
திருப்பதியில் ஒரு அர்ச்சகர் வீட்டில் நடத்தப்பட்ட வருமான வரித் துறை சோதனையில் 128 கிலோ தங்கம் கைப்பற்றப்பட்டதாக ஒரு வீடியோ பதிவு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:

அசல் பதிவைக் காண: Facebook I Archive
மேசை மீது அடுக்கி வைக்கப்பட்டுள்ள தங்க நகைகள் வீடியோ பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “திருப்பதி திம்பத்தில் பணியாற்றும் 16 அர்ச்சகர்களில் ஒருவரின் வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்திய போது கிடைத்த பணம், தங்க நகைகள், வைரம் எவ்வளவு தெரியுமா ??? 128 கிலோ தங்கம், 150 கோடி ரொக்கம், 70 கோடி மதிப்புள்ள வைரங்கள்…. இப்போது தானம் செய்யும் போது கொஞ்சம் யோசியுங்கள்..🙄 கடவுளுக்கு பணம், தங்கம், வைரம் தேவையா? ஒருவருடன் நெருங்கிவிட்டீர்கள், மீதியுள்ள 15 பூசாரிகள் வீட்டில் இன்னும் எத்தனை பேர் இருக்க முடியும் ??” என்று குறிப்பிடப்பட்டு இருந்தது.
இந்த பதிவை Senaa Kanian Sivaa என்ற ஃபேஸ்புக் ஐடி-யைக் கொண்ட நபர் 2021 டிசம்பர் 29ம் தேதி பதிவிட்டுள்ளார். பலரும் இதை ஷேர் செய்து வருகின்றனர்.

உண்மை அறிவோம்:
திருப்பதி கோவிலில் பணியாற்றும் அர்ச்சகர் வீட்டில் இருந்து கைப்பற்றப்பட்ட 128 கிலோ தங்க நகை என்று குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் வீடியோவில் உள்ள நகைகளில் கடைகளில் விற்பனைக்கு வைக்கப்பட்டிருக்கும் “டேக்” உடன் இருப்பதைக் காண முடிகிறது. வீடியோவில் பேசுபவர்கள் தமிழில் பேசுவதையும் கேட்க முடிந்தது. எனவே, இது உண்மையில் திருப்பதியில் எடுக்கப்பட்ட வீடியோதானா என்ற சந்தேகம் எழுந்தது.
மேலும், சில தினங்களுக்கு முன்பு வேலூர் ஜோஸ் ஆலுக்காஸ் நகைக்கடையில் திருடப்பட்ட தங்க நகைகள் மீட்கப்பட்டதாகச் செய்திகள் வெளியாகி இருந்தது. அதிலும் கூட இப்படி மேசை மீது நகைகள் வரிசையாக வைக்கப்பட்டிருந்த காட்சியைப் பார்த்த நினைவு இருந்தது. எனவே, இந்த வீடியோ பதிவு பற்றி ஆய்வு செய்தோம்.
திருப்பதி அர்ச்சகர் வீட்டில் வருமான வரித்துறை சோதனை நடந்ததா என்று பார்த்தோம். இது தொடர்பாக கூகுளில் டைப் செய்து தேடிய போது அப்படி எந்த ஒரு செய்தியும் நமக்குக் கிடைக்கவில்லை. கடந்த மே மாதம் திருமலை திருப்பதி தேவஸ்தானம் நடத்திய சோதனையில் அர்ச்சகர் வீட்டில் இருந்து 6.15 லட்ச ரூபாயும் 25 கிலோ நாணயத்தையும் கைப்பற்றியதாக செய்தி கிடைத்தது.

அசல் பதிவைக் காண: abplive.com I Archive 1 I samayam.com I Archive 2
இந்த வீடியோ காட்சியைப் புகைப்படமாக மாற்றி ரிவர்ஸ் இமேஜ் தேடலில் பதிவேற்றித் தேடினோம். அப்போது, இந்த வீடியோ வேலூர் ஜோஸ் ஆலுக்காஸ் நகைக் கடையில் திருடப்பட்டு மீட்கப்பட்ட நகை என்று செய்தி, வீடியோ வெளியாகி இருப்பதைக் காண முடிந்தது. இதன் மூலம் திருப்பதி அர்ச்சகர் வீட்டில் கைப்பற்றப்பட்ட தங்கம் என்று பகிரப்படும் தகவல் தவறானது என்று உறுதி செய்யப்படுகிறது.
ஜோஸ் ஆலுக்காஸ் கடையில் கொள்ளையடிக்கப்பட்ட தங்க நகைகள் மீட்கப்பட்டது தொடர்பான வீடியோவை எடுத்து, திருப்பதி கோவில் அர்ச்சகர் வீட்டில் கைப்பற்றப்பட்ட தங்கம் என்று தவறான தகவல் சேர்த்து சமூக ஊடகங்களில் பகிர்ந்திருப்பது இதன் மூலம் உறுதியாகிறது. இதன் அடிப்படையில் நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட பதிவு தவறானது என்று உறுதி செய்யப்படுகிறது.
முடிவு:
ஜோஸ் ஆலுக்காஸ் நகைக்கடையில் கொள்ளையடிக்கப்பட்ட நகை மீட்கப்பட்ட வீடியோவை திருப்பதி அர்ச்சகர் வீட்டில் சிக்கியது என்று தவறான தகவல் சேர்த்து பகிர்ந்திருப்பதை தகுந்த ஆதாரங்களுடன் ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.
சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…
Facebook I Twitter I Google News Channel

Title:திருப்பதி அர்ச்சகர் வீட்டில் கைப்பற்றப்பட்ட தங்கம் என்று பரவும் ஜோஸ் ஆலுகாஸ் வீடியோ!
Fact Check By: Chendur PandianResult: False
