தெரியப்படுத்துங்கள். அதாவது இருமல் டானிக் பாலில் கலந்தால் அது விஷம் அதனை யாரும் எப்போதும் கொடுக்கக் கூடாது. சொல்லிவிட்டீர்களா? மிக்க நன்றி” என்று இருந்தது.

இந்த பதிவை Abinesh Abi என்ற ஃபேஸ்புக் ஐடி கொண்ட நபர் 2021 ஆகஸ்ட் 28 அன்று பதிவிட்டுள்ளார். பலரும் இதை ஷேர் செய்து வருகின்றனர்.

உண்மை அறிவோம்:

சென்னையில் பாலில் டானிக் கலந்து குடித்த நான்கு குழந்தைகள் உயிரிழந்ததாக பகிரப்பட்டுள்ளது. ஆனால் சென்னையில் எந்த இடத்தில் நடந்தது, எப்போது நடந்தது என்று குறிப்பிடவில்லை. சில வாரங்களுக்கு முன்பு சென்னையில் கூல் டிரிங்ஸ் குடித்த சிறுமி உயிரிழந்தது பரபரப்பை ஏற்படுத்தியது. பாலில் டானிக் கலந்து கொடுத்ததால் நான்கு குழந்தைகள் உயிரிழந்திருந்தால் அது மிகப்பெரிய செய்தியாக வந்திருக்கும். ஆனால், அப்படி எந்த ஒரு செய்தியும் நமக்கு கிடைக்கவில்லை. அதே நேரத்தில் சென்னையில் நான்கு குழந்தைகள் உயிரிழந்ததாக வதந்தி பரவி வருகிறது என்று 2019ம் ஆண்டு வெளியான சில செய்திகள் நமக்கு கிடைத்தன.

அசல் பதிவைக் காண: dtnext.in I Archive

பலரும் சாப்பிட்டு முடித்த உடன் மாத்திரை, மருந்து, டானிக் உள்ளிட்டவற்றை எடுப்பது வழக்கம். குழந்தைகள் குறிப்பாக தாய்ப்பால் அருந்தும் குழந்தைகளுக்கு கூட பால் அருந்தியதும் டானிக் கொடுக்கப்படவது வழக்கமாக உள்ளது. பால் குடித்த ஒரு சில நிமிடங்களில் டானிக் கொடுக்கப்படுகிறது. அப்படி என்றால் வயிற்றில் அவை இரண்டும் கலக்கும் போது விஷமாக மாறியிருக்க வேண்டுமே என்ற கேள்வி எழுந்தது. 

இது குறித்து பல்வேறு ஊடகங்களிலும் மருத்துவ கட்டுரைகளை எழுதி வரும் மருத்துவர் கு.கணேசனைத் தொடர்புகொண்டு கேட்டோம். அதற்கு அவர், “பாலில் இருமல் டானிக் கலந்தால் விஷமாகிவிடும் என்பது தவறான தகவல். பாலில் டானிக் கலந்தால் அது, பால் திரிந்துவிடும். பால் திரியாமல் குழந்தைகளுக்கு கொடுத்தாலும் கூட வாந்தி, வயிற்றுப் போக்கு போன்ற பாதிப்புகள் ஏற்படலாம். அப்படி எந்த பாதிப்பும் இல்லாமல் உயிரிழப்பு ஏற்படும் என்பது எல்லாம் சாத்தியமே இல்லை.

படம்: டாக்டர் கு கணேசன்

சமூக ஊடகங்களில் யாரோ வதந்தி பரப்பியுள்ளனர். நன்மை செய்வதாக கருதி மக்களும் இதை ஷேர் செய்துள்ளனர். உண்மையில் இப்படி நிகழ வாய்ப்பில்லை. இருமல், காய்ச்சல் உள்ள குழந்தைகளுக்கு பால் புகட்டிய உடனேயே மாத்திரை, மருந்து வழங்குவது வழக்கம். பாலில் இருமல் மருந்து கலந்தால் அது விஷம் ஆகிவிடும் என்றால், பால் குடித்த சில நிமிடங்களில் இருமல் மருந்து குடிக்கும் போது வயிற்றுக்குள் இந்த இரண்டும் கலக்கும் போதும் விஷமாக மாற வேண்டுமே! இந்த புரிதல் இருந்திருந்தால் யாரும் இதை ஷேர் செய்திருக்க மாட்டார்கள்.

குழந்தைகளுக்கு உடல் நலக் குறைவு என்றால் மருத்துவ ஆலோசனை பெற வேண்டும். சுய மருத்துவம் கூடாது. டாக்டர் பரிந்துரைத்த மருந்துகளை, எப்போது, எப்படி எடுக்க வேண்டும் என்று அவர் வழங்கிய வழிகாட்டுதல் அடிப்படையில் மட்டுமே எடுக்க வேண்டும்” என்றார். 

இதன் மூலம் பாலில் டானிக் கலப்பதன் மூலம் பால் விஷமாக மாறிவிட்டது என்று பகிரப்படும் தகவல் தவறானது என்று உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:

சென்னையில் பாலில் டானிக் கலந்து கொடுத்ததால் நான்கு குழந்தைகள் உயிரிழந்தனர் என்று பரவும் தகவல் தவறானது என்பதை தகுந்த ஆதாரங்களுடன்  ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…

Facebook I Twitter I Google News Channel

Avatar

Title:பாலில் இருமல் மருந்தை கலந்தால் விஷமாக மாறுமா?- விபரீதமான பதிவு

Fact Check By: Chendur Pandian 

Result: False

1 thought on “FACT CHECK: பாலில் இருமல் மருந்தை கலந்தால் விஷமாக மாறுமா?- விபரீதமான பதிவு

  1. How come I will know what’s posted is true or false. If it’s a false msg why fb.watch not deleting.

Comments are closed.