
பாகிஸ்தானின் அணுசக்தி கட்டளை மையம் அருகே இந்தியாவின் பிரம்மோஸ் ஏவுகணை விழுந்ததில் ஏற்பட்ட பாதிப்பு என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:
உண்மைப் பதிவைக் காண: threads.com I Archive
விமானநிலையம் மற்றும் பல இடங்களில் மிகப் பெரிய அளவில் ராணுவ தாக்குதல் நடத்தப்பட்டதன் வீடியோ பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “இந்தியாவின் பிரம்மோஸ் ஏவுகணை பாகிஸ்தானின் NCA தலைமையகத்திற்கு அடுத்துள்ள அணுசக்தி கட்டளை மையத்திற்கு அருகில் விழுந்தது.
இந்தத் தாக்குதலால் இஸ்லாமாபாத் மிகவும் அதிர்ச்சியடைந்து, தலையிடக் கோரி அமெரிக்காவிற்கு ஓடினர்.
பாகிஸ்தானில் மருத்துவ அவசரநிலை, அணு கதிர்வீச்சு பரவி வருகிறது” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த பதிவை பலரும் சமூக ஊடகங்களில் பதிவிட்டு வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
பாகிஸ்தான் மீது இந்தியா மேற்கொண்ட ஆபரேஷன் சிந்தூர் தாக்குதலில் பாகிஸ்தானின் அணுசக்தி கட்டளை மையம் பாதிக்கப்பட்டதாக வீடியோ ஒன்றைப் பலரும் பதிவிட்டு வருகின்றனர். வீடியோவில் அரபி மொழியில் தகவல் இருந்தது. வீடியோவை பார்க்க மத்திய கிழக்கு நாடுகளில் நடக்கும் தாக்குதல் போல உள்ளது. எனவே, சந்தேகத்தின் அடிப்படையில் இந்த வீடியோவை ஆய்வு செய்தோம்.
வீடியோவில் இடம் பெற்ற அரபு மொழியில் வெளியான செய்தியை கூகுள் டிரான்ஸ்லேட்டர் உதவியுடன் மொழிமாற்றம் செய்து பார்த்தோம். அதில், “சனா சர்வதேச விமான நிலையம் (Sanaa International Airport) மீது அமெரிக்க – இஸ்ரேலிய படைகள் நடத்திய தாக்குதல்” என்று இருந்தது. பாகிஸ்தானில் இஸ்ரேல், அமெரிக்க ராணுவ தாக்குதல் எதுவும் நடக்கவில்லை. சனா சர்வதேச விமான நிலையம் எங்கு உள்ளது என்று தேடிய போது அது ஏமன் நாட்டில் இருப்பது தெரியவந்தது. இதன் மூலம் இந்த வீடியோ பாகிஸ்தானில் இந்தியா நடத்திய தாக்குதலின் பாதிப்பு வீடியோ இல்லை என்பது உறுதியானது.
அடுத்ததாக நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட வீடியோ காட்சிகளைப் புகைப்படங்களாக மாற்றி கூகுள் லென்ஸ் தளத்தில் பதிவேற்றித் தேடினோம். அப்போது, The Straits Times என்ற ஊடகம் மே 7, 2025 அன்று யூடியூபில் பதிவிட்டிருந்தது தெரியவந்தது. அதில், ஏமன் விமானநிலையத்தின் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதல் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பாக வெளியான பல செய்திகள், வீடியோக்களையும் காண முடிந்தது. இவை எல்லாம் நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட பதிவு தவறானது என்பதை உறுதி செய்தன.
முடிவு:
ஏமன் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலின் காட்சியை பாகிஸ்தான் அணுசக்தி மையம் அருகே இந்தியா நடத்திய தாக்குதலின் காட்சி என்று தவறாக பகிர்ந்திருப்பதை தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில் ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.
சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…
Facebook I X Post I Google News Channel I Instagram

Title:பாகிஸ்தான் அணுசக்தி மையம் அருகே நடத்தப்பட்ட தாக்குதல் என்று பரவும் வீடியோ உண்மையா?
Fact Check By: Chendur PandianResult: False
