அமெரிக்காவில் தேவாலயத்தை சேதப்படுத்திய ஆர்எஸ்எஸ் தொண்டர் என்று பரவும் வீடியோ உண்மையா?

Communal False இந்தியா | India

அமெரிக்காவில் கிறிஸ்தவ தேவாலயத்தை சேதப்படுத்திய ஆர்.எஸ்.எஸ் தொண்டர் என்று குறிப்பிட்டு ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive

கிறிஸ்தவ தேவாலயத்தின் பலிபீடத்தின் மீது ஏறி அங்கிருக்கும் பொருட்களை ஒருவர் கீழே தள்ளும்போது, அவரை காவல் துறையினர் பிடிக்கும் வீடியோ ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “அமெரிக்காவில் உள்ள தேவாலயத்தில் இந்தியாவைச் சேர்ந்த ஆர்எஸ்எஸ் சங்கிஅமைப்பை சேர்ந்தவன் தேவாலயத்தில் சிலைகளை உடைக்கும் பொழுது பிடிபட்டான்…🥵🥵அடேய் சங்கி இந்தியாவுள கொலை செய்தாலும் தூக்குல போட மாட்டானுக ஆயுள் தண்டனை தான் குடுப்பாங்க அதுவும் எதாவது தலைவர்கள் பிறந்த நாள் வந்தா நன்நடத்தைன்னு விடுதலை பன்னீருவாங்க ஆனா அமெரிக்கா அப்படி இல்ல அங்க துப்பாக்கி எல்லோரும் வைத்து கொள்ளலாம் என்று சட்டம் இருக்கிறது. நிறையா அமெரிக்கா மக்கள் சட்டப்படி துப்பாக்கி வைத்து இருக்கிறார்கள். அவனுக உன்ன சுட்டா ஏன்னு கேக்க கூட ஒருத்தனும் வர மாட்டான் சமீபத்தில் அமெரிக்காவில் சிங் ஒருத்தன் கத்தியை வைத்து அச்சுருத்திய காரணத்திற்கு போலீஸ் சுட்டு கொன்னானுக அந்த போலீஸ இந்திய அரசு ஏன்னு கூட கேக்கல உன்னையும் அமெரிக்காவுள நாய சுடுர மாதிரி சுட்டா இந்தியாவுள இருந்து யாரும் வர மாட்டார்கள் அதை புரிந்து கொள்வெளி நாடுகளுக்கு போகும் போது அவர்கள் மத, கலாச்சாரத்தை மதித்து நடந்தால் தான் எந்த பிரச்சனையும் இருக்காது” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த பதிவை பலரும் சமூக ஊடகங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

உண்மை அறிவோம்:

அமெரிக்காவில் ஒரு கிறிஸ்தவ தேவாலயத்திலிருந்த சிலையை இந்தியாவின் ஆர்.எஸ்.எஸ் அமைப்பைச் சார்ந்த நபர் ஒருவர் உடைத்ததாக வீடியோவை பலரும் சமூக ஊடகங்களில் பதிவிட்டு வருகின்றனர். ஆனால், இந்த இடத்தைப் பார்க்கும் போது கத்தோலிக்க கிறிஸ்தவர்களின் தலைமையிடமான வத்திக்கான் (Vatican) நகரில் உள்ள புனித பேதுரு பேராலயம் போல உள்ளது. அங்கு சில மாதங்களுக்கு முன்பு இப்படி ஒரு சம்பவம் நடந்ததாகச் செய்தி வெளியாகி இருந்தது. எனவே, இது தொடர்பாக ஆய்வு செய்தோம்.

வீடியோ காட்சிகளை புகைப்படங்களாக மாற்றி கூகுள் லென்ஸ் இணையதளத்தில் பதிவேற்றி தேடினோம். அப்போது, 2025 பிப்ரவரி மாதம் முதல் வாரத்தில் இந்த சம்பவம் வத்திகான் தேவாலயத்தில் நடந்ததாக செய்திகள் நமக்கு கிடைத்தன. அந்த செய்தி எதிலும் அத்துமீறி நடந்துகொண்ட நபர் இந்தியர் என்றோ, ஆர்.எஸ்.எஸ் நபர் என்றோ குறிப்பிடப்படவில்லை. 

இத்தாலி நாட்டு ஊடகங்களில் வெளியான செய்திகளைத் தேடிப் பார்த்தோம். அவற்றில், “இந்த சம்பவத்தில் ஈடுபட்ட நபர் ருமேனியா நாட்டைச் சார்ந்தவர் என்றும், தன்னுடைய டி-ஷர்டில் “உக்ரைன் குழந்தைகளை காக்க வேண்டும்” என்று வாசகம் எழுதியிருந்ததாகவும் குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த நபரை பிடித்த வத்திகான் போலீசார், அவர் பற்றிய முழு விவரங்களையும் திரட்டிய பிறகு, அவரை நாட்டைவிட்டு வெளியேற்ற வேண்டும் என்ற உத்தரவுடன் இத்தாலி நாட்டு போலீசாரிடம் ஒப்படைத்ததாக குறிப்பிட்டிருந்தனர்.

உண்மைப் பதிவைக் காண: ndtv.com I Archive I edition.cnn.com I Archive I ansa.it I Archive

மேலும், இந்த விவகாரம் தொடர்பாக பேசிய வத்திகான் செய்தித் தொடர்பாளர், “இந்த சம்பவத்தில் ஈடுபட்ட நபர் கடும் மனநல பாதிப்புக்கு உள்ளாகியிருந்தது தெரிந்தது. அவரை தடுத்து வைத்திருந்த வத்திகான் காவல்துறையினர், விசாரணைக்குப் பிறகு இத்தாலி நாட்டுப் போலீசிடம் ஒப்படைத்தனர்” என்று கூறியதாக செய்திகளில் குறிப்பிடப்பட்டிருந்தது. 

அத்துமீறலில் ஈடுபட்ட நபரிடம் முழுமையான விசாரணை முடித்துவிட்டு அவரை வத்திகான் போலீஸ் விடுவித்துவிட்டது என்று செய்திகளில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் அவர் ருமேனியா நாட்டைச் சார்ந்தவர் என்பதும் விசாரணையில் தெரியவந்ததாக செய்திகளில் குறிப்பிடப்பட்டிருந்தது. அதன் பிறகு அந்த நபர் பற்றி எந்த ஒரு செய்தியும் வெளியாகவில்லை. அவர் இந்தியர் என்றோ, ஆர்.எஸ்.எஸ் பின்னணி கொண்டவர் என்றோ வத்திகான் போலீசோ அல்லது வேறு நம்பத்தகுந்த விசாரணை அமைப்போ கூறியதாக எந்த ஒரு செய்தியும் நமக்கு கிடைக்கவில்லை. அப்படி இருக்கும் போது எதன் அடிப்படையில் இந்த நபர் ஆர்.எஸ்.எஸ் தொண்டர் என்று குறிப்பிட்டார்கள் என்று தெரியவில்லை. அதற்கு எந்த ஒரு ஆதாரமும் கிடைக்கவில்லை.

2025 பிப்ரவரியில் ஐரோப்பா கண்டத்தில் உள்ள உலகின் மிகச் சிறிய நாடான வத்திகான் நகரில் நடந்த சம்பவத்தின் வீடியோவை எடுத்து, அமெரிக்காவில் உள்ள தேவாலயத்தைச் சேதப்படுத்திய ஆர்எஸ்எஸ் தொண்டர் என்று தவறான தகவலை சேர்த்து சமூக ஊடகங்களில் வெளியிட்டிருப்பது இதன் மூலம் உறுதியாகிறது. இந்த ஆதாரங்கள் அடிப்படையில் நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட பதிவு தவறானது என்று உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:

வத்திகானில் ருமானியா நாட்டைச் சார்ந்தவர் அத்துமீறி நடந்துகொண்ட சம்பவத்தின் வீடியோவை அமெரிக்காவில் ஆர்.எஸ்.எஸ் தொண்டர் தேவாலயத்தை தாக்கினார் என்று தவறாக சமூக ஊடகங்களில் பதிவிட்டிருப்பதை தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில் ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…

Facebook I X Post I Google News Channel I Instagram

Avatar

Title:அமெரிக்காவில் தேவாலயத்தை சேதப்படுத்திய ஆர்எஸ்எஸ் தொண்டர் என்று பரவும் வீடியோ உண்மையா?

Fact Check By: Chendur Pandian  

Result: False

Leave a Reply