
‘’விசாரணை என்ற பெயரில் துன்புறுத்தும் தமிழ்நாடு காவல்துறை’’, என்று கூறி, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு தகவல் பற்றி ஆய்வு மேற்கொண்டோம்.
தகவலின் விவரம்:
இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.
இதில், ‘’ விசாரணை என்ற பெயரில் அடித்து துன்புறுத்தும் காவல்துறை…
மன சாட்சி இல்லாத முண்டங்கள்.
மிருகங்கள் கூட ஒப்பிட முடியாது ஈன பிறவிகள்
காவல்துறை என்பதற்கு பதில பதிலாக
காட்டுமிராண்டி துறை தமிழக அரசு அழைக்கலாம் பெயர் மாற்றம் செய்யலாம்.
#திமுக #திமுகதேர்தல் #திமுகசெய்திகள் #எம்.கே.ஸ்டாலின்’’ ,
என்று எழுதப்பட்டுள்ளது.
இதனுடன், இளைஞர் ஒருவரை போலீசார் சிலர் ஒன்று சேர்ந்து கட்டி வைத்து, அடிப்பது போன்ற காட்சிகள் கொண்ட வீடியோ ஒன்றும் இணைக்கப்பட்டுள்ளது.
பலரும் இதனை உண்மை என நம்பி, சமூக வலைதளங்களில் ஷேர், கமெண்ட் செய்து வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
சில நாட்கள் முன்பாக, சிவகங்கை மாவட்டம், மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலுக்குச் சென்ற நிகிதா என்பவர் தனது காரில் இருந்த நகையை காணவில்லை என்று போலீசில் புகார் செய்தார். இதன்பேரில், அந்த கோயிலில் காவலாளியாக பணிபுரிந்த அஜித்குமார் என்பவர், நகை திருட்டு சந்தேகத்தின் பேரில் போலீசார் அடித்து, விசாரித்ததில் உயிரிழந்தார்.
இதுதொடர்பான அதிர்ச்சிகர வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவியதால், பெரும் சர்ச்சை எழுந்தது. சம்பந்தப்பட்ட போலீசார் மீது உடனடியாக துறை சார்ந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது. எனினும், இதுபற்றி அரசியல் கட்சிகள் தொடங்கி பொதுமக்கள் வரை இன்றளவும் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.
இதன் தொடர்ச்சியாக, சமூக வலைதளங்களில் கடந்த சில நாட்களாக, தமிழ்நாடு போலீசாரின் அட்டூழியம் என்று கூறி ஏதேனும் ஒரு வீடியோவை டிரெண்டிங் செய்யும் வழக்கம் அதிகரித்துள்ளது.
இத்தகைய சூழலில்தான், நாம் ஆய்வுக்கு எடுத்துக் கொண்ட வீடியோவும் சமூக வலைதளங்களில் பகிரப்படுகிறது. ஆனால், இந்த வீடியோவுக்கும், தமிழ்நாடு போலீசாருக்கும் எந்த தொடர்பும் இல்லை. இது உத்தரப் பிரதேச மாநிலத்தில் நிகழ்ந்த சம்பவம்.
இதன்படி, உத்தரப் பிரதேசத்தில் உள்ள Jaunpur மாவட்டத்திற்குட்பட்ட Mungra Badshahpur காவல் நிலையத்தில் SHO பதவியில் பணிபுரியும் SHO Vinod Mishra என்பவர்தான் இவ்வாறு இளைஞரை கொடூரமாக தாக்கிய நபர். இதன்பேரில், சம்பந்தப்பட்ட போலீசார் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். இதுபற்றி நாம் குறிப்பிட்ட காவல் நிலையத்தில் பேசி உறுதிப்படுத்தியுள்ளோம்.
பல்வேறு ஊடகங்களிலும் இதுபற்றி செய்தி வெளியாகியுள்ளது.
Times Of India l Free Press Journal l Dainik Bhaskar l ETV Bharat
எனவே, உத்தரப் பிரதேசத்தில் நிகழ்ந்த ஒரு சம்பவம் தொடர்பான வீடியோவை எடுத்து, தமிழ்நாட்டில் நடந்தது போன்று குறிப்பிட்டு, வதந்தி பரப்புகிறார்கள் என்று சந்தேகமின்றி உறுதி செய்யப்படுகிறது.
முடிவு:
உரிய ஆதாரங்களின் அடிப்படையில் மேற்கண்ட தகவல் நம்பகமானது இல்லை என்று ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் நிரூபித்துள்ளது. நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை கண்டால், எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்புங்கள். நாங்கள், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.
எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர…
Facebook Page I Twitter PageI Google News Channel I Instagram

Title:விசாரணை என்ற பெயரில் துன்புறுத்தும் தமிழ்நாடு காவல்துறை என்று பரவும் வீடியோ உண்மையா?
Fact Check By: Pankaj IyerResult: Misleading
