FACT CHECK: எடப்பாடி பழனிசாமி அரசு வீட்டை காலி செய்ய மறுப்பது அழகல்ல என்று ஸ்டாலின் கூறினாரா?

அரசியல் சமூக ஊடகம் தமிழ்நாடு

முதல்வர் பதவியை விட்டு மக்கள் துரத்திய பின்னும் அரசு வீட்டை காலி செய்ய மறுப்பது பழனிசாமிக்கு அழகல்ல என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியதாக ஒரு நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்

அசல் பதிவைக் காண: Facebook I Archive

முதல்வர் மு.க.ஸ்டாலின் புகைப்படத்துடன் கூடிய புதிய தலைமுறை பிரேக்கிங் நியூஸ் கார்டு ஒன்று பகிரப்பட்டுள்ளது. அதில், “முதல்வர் பதவியை விட்டு மக்கள் துரத்திய பின்னும் அரசு வீட்டை காலி செய்ய மறுப்பதும், கெஞ்சுவதும் பழனிசாமிக்கு அழகல்ல – முதல்வர் மு.க.ஸ்டாலின்” என்று இருந்தது. 

நிலைத் தகவலில், “அசிங்கப்பட்டான் பருப்பு திருடன்” என்று குறிப்பிடப்பட்டு இருந்தது. இந்த பதிவை மே 22, 2021 அன்று Jaya Murugan என்பவர் தன்னுடைய ஃபேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டிருந்தார். பலரும் இதை ஷேர் செய்து வருகின்றனர்.

உண்மை அறிவோம்:

முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தான் தங்கியிருந்த அரசு பங்களாவை காலி செய்ய மறுப்பதாக செய்தி வெளியானது. எதிர்க் கட்சித் தலைவர் என்ற முறையில் தான் வசித்து வந்த அரசு பங்களாவிலேயே தொடர்ந்து தங்க தன்னை அனுமதிக்க வேண்டும் என்று அவர் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்ததாக அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டு இருந்தது.

அசல் பதிவைக் காண: news7tamil.live I Archive

அதைத் தொடர்ந்து எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள அரசு பங்களாவில் தொடர்ந்து தங்க தமிழக அரசு அனுமதி வழங்கியதாக செய்தி வெளியானது. அந்த செய்திகளில் அரசு பங்களா ஒதுக்கீடு செய்வது முதல்வரின் விருப்பத்துக்கு உட்பட்டது. மு.கருணாநிதியின் உடலை அடக்கம் செய்ய மெரினாவில் இடம் மறுத்த பழனிசாமிக்கு மு.க.ஸ்டாலின் அரசு பங்களாவில் தொடர்ந்து தங்க அனுமதி அளித்து தன்னுடையை பெருந்தன்மையை வெளிப்படுத்தியுள்ளார் என்று குறிப்பிடப்பட்டு இருந்தது.

பழனிசாமி பங்களாவை காலி செய்யவில்லை என்று மு.க.ஸ்டாலின் விமர்சித்திருந்தால் இப்படியான செய்தியை ஊடகங்கள் வெளியிட்டிருக்காது.

அசல் பதிவைக் காண: Facebook I Archive 1 I oneindia.com I Archive 2

ஆனால் துளியும் சம்பந்தம் இல்லாமல் எடப்பாடி பழனிசாமி அரசு பங்களாவை காலி செய்ய மறுத்து கெஞ்சுவது அழகல்ல என்று மு.க.ஸ்டாலின் விமர்சித்ததாக நியூஸ் கார்டு பகிரப்பட்டு வருகிறது. இந்த நியூஸ் கார்டின் தமிழ் ஃபாண்ட் வழக்கமாக புதிய தலைமுறை வெளியிடும் ஃபாண்ட் இல்லை. எனவே, இது போலியானது என்பது தெரிந்தது. இதை உறுதி செய்வதற்கான ஆய்வை மேற்கொண்டோம்.

முதலில், புதிய தலைமுறை மே 22, 2021 அன்று வெளியிட்ட நியூஸ் கார்டுகளை பார்வையிட்டோம். அதில், மு.க.ஸ்டாலின் புகைப்படத்துடன் கூடிய நியூஸ் கார்டுகள் பல இருந்தன. ஆனால் எதிலும் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமியை விமர்சித்ததாக இல்லை. புதிய தலைமுறை வெளியிட்டிருந்த நியூஸ் கார்டில், “தமிழகத்தில் மே 24ஆம் தேதி முதல் எவ்வித தளர்வுகளும் இன்றி ஒரு வாரம் ஊரடங்கு – முதல்வர் மு.க.ஸ்டாலின்” என்று இருந்தது

அதே நேரத்தில் நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்டது போன்ற உண்மையான நியூஸ் கார்டுகள் வெளியாவதற்கு முன்பே, எடப்பாடி பழனிசாமிக்கு அரசு இல்லம் ஒதுக்கப்பட்டதாக புதிய தலைமுறை செய்தி வெளியிட்டிருப்பது தெரிந்து.

இதன் மூலம் திட்டமிட்டு விஷமத்தனமாக இந்த நியூஸ் கார்டு உருவாக்கப்பட்டிருப்பது தெரிந்தது. மேலும், புதிய தலைமுறை டிஜிட்டல் பிரிவைத் தொடர்புகொண்டு கேட்டபோது இது போலியான நியூஸ் கார்டு என்று உறுதி செய்தனர். 

இதன் அடிப்படையில், அரசு இல்லத்தை காலி செய்ய மறுப்பது பழனிசாமிக்கு அழகல்ல என்று மு.க.ஸ்டாலின் கூறியதாக பரவும் நியூஸ் கார்டுகள் போலியானது என்று உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:

அரசு பங்களாவை காலி செய்ய மறுப்பது எடப்பாடி பழனிசாமிக்கு அழகல்ல என்று மு.க.ஸ்டாலின் கூறியதாக பரவும் நியூஸ் கார்டு போலியானது என்பதை தகுந்த ஆதாரங்களுடன் ஃபேக்ட் கிரஸண்டோ உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

Avatar

Title:FACT CHECK: எடப்பாடி பழனிசாமி அரசு வீட்டை காலி செய்ய மறுப்பது அழகல்ல என்று ஸ்டாலின் கூறினாரா?

Fact Check By: Chendur Pandian 

Result: False

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

Leave a Reply