
பிரதமர் மோடி சென்னை வரும் சூழலில் கோ பேக் மோடி என பா.ஜ.க எம்.எல்.ஏ வானதி ஶ்ரீனிவாசன் போஸ்டர் பிடித்தார் என்று என்று ஒரு புகைப்படம் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:

உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive
Go Back Modi என வானதி ஶ்ரீனிவாசன் போஸ்டர் பிடித்திருப்பது போன்று எடிட் செய்யப்பட்ட படத்தைப் பகிர்ந்துள்ளனர். நிலைத் தகவலில், “பி. ஜே. பி ஓட சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் மோடி GO BACK MODI … என்று அவரே பதாகை வைத்துள்ளார் இதுக்கு என்ன பதில் அண்ணாமலை” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த பதிவை Vijay Kani என்ற ஃபேஸ்புக் ஐடி கொண்டவர் 2022 மே 26ம் தேதி பதிவிட்டுள்ளார். இவரைப் போல பலரும் இந்த படத்தை பகிர்ந்து வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
பாரதிய ஜனதா கட்சியின் மகளிர் அணி தேசியத் தலைவராக இருப்பவர் வானதி ஶ்ரீனிவாசன். தீவிர பா.ஜ.க உறுப்பினரான அவர் மோடியை எதிர்த்து கோ பேக் மோடி என போஸ்டர் பிடித்தார் என்று சிலர் சமூக ஊடகங்களில் படத்தை பகிர்ந்து வருகின்றனர். இது உண்மை இல்லை என்று தெரிந்தும் கூட, வானதி ஶ்ரீனிவாசன் போஸ்டர் பிடித்தார் என்று குறிப்பிட்டு பலரும் இந்த படத்தை பகிர்ந்து வரவே இது தொடர்பாக ஆய்வு செய்தோம்.
படத்தை ரிவர்ஸ் இமேஜ் தேடலில் பதிவேற்றித் தேடினோம். அப்போது 100 கோடி கொரோனா தடுப்பூசி செலுத்தி சாதனை படத்தை பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்து கோவையில் வானதி ஶ்ரீனிவாசன் நடத்திய நிகழ்ச்சியின் போது இந்த படம் எடுக்கப்பட்டது என்று தெரியவந்தது. இந்த படத்தை வானதி ஶ்ரீனிவாசனே 2021 அக்டோபர் 24ம் தேதி தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

அவர் பிடித்திருந்த போஸ்டரில், “இந்தியா வரலாறு படைத்தது. 100 கோடி தடுப்பூசி. நன்றி மோடி ஜி” என்று ஆங்கிலத்தில் எழுதப்பட்டிருந்தது. இதை அப்படியே மாற்றி, “Go Back Modi” என்று எடிட் செய்து பகிர்ந்திருப்பது தெரிந்தது. மேலும், இதே படத்தை வைத்துப் பல வகையில் வதந்திகளை உருவாக்கி சமூக ஊடகங்களில் பகிர்ந்து வந்திருப்பதும் தெரிந்தது. இது தொடர்பாக நம்முடைய ஃபேக்ட் கிரஸண்டோவில் வெளியான கட்டுரையைக் காண இங்கே கிளிக் செய்யுங்கள்.
முடிவு:
கோ பேக் மோடி என வானதி ஶ்ரீனிவாசன் போஸ்டர் பிடித்திருப்பது போன்று பரவும் படம் எடிட் செய்யப்பட்டது என்பதை தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில் ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.
சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…
Facebook I Twitter I Google News Channel

Title:Rapid Fact Check: #GoBackModi என்று வானதி ஶ்ரீனிவாசன் கையில் போஸ்டர் பிடித்தாரா?
Fact Check By: Chendur PandianResult: Altered
