வங்கதேசத்தில் காளி சிலை உடைக்கப்பட்டது என்று பரவும் வீடியோ உண்மையா?

False சர்வதேசம் | International

வங்கதேசத்தில் இந்துக்கள் தாக்கப்பட்டு காளி சிலை உடைக்கப்படுகிறது என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive

பிரம்மாண்ட காளி சிலை மீது ஏறி அதன் தலையை உடைத்து எடுக்கும் வீடியோ ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “#SaveBangladeshiHindus

ஒன்றரை கோடி இந்துக்கள் வாழும் பங்களாதேஷ் நாட்டில் இந்து கோயில்கள் அடித்து உடைக்கப்படுகிறது. இந்துக்கள் நாடோடிகளாக விரட்டப்படுகிறார்கள்.

உணர்வுள்ள இந்துக்களே உங்கள் ஒற்றுமையை காட்டுங்கள்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த வீடியோவை பலரும் சமூக ஊடகங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

உண்மை அறிவோம்:

வங்கதேசத்தில் கடந்த ஆகஸ்ட் மாதம் ஏற்பட்ட உள்நாட்டு கலவரத்தைத் தொடர்ந்து அங்கு இந்துக்கள் தாக்கப்பட்டு வருவதாக செய்திகள் வெளியாகி வருகிறது. அதன் அடிப்படையில் சமூக ஊடகங்களில் பல வீடியோக்கள் பகிரப்பட்டு வருகின்றன. அவற்றில் பெரும்பாலானவை வதந்தியாகவே உள்ளது. இந்த நிலையில் இந்து கோவில் உடைக்கப்படுவதாகவும், அதனால் இங்குள்ள இந்துக்கள் ஒன்று சேர்ந்து சிறுபான்மையினரைத் தாக்க வேண்டும் என்பது போல வன்முறையைத் தூண்டும் வகையில் பதிவிட்டுள்ளனர். இந்த வீடியோ உண்மையா என்று அறிய ஆய்வு செய்தோம்.

வீடியோ காட்சியை புகைப்படங்களாக மாற்றி கூகுள் லென்ஸ் தளத்தில் பதிவேற்றித் தேடினோம். வங்கதேசத்தில் காளி கோவில் உடைக்கப்பட்டதாக செய்தி எதுவும் கிடைக்கவில்லை. ஆனால் தீவிர வலதுசாரிகள் தங்கள் சமூக ஊடக பக்கங்களில் இது வங்கதேசத்தில் நடந்தது என்று குறிப்பிட்டுப் பதிவிட்டிருந்தது மட்டுமே கிடைத்தது.

உண்மைப் பதிவைக் காண: dainikstatesmannews.com I Archive

வெவ்வேறு புகைப்படங்களை மாற்றி மாற்றி பல்வேறு ரிவர்ஸ் இமேஜ் தேடல் இணையதளங்களில் பதிவேற்றித் தேடிய போது, நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட வீடியோவில் உள்ளது போன்ற காளி சிலையுடன் வங்க மொழியில் வெளியான செய்தி ஒன்று கிடைத்தது. அதை மொழிபெயர்ப்பு செய்து பார்த்த போது, அது இந்தியாவின் மேற்கு வங்கம் மாநிலத்தில் உள்ள சுல்தான்பூர் என்ற இடத்தில் காளி கோவில் என்பது தெரியவந்தது. 

உண்மைப் பதிவைக் காண: Facebook 

அதில், “சுல்தான்பூரில் உள்ள காளி கோவிலில் இந்தியாவில் வேறு எங்கும் இல்லாத வகையில் வழிபாடு செய்யப்படுகிறது. 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை காளி சிலை உடைத்து குளத்தில் கரைக்கப்பட்டு, மீண்டும் பிரம்மாண்டமான முறையில் அமைக்கப்படும். இதில் இந்துக்கள், இஸ்லாமியர்கள் என அனைவரும் மத வேறுபாடுகள் இன்றி பங்கேற்கின்றனர். இந்த வழிபாட்டு முறை 600 ஆண்டுகளுக்கு மேலாக நீடிக்கிறது” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. மேலும், “12 அடி உயர காளி சிலை உடைக்கப்பட்டு, உடைக்கப்பட்ட பாகங்கள் வண்ணமயமான ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டது” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. 

இந்த செய்தியின் தலைப்பை ஃபேஸ்புக் Search-ல் அப்படியே காப்பி – பேஸ்ட் செய்து தேடினோம். அப்போது, இந்த வீடியோவை Provat Deyasi Akshay என்ற ஐடி கொண்டவர் நவம்பர் 27ம் தேதி பதிவேற்றம் செய்திருந்ததைக் காண முடிந்தது. அதனுடன் உடைக்கப்பட்ட காளி சிலையின் பகுதியை மக்கள் தலையில் சுமந்து ஊர்வலமாக கொண்டு செல்வது உள்ளிட்ட மேலும் பல காணொளிகளைப் பதிவிட்டிருந்தார். வங்க மொழியில் வெளியான பதிவை மொழி மாற்றம் செய்து பார்த்த போது, “12 ஆண்டுகளுக்குப் பிறகு அன்னை காளியை மூழ்க வைத்தல்” என்று அர்த்தம் வந்தது. 

அதே போன்று காளி தலையுடன் நடனமாடிக்கொண்டு பக்தர்கள் ஊர்வலமாக சென்ற மற்றொரு வீடியோவும் கிடைத்தது. இவை எல்லாம் இந்த வீடியோ வங்கதேசத்தைச் சார்ந்தது இல்லை என்பதை உறுதி செய்தன. மேற்கு வங்கத்தில் சுல்தான்பூர் என்ற ஊரில் காளி கோவில் (Sultanpur, Khandaghosh, East Burdwan) உள்ளதா என்று கூகுள் மேப்பில் தேடினோம். அங்கு காளி கோவில் இருப்பதும், அக்டோபரில் விழா நடந்தது என்று சமூக ஊடகங்களில் பகிரப்பட்ட வீடியோவில் இருந்த கோவிலுடன் அது ஒத்துப்போனதும் காண முடிந்தது. 

Google Map

இதன் அடிப்படையில் நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட பதிவு தவறானது கலவரத்தை ஏற்படுத்தும் நோக்கில் பொய்யான தகவல் பகிரப்பட்டுள்ளது என்பது உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:

மேற்கு வங்கத்தில் உள்ள காளி கோவில் ஒன்றில் நடந்த சிலை உடைப்பு மற்றும் மறு பிரதிஷ்டை நிகழ்ச்சியின் வீடியோவை எடுத்து, வங்கதேசத்தில் காளி சிலை உடைக்கப்படுகிறது என்று தவறாக சமூக ஊடகங்களில் பகிர்ந்திருப்பதை தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில் ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…

Facebook I X Post I Google News Channel I Instagram

Avatar

Title:வங்கதேசத்தில் காளி சிலை உடைக்கப்பட்டது என்று பரவும் வீடியோ உண்மையா?

Fact Check By: Chendur Pandian 

Result: False