ஹரியானாவில் இஸ்லாமியர் ஒருவர் மீது பொது மக்கள் முன்னிலையில் தாக்குதல் நடந்தது என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive

இஸ்லாமியர் ஒருவர் மீது கும்பலாக பலர் தாக்குதல் நடத்தும் வீடியோ பகிரப்பட்டுள்ளது. தாக்குதல் நடத்துபவர்களை போலீசார் தடுக்க முயற்சிக்கின்றனர். அதையும் மீறி அந்த நபர் மீது தாக்குதல் நடத்தப்படுகிறது. அவர் தப்பி ஓடுகிறார். நிலைத் தகவலில், "ஊரே நின்னு வேடிக்க பார்க்க உயிர காப்பாத்திக்க ஓடறதுலாம் பெரும் கொடூரம்... 😥😥

மனிதர்கள் வாழ தகுதி இல்லாத நாடாக இந்தியா மாறி வருகிறது..😡 டபுள் என்ஜின் சர்க்கார் (ஹரியானாவில் பதறவைக்கும் காட்சி)" என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்த வீடியோ பதிவை டாக்டர் வளர்பிறைதாஜ் என்ற ஃபேஸ்புக் ஐடி கொண்டவர் 2023 ஆகஸ்ட் 4ம் தேதி பதிவிட்டுள்ளார். இவரைப் போல பலரும் இந்த வீடியோவை பதிவிட்டு வருகின்றனர்.

உண்மை அறிவோம்:

மணிப்பூரைத் தொடர்ந்து ஹரியானாவில் சிறுபான்மையினர் மீது தாக்குதல் நடந்து வருகிறது. வன்முறை தொடர்பாக வரும் தகவல்கள் கவலை அளிக்கின்றன. இந்த நிலையில் ஹரியானாவில் இஸ்லாமியர் ஒருவர் மீது இந்துத்துவா அமைப்பினர் தாக்குதல் நடத்தியதாக பதறவைக்கும் வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது உண்மையில் தற்போது நடந்ததா அல்லது பழைய வீடியோவை தற்போது நடந்தது போல் பகிர்ந்துள்ளார்களா என்று அறிய ஆய்வு செய்தோம்.

வீடியோ காட்சியை புகைப்படங்களாக மாற்றி கூகுள் ரிவர்ஸ் இமேஜ் தேடலில் பதிவேற்றித் தேடினோம். அப்போது ஃபேஸ்புக்கில் வெளியிடப்பட்ட வீடியோ மற்றும் யூடியுபில் வௌியான வீடியோ நமக்குக் கிடைத்தது. ஒன்றில் இந்த வீடியோ உத்தரகாண்ட் மாநிலம் டேராடூனில் நிகழ்ந்தது என்று குறிப்பிடப்பட்டிருந்தது. மற்றொரு வீடியோவில் இந்தியில் இந்ரேஷ் மருத்துவமனை அருகில் என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்த ஆதாரங்கள் அடிப்படையில் கூகுளில் சில கீ வார்த்தைகளை டைப் செய்து தேடினோம். அப்போது, டேராடூனில் அப்படி ஒரு மருத்துவமனை (Shri Mahant Indiresh Hospital) இருப்பது தெரிந்தது. மேலும். அந்த மருத்துவமனையின் கூகுள் மேப் புகைப்படங்கள் சிலவற்றுடன் நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட வீடியோவில் உள்ள இடங்கள் சில ஒத்துப்போயின. ஆனால், நடந்த சம்பவம் தொடர்பாக நமக்கு எந்த ஒரு செய்தியும் கிடைக்கவில்லை.

எனவே, நம்முடைய ஃபேக்ட் கிரஸண்டோ ஆங்கிலப் பிரிவின் உதவியை நாடினோம். இந்த வீடியோ தொடர்பான விவரம் ஏதும் தெரிந்தால் தெரிவிக்கும்படி கேட்டுக்கொண்டோம். இது தொடர்பாக தாங்களும் ஆய்வு செய்து வருவதாகக் கூறிய அவர்கள் அது பற்றி நம்மிடம் தெரிவித்தனர். அதில், இந்த சம்பவம் டேராடூனில் கடந்த ஜூலை 27ம் தேதி நிகழ்ந்தது.

இது தொடர்பாக டேராடூன் பட்டேல் நகர் காவல் நிலைய அதிகாரியிடம் பேசினோம். அவர் இரு சமூகத்தினருக்கு இடையே நடந்த மோதல் உண்மைதான். இது தொடர்பாக முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது. தாக்குதலில் ஈடுபட்ட சிலரை கைது செய்துள்ளோம். சிலரை தேடி வருகிறோம் என்று கூறினார். மேலும் இது தொடர்பாக எஸ்எஸ்பி அளித்த விளக்கம், ஃபேஸ்புக் - ட்விட்டரிலும் வெளியாகி உள்ளது என்று கூறியதாக தெரிவித்தனர். இது தொடர்பாக ஃபேக்ட் கிரஸண்டோ ஆங்கிலத்தில் வெளியான கட்டுரை காண இங்கே கிளிக் செய்யுங்கள்!

இது தொடர்பாக டேராடூன் போலீசின் ஃபேஸ்புக், ட்விட்டர் பக்கங்களைப் பார்வையிட்டோம். அதில், வன்முறையைத் தூண்டும் வகையில் சமூக ஊடகங்களில் பதிவிட வேண்டாம் என்று காவல் துறை அதிகாரி வேண்டுகோள் விடுத்தது தெரிந்தது. காவல் அதிகாரி பேசத் தொடங்கும் போது அவருக்கு பின்னால் நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட வீடியோ சில நொடிகள் காட்டப்பட்டது. இவை எல்லாம் இந்த வீடியோ ஹரியானாவில் நடக்கவில்லை என்பதை உறுதி செய்தன.

உத்தரகாண்டிலும் பாரதிய ஜனதா ஆட்சிதான் நடந்து வருகிறது. அதுவும் பாஜக-வின் டபுள் இன்ஜின் மாநிலம்தான். தாக்குதல் நடந்தது உண்மைதான். அதுவும் ஒரு சில நாட்களுக்கு முன்பாகத்தான் தாக்குதல் நடந்துள்ளது. ஆனால் தாக்குதல் நடந்த மாநிலம் ஹரியானா இல்லை. ஹரியானாவில் தற்போது நடந்து வரும் கலவரத்துக்கும் இந்த சம்பவத்துக்கும் தொடர்பில்லை. உத்தரகாண்ட் மாநிலத்தில் நடந்த சம்பவத்தை, ஹரியானாவில் நடந்தது என்று தவறாக பகிர்ந்துள்ளனர். இதன் அடிப்படையில் உண்மையுடன் தவறான தகவல் சேர்த்துப் பகிர்ந்திருப்பது தெளிவாகிறது.

முடிவு:

டேராடூனில் நடந்த வன்முறை சம்பவத்தின் வீடியோவை எடுத்து ஹரியானாவில் தற்போது நடந்து வரும் வன்முறையுடன் தொடர்புபடுத்தி தவறான தகவலை சமூக ஊடகங்களில் பகிர்ந்திருப்பதை தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில் ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…

Facebook I Twitter I Google News Channel

Avatar

Title:ஹரியானாவில் இஸ்லாமியர் மீது தாக்குதல் என்று பரவும் வீடியோ உண்மையா?

Written By: Chendur Pandian

Result: Partly False