RAPID FACT CHECK: மத்திய பிரதேச காங்கிரஸ் வேட்பாளர் தேர்வில் மோதலா?
மத்திய பிரதேசத்தில் காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல் வெளியானதால் அதிருப்தி அடைந்த காங்கிரஸ்காரர்கள் அடித்துக்கொண்டனர் என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. அது பற்றி ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:
உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive 1 I Archive 2
இரண்டு தலைவர்கள் ஒருவரை ஒருவர் தாக்கிக்கொள்ளும் பழைய வீடியோ பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், "#மத்திய_பிரதேசம் எ#காங்கிரசின் முதல் கட்ட #வேட்பாளர் பட்டியல் வெளியாகி உள்ளது" என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த வீடியோவை Pooranasamy Bjp என்ற ஃபேஸ்புக் ஐடி கொண்டவர் 2023 அக்டோபர் 16ம் தேதி பதிவிட்டிருந்தார். இவரைப் போல பலரும் இந்த வீடியோவை பதிவிட்டு வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
சில நாட்களுக்கு முன்புதான் ராஜஸ்தானில் வேட்பாளர் தேர்வில் மோதல் காரணமாக பாஜக நிர்வாகிகள் ஒருவரை ஒருவர் அடித்துக்கொண்டனர் என்று இந்த வீடியோ காங்கிரஸ் கட்சியைச் சார்ந்தவர்கள் சமூக ஊடகங்களில் பதிவிட்டிருந்தனர். நிர்வாகிகள் பாஜக-வினர் என்பதாலும் சம்பவம் நடந்தது உத்தரப்பிரதேசம் என்பதாலும் பாதி உண்மை பாதி தவறான தகவல் என்று கட்டுரை வெளியிட்டிருந்தோம். அந்த கட்டுரையைக் காண இங்கே கிளிக் செய்யுங்கள்.
தற்போது தாக்கிக்கொள்வது தங்கள் கட்சியின் எம்.பி, எம்.எல்.ஏ-க்கள் தான் என்பதைக் கூட அறியாமல், மத்திய பிரதேச காங்கிரஸ் கட்சியினர் அடித்துக்கொண்டனர் என்று பாரதிய ஜனதா கட்சியினர் சமூக ஊடகங்களில் பதிவிட்டு வருகின்றனர். காங்கிரஸ் தன்னுடைய முதல் வேட்பாளர் பட்டியலை அக்டோபர் 15ம் தேதி வெளியிட்டிருந்தது. இந்த சூழலில், காங்கிரஸ் நிர்வாகிகள் அடித்துக்கொண்டார்கள் என்ற தகவலை மட்டும் கூடுதலாக ஆய்வு செய்ய வேண்டி இருந்ததால் விரைவு உண்மை கண்டறிதல் ஆய்வு செய்தோம்.
முதலில் நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட வீடியோ மத்திய பிரதேசத்தை சார்ந்தது இல்லை என்பதை உறுதி செய்ய ஆதாரத்தை எடுத்தோம். நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட இதே வீடியோவை TV9 Bharatvarsh என்ற ஊடகம் 2019 மார்ச் 6ம் தேதி பதிவிட்டிருந்தது. அதில், "பாரதிய ஜனதா கட்சியின் எம்.பி, எம்.எல்.ஏ-க்கள் மாவட்ட ஆட்சித் தலைவர் மற்றும் மாநில அமைச்சர் முன்னிலையில் அடித்துக்கொண்டனர்" என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இது தொடர்பான செய்திகளில் இந்த சம்பவம் 2019ம் ஆண்டு உத்தரப்பிரதேச மாநிலம் சந்த் கபீர் மாவட்டத்தில் நடந்தது என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இதன் மூலம் இந்த வீடியோவில் உள்ளவர்கள் மத்திய பிரதேச காங்கிரஸ் நிர்வாகிகள் இல்லை என்பது உறுதியானது.
அடுத்ததாக காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல் வெளியானதைத் தொடர்ந்து அதிருப்தி, மோதல், அடிதடி ஏதும் நடந்ததா... அது தொடர்பாக செய்தி ஏதும் வெளியாகி உள்ளதா என்று கூகுளில் சில அடிப்படை வார்த்தைகளைப் பயன்படுத்தித் தேடினோம். ஆனால், அப்படி எந்த ஒரு செய்தியும் நமக்குக் கிடைக்கவில்லை. இதன் அடிப்படையில் நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட பதிவு தவறானது என்று உறுதி செய்யப்படுகிறது.
முடிவு:
மத்திய பிரதேச காங்கிரஸ் நிர்வாகிகள் ஒருவரை ஒருவர் அடித்துக்கொண்டனர் என்று பரவும் வீடியோ 2019ல் உ.பி-யில் எடுக்கப்பட்டது என்பதை தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில் ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.
சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…
Facebook I Twitter I Google News Channel
Title:RAPID FACT CHECK: மத்திய பிரதேச காங்கிரஸ் வேட்பாளர் தேர்வில் மோதலா?
Written By: Chendur PandianResult: False