FACT CHECK: கொரோனா வார்டில் ஆய்வு… மோடி – ஸ்டாலின் படத்தை ஒப்பிட்டு விஷமத்தனம்!

அரசியல் சமூக ஊடகம் தமிழ்நாடு

கொரோனா வார்டில் பிரதமர் மோடி, முதல்வர் ஸ்டாலின் ஆய்வு செய்ததற்கு இடையே உள்ள வேறுபாடு என்று இரண்டு படங்களை ஒப்பிட்டு சமூக ஊடகங்களில் பதிவு பகிரப்பட்டு வருகிறது. அது பற்றி ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

அசல் பதிவைக் காண: Facebook I Archive

பிரதமர் மோடி கல்வான் பள்ளத்தாக்கில் சீன ராணுவத்துடன் நடந்த மோதலில் காயம் அடைந்த இந்திய ராணுவ வீரர்களுடன் பிரதமர் மோடி பேசும் புகைப்படம் மற்றும் கோவையில் கொரோனா வார்டில் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்ட படங்களை இணைத்துப் பதிவிடப்பட்டுள்ளது. நிலைத் தகவலில் “இதுதான் நிஜத்துக்கும் நடிப்புக்கும் உள்ள வித்தியாசம்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த பதிவை O Mani Kandan என்பவர் 2021 மே 30 அன்று பதிவிட்டுள்ளார். இவரைப் போல பலரும் பதிவிட்டு வருகின்றனர்.

உண்மை அறிவோம்:

மோடி முகக் கவசம் அணிந்த நோயாளிகள் மத்தியில் பேசும் படத்தையும் மு.க.ஸ்டாலின் பிபிடி எனப்படும் பாதுகாப்பு கவசம் அணிந்து கொரோனா வார்டில் ஆய்வு செய்த படத்தை பகிர்ந்துள்ளனர். நிலைத் தகவலில் “இதுதான் நிஜத்துக்கும் நடிப்புக்கும் உள்ள வித்தியாசம்” என்று மட்டுமே குறிப்பிடப்பட்டுள்ளது.

இதைப் பார்க்கும் போது பிரதமர் மோடி நோயாளிகளுக்கு நெருக்கமாக சென்று ஆய்வு செய்தது போலவும், ஆய்வு செய்வது போல நடிக்கும் மு.க.ஸ்டாலின் தள்ளி நின்று நோயாளிகளை பார்ப்பது போன்றும் மறைமுகமான கருத்தை பரப்பி வருகின்றனர்.

மு.க.ஸ்டாலின் கோவையில் உள்ள இ.எஸ்.ஐ மருத்துவமனையில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளை ஆய்வு செய்த செய்தி தற்போது வைரலாக பரவி வருகிறது. எனவே, தற்போதைய சூழலில் அதை பற்றி ஆய்வு செய்ய வேண்டியது இல்லை. முன்னணி ஊடகங்கள் உள்பட எல்லா ஊடகங்களுமே இந்த செய்தியை வெளியிட்டுள்ளன. இந்த படம் மற்றும் தகவல் மு.க.ஸ்டாலின் ட்விட்டர் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

Archive

பிரதமர் மோடி உரையாடுவது கொரோனா நோயாளிகளுடனா என்று மட்டுமே ஆய்வு செய்ய வேண்டியிருந்தது. இந்த புகைப்படம் 2020ம் ஆண்டு லடாக்கில் கல்வான் பள்ளத்தாக்கில் சீன ராணுவத்துடனான மோதலில் காயம் அடைந்த இந்திய வீரர்களை பிரதமர் மோடி சந்தித்த புகைப்படம். எனவே, அதை உறுதி செய்வதற்கான ஆதாரங்களைத் தேடினோம்.

Archive

பிரதமர் மோடி, கல்வான் என சில கீ வார்த்தைகளை கூகுளில் டைப் செய்து தேடினோம். அப்போது பிரதமர் மோடி ராணுவ வீரர்களை சந்தித்து பேசியது தொடர்பான செய்திகள் கிடைத்தன. இவற்றுக்கு இடையே நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட மோடி புகைப்படத்துடன் கூடிய ஏஎன்ஐ செய்தி நிறுவனம், பாரதிய ஜனதா கட்சி உள்ளிட்டவை வெளியிட்ட ட்வீட் பதிவுகளும் கிடைத்தன.

அவற்றில், “ஜூன் 15ம் தேதி கல்வான் பள்ளத்தாக்கு மோதலில் காயம் அடைந்த வீரர்களை பிரதமர் மோடி சந்தித்து அவர்கள் மத்தியில் பேசினார்” என்று குறிப்பிடப்பட்டு இருந்தது.

Archive

பிரதமர் மோடி வீரர்கள் மத்தியில் பேசிய செய்தி வெளியான போது, அது மருத்துவமனையே கிடையாது. பிரதமர் வருகையையொட்டி மருத்துவமனை செட் அப் செய்யப்பட்டுள்ளது என்று சில விமர்சனம் எழுந்தது. அதற்கு ராணுவம் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டு இருந்தது. தற்போது கொரோனா வழிகாட்டுதல் அமலில் உள்ள சூழலில் பொது மருத்துவமனை சிறப்பு தனிமைப்படுத்தல் மையமாக மாற்றப்பட்டுள்ளது. வீரர்கள் தங்கவைக்கப்பட்டுள்ள இந்த இடம் வழக்கமாக ஆடியோ – வீடியோ பயிற்சி அரங்காக பயன்படுத்தப்பட்டு வந்தது.

கொரோனா சிகிச்சை மையமாக இந்த மருத்துவமனை மாற்றப்பட்டதைத் தொடர்ந்து, இந்த அரங்கமும் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் வகையில் மாற்றப்பட்டுள்ளது. கல்வான் பள்ளத்தாக்கிலிருந்து வந்தவர்கள் என்பதால் இந்த வீரர்கள் சுய தனிமைப்படுத்தலுக்காக இந்த அரங்கில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்” என்று விளக்கம் அளிக்கப்பட்டு இருந்தது. இதன் மூலம் இவர்கள் கொரோனா நோயாளிகள் இல்லை என்பது உறுதியாகிறது.

Archive 1 I thehindu.com I Archive 2

சீன ராணுவத்துடனான மோதலில் காயம் அடைந்த ராணுவ வீரர்களை பிரதமர் மோடி சந்தித்த படத்தை, மு.க.ஸ்டாலின் கொரோனா நோயாளிகளை சந்தித்த படத்துடன் ஒப்பிட்டு சமூக ஊடகங்களில் பதிவிடப்பட்டுள்ளது தவறான புரிதலை ஏற்படுத்தும் வகையில் அமைந்துள்ளது. இதன் அடிப்படையில் இந்த பதிவு தவறானது என்று உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:

ஸ்டாலின் கொரோனா வார்டை ஆய்வு செய்த படத்தை, மோடி கல்வான் தாக்குதலில் காயம் அடைந்த இந்திய ராணுவ வீரர்களுடன் பேசிய படத்துடன் ஒப்பிட்டு தவறான அர்த்தம் ஏற்படும் வகையில் பதிவிடப்பட்டிருப்பதை ஃபேக்ட் கிரஸண்டோ உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

Avatar

Title:கொரோனா வார்டில் ஆய்வு… மோடி – ஸ்டாலின் படத்தை ஒப்பிட்டு விஷமத்தனம்!

Fact Check By: Chendur Pandian 

Result: False

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •