பால் அண்டத்தில் சமஸ்கிருத ‘ஓம்’ ஒலிப்பதாகக் குடியரசு துணைத் தலைவர் கூறினாரா?

அரசியல் | Politics சமூக ஊடகம் | Social தமிழ்நாடு | Tamilnadu

பால் அண்டத்தில் ஓம் ஒலி இருப்பதை நாசா கண்டுபிடித்துள்ளது என்று குடியரசுத் துணைத் தலைவர் ஜெகதீப் தன்கர் கூறினார் என்று சன் நியூஸ் தொலைக்காட்சியின் நியூஸ் கார்டு ஒன்று சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive

சன் நியூஸ் வெளியிட்ட நியூஸ் கார்டு பகிரப்பட்டுள்ளது. அதில், “பால் அண்டத்தில் ஓம் ஒலி? நமது நாட்டின் சிறப்புமிக்க சமஸ்கிருத மொழியில் உள்ள ஓம், பால் அண்டத்தில் இருப்பதாக நாசா கண்டுபிடிதுள்ளது! சென்னையில் குடியரசுத் துணைத் தலைவர் ஜெகதீப் தன்கர் பேச்சு. இப்படி ஒரு தகவலை நாசா எங்கும் கூறவில்லை என, ஏற்கனவே ஃபேக்ட் செக் இணையதளங்கள் செய்தி வெளியிட்டுள்ளன” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. 

இந்த நியூஸ் கார்டை என் பெயர் சிவப்பு என்ற ஃபேஸ்புக் ஐடி கொண்டவர் 2023 மார்ச் 1ம் தேதி பதிவிட்டுள்ளார். இவரைப் போல பரும் இந்த நியூஸ் கார்டை பகிர்ந்து வருகின்றனர்.

உண்மை அறிவோம்:

“பால் அண்டத்தில் ஓம் ஒலி இருப்பதை நாசா கண்டுபிடித்துள்ளது என்று சன் டி.வி நியூஸ் கார்டு வெளியிட்டிருந்தது. சன் டிவி மட்டுமின்றி தினகரன் நாளிதழ் உள்ளிட்ட பல செய்தி ஊடகங்களும் இந்த செய்தியை வெளியிட்டிருந்தன. இந்த நியூஸ் கார்டுகளை பலரும் சமூக ஊடகங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

இந்த தகவல் உண்மைதானா, ஜெகதீப் தன்கர் பேசிய பேச்சின் வீடியோ உள்ளதா என்று தேடிப் பார்த்தோம். ஐஐடி மெட்ராஸ் மற்றும் நாடாளுமன்றத்தின் Sansad TV-யின் யூடியூப் பக்கத்தில் இந்த வீடியோ நமக்கு கிடைத்தது. ஐஐடி மெட்ராஸ் யூடியூப் பக்கத்தில் ஆடியோ தெளிவாக இல்லை. ஆனால்  Sansad TV யூடியூப் சேனலில் ஆடியோ – வீடியோ இரண்டும் தெளிவாக இருந்தது.

அந்த வீடியோவை பார்த்தோம். எந்த இடத்திலும் ஓம் என்ற சமஸ்கிருத ஒலி பால் அண்டத்தில் இருப்பதை நாசா கண்டுபிடித்தது என்று ஜெகதீப் தன்கர் கூறவில்லை. ஓம் பற்றி அவர் எந்த கருத்தையும் தெரிவிக்கவில்லை. 

அவரது பேட்டி அல்லது கேள்வி பதில் எதிலாவது இப்படிக் கூறியுள்ளாரா என்று குழப்பம் ஏற்படவே, இது தொடர்பாக சன் நியூஸ் தொலைக்காட்சிக்கே தொடர்புகொண்டு விளக்கம் கேட்டோம். நம்மிடம் பேசிய நிர்வாகி ஒருவர், “அந்த நியூஸ் கார்டை நீக்கிவிட்டோம். நிருபர் தவறான தகவலை அளித்தது தெரியவந்ததால் அந்த பதிவை நீக்கினோம்” என்றார்.

செய்தி சேகரிக்கச் சென்ற நிருபர் அளித்த தவறான தகவலை நம்பி சன் நியூஸ் தவறான நியூஸ் கார்டை வெளியிட்டிருப்பதும், உண்மை தெரிந்து அதை அவர்கள் நீக்கியிருப்பதும் நம்முடைய ஆய்வில் தெரியவந்தது. இதன் அடிப்படையில் நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட நியூஸ் கார்டு தவறானது என்று உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:

பால் அண்டத்தில் ஓம் என்ற சமஸ்கிருத ஒலி இருப்பதை நாசா கண்டுபிடித்தது என்று குடியரசுத் துணைத் தலைவர் ஜெகதீப் தன்கர் கூறினார் என்று சன் நியூஸ் தொலைக்காட்சி தவறாக வெளியிட்ட செய்தியை உண்மை என்று நம்பி பலரும் சமூக ஊடகங்களில் பகிர்ந்து வருவதை தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில் ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…

Facebook I Twitter I Google News Channel

Avatar

Title:பால் அண்டத்தில் சமஸ்கிருத ‘ஓம்’ ஒலிப்பதாகக் குடியரசு துணைத் தலைவர் கூறினாரா?

Fact Check By: Chendur Pandian 

Result: False