
தேர்தலில் தி.மு.க-வின் உதயசூரியன் சின்னத்துக்கு வாக்களிக்கும்படி தமிழக வெற்றிக்கழக தலைவரும் நடிகருமான விஜய் பேசியதாக ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:

உண்மைப் பதிவைக் காண: facebook.com I Archive
விஜய் தேர்தல் பிரசாரம் செய்த வீடியோ ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. அதில் அவர், “உங்களுக்கும் நம்ம ஜென் ஸீ கிட்சுக்கும் நான் சொல்லிக்கிறது ஒன்னே ஒன்னுதான். ஏப்ரல் 23ம் தேதி, காலங்காத்தால பக்காவா ரெடியாகிட்டு, உங்க ஓட்டர் ஐடி கார்டை கையில எடுத்துக்கிட்டு, மொதோ ஆளா பூத்ல போய் நின்னு அந்த உதய சூரியனுக்கு நேரா இருக்கிற அந்த பட்டன ஒரு அழுத்து அழுத்துங்க” என்று பேசுகிறார்.
நிலைத் தகவலில், “உதயசூரியன் சின்னத்திற்கு வாக்கு சேகரிக்கிறார் விஜய் ….. தன்னை அறியாமல் திமுகவால் அனுப்பப்பட்ட B Team என்று புதுவெடியில் ஒப்புக்கொண்டு விட்டார் நடிகர் விஜய் …… உதயசூரியனுக்கு ஓட்டு போடுவதும் விசில் சின்னத்தில் ஓட்டு போடுவதும் இரண்டுமே ஒன்றுதான் தமிழ்நாட்டுக்கு நாசம் தான்” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த வீடியோவை பலரும் சமூக ஊடகங்களில் பதிவிட்டு வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
தவெக தலைவரும் நடிகருமான விஜய் தன்னுடைய பெரம்பூர் தொகுதிக்கான வேட்பு மனுவைத் தாக்கல் செய்துவிட்ட தன்னுடைய தேர்தல் பிரசாரத்தை தொடங்கினார். அப்போது விசில் சின்னத்துக்கு வாக்களிக்கும்படி கேட்டுக்கொண்டார். ஆனால், தி.மு.க-வின் உதய சூரியன் சின்னத்துக்கு வாக்களிக்கும்படி விஜய் கூறியதாக பலரும் சமூக ஊடகங்களில் பதிவிட்டு வருகின்றனர்.
உண்மையில் விஜய் அப்படி கூறியிருந்தால் அது அனைத்து செய்தி ஊடகங்களிலும் வெளியாகி இருக்கும். எல்லா ஊடகங்களும் விஜய் வாய் தவறி தி.மு.க-வுக்கு வாக்களிக்கும்படி கூறியதையே பெரிய செய்தியாக்கி இருப்பார்கள். ஆனால், அப்படி எந்த ஒரு செய்தியும் நமக்கு கிடைக்கவில்லை. எனவே, விஜய் பேச்சின் ஒலி (ஆடியோ) பதிவை எடிட் செய்திருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் ஆய்வு செய்தோம்.
விஜய்யின் பிரசாரம் தொடக்கம் தொடர்பாக ஊடகங்களில் வெளியான வீடியோவை பார்த்தோம். தி இந்து ஆங்கிலம் இதழ் தன்னுடைய யூடியூப் பக்கத்தில் விஜய் பேச்சு வீடியோவை வெளியிட்டிருந்தது. வீடியோவின் 28:12வது நிமிடத்தில் நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட வீடியோவின் காட்சி வந்தது. அதில் அவர் விசில் சின்னத்துக்கு வாக்களிக்கும்படி மட்டுமே கூறுவதைக் கேட்க முடிந்தது. அந்த ஊடகம் மட்டுமின்றி எல்லா ஊடகங்கள் வெளியிட்ட வீடியோக்களையும் ஆய்வு செய்து பார்த்தபோது, அனைத்திலும் விசில் சின்னத்துக்கு வாக்களிக்கும்படி அவர் கூறியதை தெளிவாகக் கேட்க முடிந்தது.
இதன் மூலம் விஜய்யின் பிரசார வீடியோவின் ஆடியோவை மட்டும் எடிட் செய்து, உதய சூரியன் சின்னத்துக்கு வாக்களிக்கும்படி அவர் கூறியது போன்று மாற்றி சமூக ஊடகங்களில் பதிவிட்டிருப்பது தெளிவானது. இந்த ஆதாரங்கள் அடிப்படையில் நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட பதிவு தவறானது என்று உறுதி செய்யப்படுகிறது.
முடிவு:
உதயசூரியன் சின்னத்துக்கு வாக்களிக்கும்படி விஜய் பேசியதாக பரவும் வீடியோ எடிட் செய்யப்பட்டது என்பதை தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில் ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.
சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…
FacebookI X PostI Google News ChannelI Instagram


