குஜராத்தில் ராகுல் காந்தி நடத்திய ரோடு ஷோ எனப்படும் பேரணியைப் பல ஊடகங்கள் மக்களுக்குக் காட்டாமல் மறைத்துவிட்டன என்று குறிப்பிட்டு ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive

ராகுல் காந்தி பங்கேற்ற பேரணி வீடியோ ஃபேஸ்புக்கில் பகிரப்பட்டுள்ளது. வீடியோ மீது குஜராத் என்று ஆங்கிலத்தில் எழுதப்பட்டிருந்தது. நிலைத் தகவலில், "இந்தியாவில் எத்தனை மீடியாக்கள் இதை காட்டியது குஜராத்தில் ராகுல் காந்தி நடத்திய ரோடு ஷோ .... " என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த வீடியோவை பலரும் சமூக ஊடக பக்கங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

உண்மை அறிவோம்:

குஜராத்தில் ராகுல் காந்தி நடத்திய ரோடு ஷோவை ஊடகங்கள் மக்களுக்குக் காட்டவில்லை என்று குறிப்பிட்டுள்ளனர். வீடியோவை பார்க்கும் போது குஜராத் போல தெரியவில்லை. ராகுல் காந்தியின் வாகனத்தை சற்று பெரிதாக்கிப் பார்த்த போது அதில் மலையாளத்தில் எழுதப்பட்டது போல இருந்தது. எனவே, சந்தேகத்தின் அடிப்படையில் இந்த வீடியோவை ஆய்வு செய்தோம்.

இந்த வீடியோவில் இடம்பெற்ற காட்சிகளை புகைப்படங்களாக மாற்றி கூகுள் ரிவர்ஸ் இமேஜ் தேடலில் பதிவேற்றித் தேடினோம். அப்போது இது ராகுல் காந்தியின் வயநாடு ரோடு ஷோ என்பது தெரியவந்தது. வயநாட்டில் நடந்த ரோடு ஷோ என்று குறிப்பிட்டு பலரும் இந்த வீடியோவை தங்கள் சமூக ஊடக பக்கங்களில் பதிவிட்டிருந்தனர்.

ஆங்கில ஊடகங்களின் யூடியூப் பக்கங்களிலும் கூட ராகுல் காந்தியின் வயநாடு ரோடு ஷோ என்று குறிப்பிட்டு வீடியோக்கள் பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது. அதில் உள்ள காட்சிகளும் நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட வீடியோவில் உள்ள காட்சிகளும் ஒத்துப்போயின. தொடர்ந்து வீடியோக்களைத் தேடிக் கொண்டிருந்த போது, ராகுல் காந்தி தன்னுடைய யூடியூப் பக்கத்தில் ரீல்ஸ்-ல் இந்த வீடியோவை பதிவிட்டிருப்பது தெரிந்தது. அதில், மை வயநாடு பரிவார் (My Wayanad Parivar) என்று அவர் குறிப்பிட்டிருந்தார். இந்த வீடியோ 2024 ஏப்ரல் 6ம் தேதி பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது.

நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட வீடியோவில் ஒரு இன்ஸ்டாகிராம் ஐடி இருந்தது. வீடியோவை சற்றபெரிதுபடுத்தி பார்த்தபோது அதில் incgujarat என்று இருந்தது. இந்த வீடியோவை குஜராத் மாநில காங்கிரஸ் கட்சி தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தில் அந்த ஐடி-க்கு சென்று பார்த்தோம். ஏப்ரல் 3, 2024 அன்று இந்த வீடியோவை பதிவேற்றம் செய்திருந்தனர். அதில் ராகுல் காந்தியை வரவேற்ற வயநாடு என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

உண்மைப் பதிவைக் காண: instagram.com

இதன் மூலம் இந்த ரோடு ஷோ நிகழ்ச்சி குஜராத்தில் நடந்தது இல்லை; வயநாட்டில் நடந்த ஒன்று என்பது உறுதியாகிறது.

முடிவு:

ராகுல் காந்தி வயநாட்டில் பங்கேற்ற ரோடு ஷோ வீடியோவை குஜராத்தில் நடந்தது என்று தவறாக பகிர்ந்திருப்பதை தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில் ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…

Facebook I Twitter I Google News Channel

Avatar

Title:ராகுல் காந்தியின் குஜராத் ரோடு ஷோ என்று பரவும் வீடியோ உண்மையா?

Fact Check By: Chendur Pandian

Result: False