“டெல்லி இந்தியா கேட்டில் 61 ஆயிரம் இஸ்லாமிய ராணுவ வீரர்கள் பெயர் உள்ளது!” – ஃபேஸ்புக் பதிவு சரியா?

சமூக ஊடகம் சமூகம்

இந்தியா கேட் போர் நினைவு சின்னத்தில் மொத்தம் 95,300 ராணுவ வீரர்கள் பெயர் பொறிக்கப்பட்டுள்ளதாகவும் அதில் 61,495 பெயர் இஸ்லாமியர்களுடையது என்றும் ஒரு தகவல் ஃபேஸ்புக்கில் பகிரப்பட்டுள்ளது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

India Gate 2.png

 Facebook Link I Archived Link 1 I Archived Link 2

டெல்லியில் உள்ள இந்தியா கேட் புகைப்படத்தை பகிர்ந்துள்ளனர். நிலைத் தகவலில், போர் நினைவு சின்னத்தில் முதல் உலகப் போரில் பங்கேற்று உயிர் நீத்த பிரிட்டிஷ் இந்தியா வீரர்கள் 95,000 பேர் பெயர் அதில் பொறிக்கப்பட்டுள்ளது என்றும், அதில் 61,945 பெயர்கள் இஸ்லாமியர்களுடையது என்றும் குறிப்பிட்டுள்ளனர்.

Shaik Sulaiman  என்பவர் 2016ம் ஆண்டு அக்டோபர் 17ம் தேதி இந்த பதிவை வெளியிட்டுள்ளார். அப்போதே மிகப்பெரிய அளவில் இது ஷேர் செய்யப்பட்டு இருந்தது. தற்போது பழைய பதிவை சிலர் பகிர்ந்துள்ளனர்.

உண்மை அறிவோம்:

இந்தியா கேட் பற்றிய வரலாற்று உண்மைகளை ஆய்வு செய்தோம். விக்கிப்பீடியாவில் இந்தியா கேட் பற்றி படித்தபோது அதில், 13,516 பிரிட்டிஷ் மற்றும் இந்திய வீரர்களின் பெயரைத் தாங்கி நிற்கிறது என்று இருந்தது. இதை உறுதி செய்ய வேறு ஏதாவது ஆதாரம் உள்ளதா என்று ஆய்வு மேற்கொண்டோம். அப்போது, டெல்லி சுற்றுலா அரசு இணைய தளத்தில் இந்தியா கேட் பற்றிய தகவல் வெளியாகி இருந்தது நமக்கு கிடைத்தது. அதிலும் 13,516 பெயர்கள் பொறிக்கப்பட்டுள்ளது என்றே குறிப்பிட்டிருந்தது.

Archived link

அந்த இணைய தளத்தில், “43 மீட்டர் உயர இந்தியா கேட், முதல் உலகப் போரில் உயிர் நீத்த 70 ஆயிரம் இந்திய வீரர்களின் நினைவாக கட்டப்பட்டது. இந்த நினைவகத்தில் 1919ம் ஆண்டு நடந்த வடமேற்கு எல்லையில் நடந்த ஆப்கான் போரில் உயிரிழந்த 13,516 பிரிட்டிஷ் மற்றும் இந்திய வீரர்களின் பெயர்கள் பொறிக்கப்பட்டுள்ளன.”

போர் நினைவு சின்னத்தின் மேல் பகுதியில், “பிரான்ஸ், ஃப்ளாண்டர்ஸ், மெசபட்டோமியா மற்றும் பெர்ஷியா, கிழக்கு ஆப்ரிக்கா கல்லிப்போலி, அதன் அருகாமை தொலைதூரப் பகுதிகள் மற்றும் வடமேற்கு எல்லை மற்றும் மூன்றாவது ஆப்கானிஸ்தான் பேரில் இந்தியாவுக்காக போரிட்டு உயிர் நீத்த வீரர்களின் நினைவு இங்கு பதிவு செய்யப்பட்டுள்ளது” என்று குறிப்பிட்டுள்ளனர்.

இதன் மூலம், 93 ஆயிரம் பெயர்கள் அதில் பொறிக்கப்பட்டுள்ளது என்ற தகவல் தவறானது என்று உறுதியானது.

இதில் உள்ள 13,516 பெயர்களும் காமன்வெல்த் போர் நினைவு சின்னம் கமிஷன் இணையதளத்தில் உள்ளது என்றும் ஒரு தகவல் கிடைத்தது. அந்த இணைய தளத்துக்கு சென்று பார்த்தபோது, ஒவ்வொருவரின் பெயர், அவர் வகித்த பதவி, மரணம் தழுவிய தினம், மரணம் தழுவியபோது அவருக்கு வயது என்ன என்ற தகவல் எல்லாம் அதில் இருந்தது. ஆனால், இவர்களில் எத்தனை பேர் இஸ்லாமியர்கள், இந்துக்கள் என்ற கணக்கு அதில் இல்லை.

அந்த பெயர்களை படித்துப் பார்த்தோம், சந்தேகத்துக்கு இடமின்றி இந்து, இஸ்லாம் என அனைத்து சமயத்தவர் பெயர் பெயரும் அதில் இருந்ததை காண முடிந்தது. நாட்டுக்காக உயிரிழந்தவர்களை சாதி, மதத்துக்குள் அடக்காமல் இருப்பதே நல்லது!

டெல்லி கேட்டில் இஸ்லாமியர்கள் பெயர் தொடர்பாக நம்முடைய ஃபேக்ட் கிரஸண்டோ மராத்தி பிரிவும் (marathi.factcrescendo.com) உண்மை கண்டறியும் ஆய்வு நடத்தி வெளியிட்டது தெரிந்தது. அந்த செய்தியைப் பார்க்க இங்கே கிளிக் செய்யுங்கள்.

நம்முடைய ஆய்வில், டெல்லியில் உள்ள இந்தியா கேட்டில் 13,516 பேர் பெயர்கள் பொறிக்கப்பட்டுள்ளது என்ற தகவல் கிடைத்துள்ளது.

அதில் எத்தனை பேர் இந்து, இஸ்லாமியர் என்ற கணக்கு இல்லை.

இதன் மூலம், இந்தியா கேட் நினைவு சின்னத்தில் 95 ஆயிரம் பேர் பெயர்கள் பொறிக்கப்பட்டுள்ளது என்றும் அதில் 61,945 பேர் பெயர் இஸ்லாமியர்களுடையது என்ற தகவல் பொய்யானது என்று உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:

தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில், மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவு தவறானது என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம்.

Avatar

Title:“டெல்லி இந்தியா கேட்டில் 61 ஆயிரம் இஸ்லாமிய ராணுவ வீரர்கள் பெயர் உள்ளது!” – ஃபேஸ்புக் பதிவு சரியா?

Fact Check By: Praveen Kumar 

Result: False