டெல்லியில் கொரோனா பாதித்த இளம்பெண் பேருந்தில் இருந்து வீசப்பட்டாரா?

Coronavirus அரசியல் | Politics இந்தியா | India சமூக ஊடகம் | Social

கொரோனா பீதி காரணமாக பஸ்ஸில் இருந்து இளம் பெண் ஒருவர் வெளியே தள்ளப்பட்டு உயிரிழந்த சம்பவம் டெல்லியில் நடந்தது என்றும், இதை ஊடகங்கள் வேண்டுமென்றே உத்தரப்பிரதேசத்தில் நடந்தது என்று தவறான தகவலை பரப்புவதாக ஒரு பதிவு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

Facebook LinkArchived Link

கொரோனா பீதியால் பஸ்ஸில் இருந்து நடுவழியில் இறக்கிவிடப்பட்டு உயிரிழந்த அன்ஷிகா யாதவ் பற்றி வெளியான செய்தி பதிவுகளுடன் புகைப்பட பதிவு ஒன்று பகிரப்பட்டுள்ளது. அதில், “சம்பவம் நடந்தது டெல்லியில்.. தமிழ் ஊடகங்கள் செய்வதை பாருங்கள் மக்களே! 24 மணி நேரமும் மோடி எதிர்ப்பு, பிஜேபி எதிர்ப்பு. இதற்கு பெயர் ஊடகமா?” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த பதிவை, பாஜக குமரிமாவட்டம் என்ற ஃபேஸ்புக் பக்கத்தில் Manikandan‎ என்பவர் 2020 ஜூலை 12ம் தேதி பகிர்ந்துள்ளார்.

உண்மை அறிவோம்:

கடந்த ஜூன் மாதம் டெல்லியில் இருந்து உத்தரப்பிரதேசத்தில் உள்ள சொந்த ஊருக்குத் திரும்பி இளம் பெண் ஒருவர் கொரோனா அச்சம் காரணமாக பஸ்ஸில் இருந்து கீழே தள்ளிவிடப்பட்டதாகவும், அடுத்த அரை மணி நேரத்தில் அவர் இறந்துவிட்டதாகவும் அதிர்ச்சி செய்தி வெளியானது.

இந்த விவகாரத்தில் மனிதாபிமானம் இல்லாமல் நடந்துகொண்ட நடத்துநர், ஓட்டுநர், பயணிகள், புகாரை எடுக்க மறுத்த மதுரா காவல் துறையினருக்கு பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்த சம்பவம் தொடர்பாக உத்தரப்பிரதேச பாரதிய ஜனதா கட்சி ஆட்சி பற்றியோ, பிரதமர் மோடி பற்றியோ கூறவில்லை. உத்தரப்பிரதேசத்தில் நடந்தது என்று மட்டுமே பதிவிட்டு வருகின்றனர். 

உத்தரப்பிரதேசத்தில் நடந்ததை கூட சொல்லக்கூடாது என்று ஊடகங்களை மிரட்டும் வகையில் இந்த புகைப்பட பதிவு உள்ளது. இந்த சம்பவம் உண்மையில் டெல்லியில் நடந்ததா, டெல்லியில் நடந்த சம்பவத்துக்கு எதற்காக உத்தரப்பிரதேச மாநில மதுரா காவல் துறைக்கு டெல்லி மாநில மகளிர் ஆணையத் தலைவி கடிதம் எழுத வேண்டும் என்று பல கேள்விகள் எழுகின்றன. இந்த சம்பவம் உத்தரப்பிரதேசத்தில் நடந்தது என்பதற்கு என்ன ஆதாரங்கள் உள்ளன என்று ஆய்வு நடத்தினோம்.

timesnownews.comArchived Link

முதலில், இதுதொடர்பான செய்தியைப் பார்த்தோம். டைம்ஸ் நவ் நியூஸ் வெளியிட்ட செய்தியில், “கடந்த ஜூன் 15ம் தேதி உத்தரப்பிரதேச மாநில சாலை போக்குவரத்துக் கழக பஸ்சின் நடத்துநர் மற்றும் ஓட்டுநர், பயணிகள் என அனைவரும் சேர்ந்து டெல்லியைச் சேர்ந்த 19 வயது இளம பெண் ஒருவரை கொரோனா பாதிப்பு சந்தேகம் காரணமாக சாலையில் வீசினர். இந்த சம்பவம் யமுனா எக்ஸ்பிரஸ் சாலையில், உத்தரப்பிரதேச மாநிலம் ஃபரிசாபாத் மாவட்டத்தில் உள்ள சிகோஹாபாத்துக்கு செல்லும் போது நடந்தது. இந்த நிகழ்வுக்குப் பிறகு அரை மணி நேரத்தில் அந்த பெண் உயிரிழந்தார். இது தொடர்பாக மதுரா போலீசில் புகார் அளிக்கப்பட்டது. ஆனால், அவர்கள் எஃப்.ஐ.ஆர் பதிவு செய்ய மறுத்துவிட்டனர். 

டெல்லி பெண்கள் ஆணையத் தலைவி இந்த விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்த வேண்டும் என்று கடந்த ஜூலை 9ம் தேதி உத்தரப்பிரதேச போலீசை கேட்டுக்கொண்டார். அதைத் தொடர்ந்து சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தும்படி மதுரா ஊரகப்பகுதி மாவட்ட சூப்பிரெண்டுக்கு உத்தரவிட்டிருப்பதாக மதுரா எஸ்எஸ்பி கவுரவ் உத்தரவிட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டு இருந்தது.

Archived Link

இதுதொடர்பாக டெல்லி மகளிர் ஆணையத் தலைவி அறிக்கை, பேட்டி ஏதும் அளித்துள்ளாரா என்று தேடினோம். அப்போது உத்தரப்பிரதேச போலீசுக்கு அவர் அனுப்பிய கடிதம் நமக்கு கிடைத்தது.

அதில், “டெல்லியைச் சேர்ந்த இளம் பெண் உத்தரப்பிரதேசத்தில் மரணம் அடைந்தது தொடர்பாக ஊடகங்களில் வந்த செய்தி அடிப்படையில் மகளிர் ஆணையம் தாமாக முன்வந்து வழக்கு பதிவு செய்துள்ளது. கொரோனா நோயாளி என்ற சந்தேகத்தின் பெயரில் மதுரா அருகே அந்த பெண் தூக்கி வீசப்பட்டுள்ளார். இந்த சம்பவம் மதுரா டோல் பிளாசாவுக்கு அருகில் நடந்துள்ளது. அந்த பெண் சம்பவ இடத்தில் இறந்துள்ளார். இது தொடர்பான தகவலை உங்கள் கவனத்துக்கு கொண்டு வருகிறேன். இந்த விவகாரம் தொடர்பாக பதிவு செய்யப்பட்ட முதல் தகவல் அறிக்கை, இந்த விவகாரம் தொடர்பாக யாரேனும் கைது செய்யப்பட்டிருந்தால் அவர்கள் பற்றிய தகவல், போன் நம்பர், இந்த விவகாரம் தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கை தொடர்பான முழு விவரத்தை அளிக்க வேண்டும்” என்று கூறியிருந்தார். மேலும் அந்த கடிதம் உத்தரப்பிரதேச மாநிலம் மதுரா சீனியர் சூப்பிரெண்ட் ஆஃப் போலீசுக்கு அனுப்பப்பட்டிருந்தது. 

டைம்ஸ் ஆஃப் இந்தியாவில் வெளியான செய்தியில், இந்த சம்பவம் மதுராவில் நடந்தது என்பதை போலீஸ் ஒப்புக்கொண்டதற்கான தகவல் கிடைத்தது. அதில், மதுரா சீனியர் போலீஸ் சூப்பிரெண்டு கவுரவ் டைம்ஸ் ஆஃப் இந்தியாவுக்கு அளித்த பேட்டியில், “இறந்த பெண் மாரடைப்பு காரணமாக இறந்தார் என்று உடற்கூறு ஆய்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இருப்பினும் இது தொடர்பாக விசாரணை நடத்தும்படி ரூரல் பகுதி எஸ்பி ஸ்ரீஷ் சந்திராவை கேட்டுக் கொண்டுள்ளேன்” என்றார். அந்த சம்பவம் மதுராவில் நடக்கவே இல்லை என்று அவர் கூறவில்லை.

timesofindia.indiatimes.comArchived Link

நம்முடைய ஆய்வில், இந்த சம்பவம் உத்தரப்பிரதேச மாநிலம் மதுராவில் நடந்ததும், அது தொடர்பாக மதுரா போலீசார் விசாரணை நடத்தி வருவதும் உறுதி செய்யப்பட்டுள்ளது. இளம் பெண் மரணம் டெல்லியில் நடக்கவில்லை என்பது உறுதியாகிறது. 

முடிவு:

தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில், மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவு தவறானது என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049044263) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

Avatar

Title:டெல்லியில் கொரோனா பாதித்த இளம்பெண் பேருந்தில் இருந்து வீசப்பட்டாரா?

Fact Check By: Chendur Pandian 

Result: False