
பிரதமர் மோடி புயல் பாதிப்பை பார்வையிட, ராகுல் காந்தியோ சமோசா சாப்பிட்டுக் கொண்டிருக்கிறார் என்பது போன்று இரு புகைப்படங்களை இணைத்து சமூக ஊடகங்களில் ஒரு பதிவு பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:

அசல் பதிவைக் காண: Facebook I Archive
சமீபத்தில் குஜராத்தில் ஏற்பட்ட புயல் பாதிப்பை பிரதமர் மோடி பார்வையிடும் புகைப்படம் மற்றும் ஹெலிகாப்டரில் ராகுல் காந்தி சமோசா சாப்பிடும் புகைப்படம் ஆகியவை ஒன்றாக சேர்த்து பதிவிடப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “பேசும் படம்” என்று மட்டும் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த பதிவை எம் ஆர் காந்தி ஆதரவாளர்கள் என்ற ஃபேஸ்புக் பக்கம் 2021 மே 22ம் தேதி பதிவிட்டுள்ளது.
உண்மை அறிவோம்:
டவ்தே புயல் காரணமாக குஜராத்தில் ஏற்பட்ட பாதிப்புகளை பிரதமர் மோடி ஆய்வு செய்த புகைப்படம் பகிரப்பட்டுள்ளது. ஒக்கி, கஜா புயல் தமிழகத்தை தாக்கிய போது வராத பிரதமர், நிவாரண நிதியை போதுமான அளவில் தராத பிரதமர் குஜராத்துக்கு மட்டும் விரைவாக ஆய்வுக்கு சென்று 1000 கோடி ரூபாய் நிவாரணம் வழங்கியது பற்றி பல்வேறு விமர்சனங்கள் எழுந்தன.
இந்த நிலையில் பிரதமர் ஆய்வு செய்த புகைப்படத்துடன், ஹெலிகாப்டரில் ராகுல் காந்தி சமோசா சாப்பிடும் படம் பகிரப்பட்டுள்ளது. இதன் மூலம் மோடி மிகத் தீவிரமாக சேதங்களை மதிப்பிடுவது போன்றும், ஆனால் ராகுல் காந்தி சமோசா சாப்பிட்டு பொழுது போக்குவது போலவும் அர்த்தம் கொள்ளும் வகையில் பதிவிடப்பட்டுள்ளது.
மோடி ஆட்சி அதிகாரத்தின் உச்சத்தில் பிரதமராக உள்ளார். அவர் வெள்ள சேதத்தை ஆய்வு செய்வது சரியானது. ஆனால், எதிர்க்கட்சித் தலைவராகக் கூட இல்லாத, தங்கள் கட்சி ஆட்சியில் இல்லாத மாநிலத்தில் ராகுல் காந்தி வெள்ள சேதத்தை ஆய்வு செய்து என்ன செய்யப் போகிறார். ராகுல் காந்தி இவ்வளவு சேதம் என்று மதிப்பிட்டு கூறினால் அதை ஏற்று பா.ஜ.க அரசு நிதி ஒதுக்குமா என்பது சந்தேகமே. இந்த சூழலில் ஏன் மோடியை ராகுல் காந்தியுடன் ஒப்பிட்டார்கள் என்று தெரியவில்லை.
சரி இந்த புகைப்படம் குஜராத் புயல் சேதத்தை ராகுல் காந்தி ஆய்வு செய்த போது எடுக்கப்பட்டதா என்று பார்த்தால் அதுவும் இல்லை. இது 2019ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தல் பிரசாரத்தின் போது எடுக்கப்பட்ட படம். தேர்தல் பிரசாரத்துக்கு இடைவிடாமல் பயணம் மேற்கொள்வதால் ஹெலிகாப்டரில் பயணிக்கும் நேரத்தில் உணவு உட்கொள்வதாக ராகுல் காந்தி 2019ம் ஆண்டு வீடியோ வெளியிட்டிருந்தார்.
அப்போது கூட வெள்ள சேதத்தை பார்வையிட வந்த ராகுல் காந்தி சமோசா சாப்பிட்டார் என்று எதிர் தரப்பினர் வதந்தி பரப்பினர். இது வெள்ள சேதத்தை பார்வையிட்ட போது இல்லை, தேர்தல் பிரசாரத்தின் போது எடுக்கப்பட்டது என்று அப்போதே கட்டுரை வெளியிட்டிருந்தோம். அந்த கட்டுரையைக் காண இங்கே கிளிக் செய்யுங்கள்.
இப்போது எந்த ஒரு தகவலையும் அளிக்காமல், ஒருவர் புயல் சேதத்தை ஆய்வு செய்வது போலவும், மற்றொருவர் புயல் சேதத்தை ஆய்விட வந்துவிட்டு சாப்பிடுவது போலவும் படத்தை வைத்து தவறான புரிதலை மக்கள் மத்தியில் ஏற்படுத்தும் வகையில் பதிவிட்டுள்ளனர். பதிவை வெளியிட்டவர்கள், பிரதமர் மோடி படம் டவ்தே புயல் பாதிப்பை ஆய்வு செய்த போது எடுத்தது என்றும் ராகுல் காந்தி படம் 2019ம் ஆண்டு மத்திய பிரதேசத்தில் தேர்தல் பிரசாரத்தின் போது எடுக்கப்பட்டது என்றும் குறிப்பிட்டிருக்க வேண்டும். ஆனால் புகைப்படங்கள் எப்போது எடுக்கப்பட்டன என்ற விவரத்தை மறைத்து தவறான அர்த்தம் புரிந்துகொள்ளும் வகையில் பதிவிட்டிருப்பது உறுதி செய்யப்படுகிறது.
முடிவு:
பிரதமர் மோடி குஜராத்தில் புயல் பாதிப்பை ஆய்வு செய்த படத்தை ராகுல் காந்தி தேர்தல் பிரசாரத்தின் போது சாப்பிட்ட படத்துடன் ஒப்பிட்டு தவறான அர்த்தம் ஏற்படும் வகையில் பதிவிடப்பட்டிருப்பதை ஃபேக்ட் கிரஸண்டோ உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

Title:மோடி புயல் சேதத்தை பார்வையிட, ராகுல் சமோசா சாப்பிட்டாரா?
Fact Check By: Chendur PandianResult: Missing Context
