வள்ளலாரின் உண்மையான புகைப்படம் இதுவா?

சமயம் சமூக ஊடகம் | Social தமிழ்நாடு | Tamilnadu

ஃபேஸ்புக்கில் பொறையார் சிதம்பரம் சுவாமிகள் என்ற அடிக்குறிப்போடு வடலூர் வள்ளலார் இராமலிங்க அடிகளாரின் புகைப்படம் என்று ஒரு படம் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. அது பற்றி ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive

பழைய புகைப்படம் பகிரப்பட்டுள்ளது. புகைப்படத்துக்கு கீழே கையால் எழுதிய பதிவு உள்ளது. அதில், “காரணப்பட்டு சமரச பஜனை, கந்தசாமி பிள்ளை மாணவர் நாகை அட்டவணை இரத்தினம் பிள்ளை, பொறையார் சிதம்பரம் சுவாமிகள் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. ஆனால், நிலைத் தகவலில், “கையில் குடையுடன் இருப்பவர் அருட்பிரகாச வள்ளலார் இராமலிங்கம் அடிகளார்” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த பதிவை amilselvi Lakshmanan என்ற ஃபேஸ்புக் ஐடி கொண்டவர் மே 28, 2022 அன்று வெளியிட்டிருந்தார். இவரைப் போல பலரும் இதை தங்கள் ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டு வருகின்றனர்.

உண்மை அறிவோம்:

வள்ளலார் காலம் என்பது 1823 முதல் 1874 வரையாகும். 1844ல் புகைப்பட கருவி விற்பனைக்கு வந்த உடனேயே, இந்தியாவிலும் விற்பனைக்கு வந்துவிட்டதாக வரலாறு கூறுகிறது. இதன் மூலம் வள்ளலார் காலத்திலேயே புகைப்பட கருவி இந்தியாவுக்கு வந்துவிட்டது என்பதை அறியலாம். ஆனால், புகைப்பட கருவி மூலம் வள்ளலாரின் உருவம் படம் பிடிக்கப்பட்டதாக எந்த செய்தியும் இல்லை. இது தொடர்பாக தேடிய போது, வள்ளலாரின் காலத்தில் ஓவியமாக அவர் உருவம் தீட்டப்பட்டதாக செய்தி கிடைத்தது. அந்த ஒன்று மட்டும்தான் நேரடியாக வரையப்பட்டது என்று குறிப்பிட்டு சில பதிவுகள் கிடைத்தன.

நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட புகைப்படத்தில், புகைப்படத்தில் இருப்பவர்கள் யார் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால், ஃபேஸ்புக்கில் பலரும் படத்தில் குடையுடன் இருப்பவர் வள்ளலார் என்று குறிப்பிட்டு வருகின்றனர். கமெண்ட் பகுதியில் படத்தில் இருப்பது பொறையார் சிதம்பரம் சுவாமிகள் என்று குறிப்பிடப்பட்டுள்ளது, தவறான தகவலை பகிர வேண்டாம் என்று குறிப்பிட்டிருந்தனர்.

உண்மைப் பதிவைக் காண: Facebook I vallalarr.blogspot.com I Archive 1

இந்த படம் தொடர்பாக கூகுள், ஃபேஸ்புக் உள்ளிட்ட பல தளங்களில் தேடிப் பார்த்தோம். அப்போது, பல படத்தில் இருப்பவர் வள்ளலாரின் சீடரான காரணப்பட்டு கந்தசாமிபிள்ளையின் மாணவர் அட்டவணை ரத்தினம் பிள்ளை எனப்படும் பிறையாறு சிதம்பரம் சுவாமிகள் என்று குறிப்பிட்டு சில பதிவுகள் வெளியாகி இருப்பதை காண முடிந்தது. சன்மார்க்கம் வளர்த்த சாதுக்கள் வரலாறு என்ற ஃபேஸ்புக் பக்கத்தில் படத்தில் இருப்பது காரணப்பட்டு கந்தசாமி அய்யா, பொறையார் சிதம்பரம் சுவாமிகள் என்று குறிப்பிட்டு பதிவிட்டிருந்தனர். இவை எல்லாம் படத்தில் இருப்பது வள்ளலார் இல்லை, பொறையார் சிதம்பரம் சுவாமிகள் என்பதை உறுதி செய்தன. 

இது தொடர்பாக வள்ளலார் என்று பிளாக் தளத்தை நடத்தி வருபவரும், வள்ளலாளர் தொடர்பான பதிவுகளை தொடர்ந்து வெளியிட்டு வருபவருமான வள்ளலார் ராமலிங்கத்தை தொடர்புகொண்டு கேட்டோம். அவருக்கு நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட பதிவை அவருடைய வாட்ஸ் அப் எண்ணுக்கு அனுப்பினோம். அதற்கு அவர், “வள்ளற்பெருமானின் புகைப்படம் என இவ்வுலகில் ஏதுமில்லை. சில விஷமிகள் இவ்வாறு வெளியிடுகிறார்கள்” என்று தெரிவித்தார். இதன் அடிப்படையில் வள்ளலாரின் புகைப்படம் என்று பகிரப்படும் படம் தவறானது என்று உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:

வள்ளலாரின் உண்மை புகைப்படம் என்று வள்ளலாரின் நேரடி சீடரின், மாணவருடைய புகைப்படம் தவறாக பகிரப்பட்டு வருவதை தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில்  ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…

Facebook I Twitter I Google News Channel

Avatar

Title:வள்ளலாரின் உண்மையான புகைப்படம் இதுவா?

Fact Check By: Chendur Pandian 

Result: Missing Context