மெக்காவுக்கு மாலை போட்டு பாத யாத்திரை செல்ல போகிறேன் என்று இந்து மக்கள் கட்சித் தலைவர் அர்ஜூன் சம்பத் கூறியதாக ஒரு பதிவு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. அது பற்றி ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive

அர்ஜூன் சம்பத் வெளியிட்ட ட்வீட் ஸ்கிரீன்ஷாட் பகிரப்பட்டுள்ளது. அதில், "மக்காவுக்கு மாலை போட்டு பாதயாத்திரை செல்ல போகிறேன்..! - அர்ஜூன் சம்பத்" என்று இருந்தது.

நிலைத் தகவலில், "மாலை போட்டுக்கொண்டு மக்காவுக்கு நீ சென்றால் , உனக்கு சவப்பெட்டியில் வைத்து மாலை போட்டு இந்தியாவுக்கு அனுப்பி விடுவார்கள். Ok va" என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த பதிவை Mohamed Safirullah என்ற ஃபேஸ்புக் ஐடி கொண்ட நபர் 2022 ஜூன் 6ம் தேதி பதிவிட்டுள்ளார். இவரைப் போல பலரும் இதை தங்கள் ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டு வருகின்றனர்.

உண்மை அறிவோம்:

இஸ்லாமியர்கள் இறைத்தூதர் முகமது நபி பற்றி பா.ஜ.க செய்தித் தொடர்பாளர்கள் சர்ச்சைக்குரிய வகையில் கருத்து கூறியது உலகம் முழுவதும் இஸ்லாமியர்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இந்தியா மன்னிப்பு கேட்க வேண்டும் என்று வளைகுடா நாடுகள் உள்ளிட்ட இஸ்லாமிய நாடுகள் வலியுறுத்தி வருகின்றன. அதற்கு பதிலடியாக மக்காவுக்கு பாத யாத்திரை செல்லப் போகிறேன் என்று இந்து மக்கள் கட்சித் தலைவர் அறிவித்தது போன்று ட்வீட் பதிவு பகிரப்பட்டு வருகிறது.

அர்ஜூன் சம்பத் புகைப்படம், அவருடைய புகைப்படத்துடன் ட்வீட் பதிவின் ஸ்கிரீன்ஷாட் பகிரப்பட்டுள்ளது. எனவே, இதை அர்ஜூன் சம்பத் தான் வெளியிட்டார் என்று கருதி பலரும் அர்ஜூன் சம்பத்துக்கு எதிராக கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.

அர்ஜூன் சம்பத் பெயரில் போலியாக ட்விட்டர் அக்கவுண்ட் தொடங்கி அதில் விஷமத்தனமான பதிவுகளை சிலர் வெளியிட்டு வருகின்றனர். அந்த ட்வீட்டர் அக்கவுண்டில் வெளியான பதிவை உண்மை என்று நம்பி பகிர்ந்திருக்கலாம் என்ற அடிப்படையில் ஆய்வு தொடங்கினோம். அர்ஜூன் சம்பத்தில் ட்விட்டர் பக்கத்தைப் பார்வையிட்டோம். @imkarjunsampath என்ற முகவரி கொண்ட அந்த ட்விட்டர் பக்கத்தில் ஜூன் 6, 2022 அன்று விஷமத்தனமான பதிவு இல்லை.

https://twitter.com/Arjun_sampath_/status/1533742853611876353

Archive

அதே நேரத்தில் நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட ஸ்கிரீன்ஷாட் ட்வீட் பதிவில் குறிப்பிடப்பட்ட @Arjun_sampath_ என்ற அக்கவுண்டை பார்த்தோம். அதில், Satire (நையாண்டி) பக்கம் என்று குறிப்பிட்டிருந்தனர். இந்த ட்விட்டர் அக்கவுண்டில் நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட ட்வீட் பதிவு இருந்தது. இதன் மூலம் மக்காவுக்கு பாதயாத்திரை செல்ல உள்ளேன் என அர்ஜூன் சம்பத் கூறியதாக பரவும் தகவல் தவறானது என்பது உறுதியாகிறது.

இந்த போலியான ட்விட்டர் பக்கம் தொடர்பாக முன்பே நாம் கட்டுரை வெளியிட்டிருந்தோம். தற்போது மீண்டும் அந்த போலியான நையாண்டிக்காக உருவாக்கப்பட்ட ட்விட்டர் அக்கவுண்டில் வெளியான ட்வீட் பதிவை பலரும் பகிர்ந்து வருவதைக் காண முடிகிறது. பிரபலங்கள், தலைவர்கள் பெயரில் போலியான ட்விட்டர் அக்கவுண்ட் தொடங்குவதைத் தடுப்பதன் மூலம் மட்டுமே இது போன்ற வதந்திகள் பரப்பப்படுவதைத் தவிர்க்க முடியும்.

முடிவு:

மக்காவுக்கு பாதயாத்திரை செல்ல உள்ளேன் என அர்ஜூன் சம்பத் கூறியதாக பரவும் ட்வீட் ஸ்கிரீன்ஷாட் போலியானது என்பதை தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில் ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…

Facebook I Twitter I Google News Channel

Avatar

Title:மெக்காவுக்கு பாத யாத்திரை செல்கிறேன் என்று அர்ஜூன் சம்பத் கூறினாரா?

Fact Check By: Chendur Pandian

Result: False