FACT CHECK: இஸ்ரேலின் விமான எதிர்ப்பு அமைப்பை ஆளில்லா விமானம் மூலம் அழித்ததா ஹமாஸ்?

சமூக ஊடகம் | Social சமூகம் சர்வதேசம் | International

இஸ்ரேலின் ஏவுகணை, விமானம் எதிர்ப்பு அமைப்பை ஆளில்லா விமானம் மூலம் ஹமாஸ் அமைப்பினர் தகர்த்தனர், என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது உண்மையா என்று ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

நம்முடைய ஃபேக்ட் கிரஸண்டோ வாட்ஸ் அப் சாட்பாட் எண்ணுக்கு (+91 9049053770) வாசகர் ஒருவர் வீடியோ மற்றும் ஸ்கிரீன்ஷாட் பதிவை அனுப்பி இது உண்மையா என்று கேட்டிருந்தார். அந்த வீடியோவில், “போர் விமானம் ஒன்றின் மீது தரையில் இருக்கும் விமானம் எதிர்ப்பு அமைப்பில் இருந்து குண்டு மழை பொழிகிறது. அதில் இருந்து தப்பிய விமானம் நேராக அந்த பாதுகாப்பு அமைப்பின் மீது விழுந்து அதை அழிக்கிறது.” 

ஸ்கிரீன்ஷாட் பதிவில், “ஹமாஸ் மற்றும் இஸ்ரேல் மோதல்களில் அதிக புதிய ஆயுத தொழிநுட்பங்கள் பயன்படுத்துவது உலகையே ஆச்சரியப்படுத்துள்ளது. இஸ்ரேல் என்ன தான் தொழிநுட்பத்தை பயன்ப்படுத்தினாலும் ஹமாஸ் குழு ஆளில்லா விமானங்களை பயன்படுத்தி Defense எனப்படும் பதுகாப்பு இயந்திரங்களை தாக்கி வருகின்றனர்” என்று குறிப்பிடப்பட்டு இருந்தது.

அசல் பதிவைக் காண: Facebook I Archive 1 I Archive 2

இந்த பதிவு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறதா என்று பார்த்தோம். அப்போது, இலங்கை கிரிக்கெட் சிங்கம் என்ற ஃபேஸ்புக் பக்கம் 2021 மே 17ம் தேதி இந்த வீடியோ மற்றும் நிலைத்தகவலை பதிவேற்றம் செய்திருந்தது. மேலும் பலரும் இந்த வீடியோ மற்றும் தகவலை ஷேர் செய்து வருவதைக் காண முடிந்தது. 

உண்மை அறிவோம்:

இஸ்ரேலின் பாதுகாப்பு அமைப்பை ஆளில்லா விமானங்கள் மூலம் ஹமாஸ் அமைப்பினர் தகர்த்தனர் என்று குறிப்பிடப்பட்டு இருந்தது. இதற்கு முன்பு இப்படி ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பரவியது. இஸ்ரேல் – பாலஸ்தீன போர் காட்சிகள் என்று கூறப்பட்டு இருந்தது. ஆனால் அது வீடியோ கேம் வீடியோ என்று நம்முடைய ஃபேக்ட் கிரஸண்டோ ஆய்வில் தெரியவந்தது.

இந்த நிலையில் இந்த வீடியோவும் வீடியோ கேமில் இருந்து எடுக்கப்பட்டதாக இருக்கலாமோ என்று சந்தேகம் எழுந்தது. நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட வீடியோ மிகவும் தெளிவின்றி இருந்தது. அதனால் அதை புகைப்படமாக மாற்றி ரிவர்ஸ் இமேஜ் தேடலில் பதிவேற்றித் தேடுவது சவாலானதாக இருந்தது.

தொடர்ந்து வேறு வேறு படத்தைப் பதிவேற்றித் தேடிய போது, நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட வீடியோ 2021 ஜனவரி 9ம் தேதி யூடியூபில் பதிவேற்றம் செய்யப்பட்டிருப்பது தெரிந்தது. அந்த வீடியோவில் “ArmA 3 – A-10 Warthog/Thunderbolt II in Action vs C-RAM – Phalanx CIWS – C RAM – Tracer – Simulation” என்று குறிப்பிடப்பட்டு இருந்தது. 

அதாவது, வீடியோ கேம் விளையாடும்போது எடுக்கப்பட்ட வீடியோ பதிவு என்று குறிப்பிடப்பட்டு இருந்தது. முன்பு நாம் ஆய்வு செய்த வீடியோவும் Compared Comparison என்ற யூடியூப் சேனல் பதிவேற்றம் செய்திருப்பது தெரிந்தது. இந்த Compared Comparison பின்னணி பற்றிப் பார்த்தபோது, போர் தொடர்பான வீடியோ கேம்களை இவர்கள் தொடர்ந்து வெளியிட்டு வருவது தெரிந்தது. அதன் சுய விவர குறிப்பைப் பார்த்தபோது அதிநவீன, உண்மையானது அல்லது யதார்த்தமானது போன்ற போர் வீடியோக்களை ArmA 3 -ஐ பயன்படுத்தித் தயாரிப்பது, அதன் அடிப்படையில் கதை, உருவகங்களை உருவாக்குவது என்று குறிப்பிட்டிருந்தனர்.

அசல் பதிவைக் காண: youtube.com I Archive

ArmA 3 என்றால் என்ன என்று கூகுளில் தேடினோம். அப்போது அது தத்ரூபமான ராணுவம், போர், ஷூட்டிங் காட்சிகள் கொண்ட வீடியோ கேம் என்று குறிப்பிட்டிருந்தனர்.

இதன் அடிப்படையில், நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட வீடியோ உண்மையான போர் காட்சி இல்லை, வீடியோ கேம் பதிவு என்பது உறுதியாகி உள்ளது. இதன் மூலம் இஸ்ரேல் பாதுகாப்பு அமைப்பை தாக்கி அழித்த ஹமாஸ் என்று பரவும் வீடியோ தவறானது என்று உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:

இஸ்ரேல் எதிர்தாக்குதல் அமைப்பின் மீது ஹமாஸ் அமைப்பினர் தாக்குதல் நடத்தியதாக பரவும் வீடியோ உண்மையானது இல்லை என்பதை தகுந்த ஆதாரங்களுடன்  ஃபேக்ட் கிரஸண்டோ உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

Avatar

Title:இஸ்ரேலின் விமான எதிர்ப்பு அமைப்பை ஆளில்லா விமானம் மூலம் அழித்ததா ஹமாஸ்?

Fact Check By: Chendur Pandian 

Result: False