அண்ணாமலை எனக்கு முதுகில் குத்திவிட்டார் என காயத்ரி ரகுராம் கூறினாரா?

அரசியல் சமூக ஊடகம் தமிழ்நாடு

தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை எனக்கு முதுகில் குத்திவிட்டார் என பா.ஜ.க-வைச் சேர்ந்த காயத்ரி ரகுராம் கூறியதாக ஒரு பதிவு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive

பா.ஜ.க-வைச் சேர்ந்தவரும் திரைப்பட நடிகையும், நடன இயக்குநருமான காயத்ரி ரகுராம் புகைப்படத்துடன் பதிவு வெளியிடப்பட்டுள்ளது. முன்னணி ஊடகம் வெளியிட்ட நியூஸ் கார்டு போல உள்ளது. அதில், “அண்ணாமலை எனக்கு முதுகில் குத்திவிட்டார்” என்று இருந்தது. இந்த பதிவை DrKaruththu Kannayiram Aiims என்ற ஃபேஸ்புக் ஐடி கொண்டவர் 2020 மே 20ம் தேதி வெளியிட்டுள்ளார். இவரைப் போல பலரும் இந்த புகைப்படத்தை தங்கள் ஃபேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டுள்ளனர்.

உண்மை அறிவோம்:

முன்னணி ஊடகம் வெளியிடும் யூடியூப் வீடியோ முகப்பு புகைப்படம் போல இந்த படம் உள்ளது. இப்படி ஒரு கருத்தை காயத்ரி ரகுராம் கூறியிருந்தார் அதுபற்றி ஊடகங்களில் செய்தி வந்திருக்கும். ஆனால், அப்படி எந்த ஒரு செய்தியும் வெளியானதாக நினைவில் இல்லை. எனவே, இந்த நியூஸ் கார்டு பற்றி ஆய்வு செய்தோம்.

முதலில் இப்படி ஏதும் கருத்தை காயத்ரி ரகுராம் கூறினாரா என அறிய அவருடைய ட்விட்டர் பக்கத்தை பார்வையிட்டோம். அதில், இந்த நியூஸ் கார்டு போலியானது என்று அவர் குறிப்பிட்டு பதிவிட்டிருந்தார். மற்றபடி காயத்ரி ரகுராம் இப்படி குறிப்பிட்டார் என்று எந்த செய்தியும் நமக்கு கிடைக்கவில்லை.

Archive

“அண்ணாமலை எனக்கு முதுகில் குத்திவிட்டார்” என யூடியூபில் டைப் செய்து தேடினோம். அப்போது Sangamam News என்ற யூடியூப் சேனல் 2022 மே 19ம் தேதி இந்த வீடியோவை வெளியிட்டிருப்பதைக் காண முடிந்தது. அந்த வீடியோவை பார்த்தோம். அதில், “காயத்ரி ரகுராம் வகித்து வந்த பதவியை அண்ணாமலை பறித்துவிட்டார். இதனால் என்னுடைய ஒரே தலைவர் மோடி என காயத்ரி ரகுராம் ட்வீட் வெளியிட்டுள்ளார். மேலும், தான் பெரிதும் நம்பிவந்த பாஜக-வினரே தன் முதுகில் குத்திவிட்டார்கள் என்று தன்னுடைய வன்மத்தை வெளிப்படுத்தி வருகிறார்” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. எந்த இடத்திலும் அண்ணாமலை தன் முதுகில் குத்திவிட்டதாக காயத்ரி ரகுராம் கூறினார் என அந்த வீடியோவிலும் இல்லை. பரபரப்புக்காக, அதிக அளவில் வீடியோவை மக்கள் பார்க்க வேண்டும் என்பதற்காக போலியாக, காயத்ரி ரகுராம் கூறாத வார்த்தைகளைக் கொண்டு தலைப்பு வைத்து விஷமத்தனமாக வீடியோ வெளியிட்டிருப்பது தெரிகிறது.

இந்த வீடியோவின் முகப்பு பக்கத்தை நெட்டிசன்கள் விவரம் புரியாமல் பரப்பி வருகின்றனர். இதன் அடிப்படையில், அண்ணாமலை என் முதுகில் குத்திவிட்டார் என காயத்ரி ரகுராம் கூறியது போன்று பகிரப்படும் பதிவு தவறானது என்று உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:

தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை எனக்கு முதுகில் குத்திவிட்டார் என காயத்ரி ரகுராம் கூறியது போன்று பரவும் பதிவு போலியானது என்பதை தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில் ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…

Facebook I Twitter I Google News Channel

Avatar

Title:அண்ணாமலை எனக்கு முதுகில் குத்திவிட்டார் என காயத்ரி ரகுராம் கூறினாரா?

Fact Check By: Chendur Pandian 

Result: False