உ.பி-யில் கர்நாடகக் கொடியை எரித்து பா.ஜ.க-வினர் ஆர்ப்பாட்டம் என்று பரவும் புகைப்படம் உண்மையா?
கனடாவைக் கண்டித்து கனடா கொடிக்குப் பதில் கர்நாடக கொடியை எரித்து உத்தரப்பிரதேச பா.ஜ.க-வினர் போராட்டம் நடத்தினர் என்று ஒரு புகைப்படம் சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. அது பற்றி ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:
உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive 1 I Archive 2
நியூஸ் கார்டு போன்று ஒன்றை வைத்து பதிவு உருவாக்கப்பட்டுள்ளது. அதில் கர்நாடக கொடியை எரிப்பது போன்று புகைப்படம் உள்ளது. மேலும், "கர்நாடக கொடியை எரித்த உ.பி. பாஜகவினர். இந்தியா - கனடா நாடுகளுக்கு இடையே ராஜாங்க உறவு மோசமடைந்தை அடுத்து கனடா நாட்டின் கொடிக்கு பதிலாக கர்நாடக மாநிலக் கொடியை எரித்த உத்தர பிரதேசம் கோரக்பூர் மாவட்ட பாஜகவினர்" என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்த பதிவை Rocky Rk என்ற ஃபேஸ்புக் ஐடி கொண்டவர் 2023 செப்டம்பர் 24ம் தேதி பதிவிட்டுள்ளார். இதை பலரும் ஷேர் செய்து வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
உத்தரப்பிரதேசத்தில் கனடாவுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் கர்நாடக மாநில கொடியை எரித்ததாக குறிப்பிட்டு பலரும் இந்த படத்தை பகிர்ந்து வருகின்றனர். அதுவும் உத்தரப்பிரதேச முதல்வரின் தொகுதி உள்ள கோரக்பூர் மாவட்டத்தில் பாஜக-வினர் இந்த போராட்டம் நடத்தியதாகக் குறிப்பிட்டுள்ளனர். இந்த தகவல் உண்மையா என்று ஆய்வு செய்தோம்.
படத்தை கூகுள் ரிவர்ஸ் இமேஜ் தேடலில் பதிவேற்றித் தேடினோம். அப்போது சில ஆண்டுகளுக்கு முன்பு இந்த புகைப்படத்தை செய்தி ஊடகம் ஒன்று வெளியிட்டிருப்பதைக் காண முடிந்தது. அதில் எல்லை பிரச்னை தொடர்பாக கர்நாடகத்தின் கொடியை சிவசேனா தொண்டர்கள் எரித்தனர். அதற்கு கர்நாடக சினிமா பிரபலங்கள் கண்டனம் தெரிவித்தனர் என்று குறிப்பிடப்பட்டிருந்தது.2021 டிசம்பர் 17ம் தேதி இந்த செய்தி மற்றும் புகைப்படம் பதிவிடப்பட்டிருந்தது.
உண்மைப் பதிவைக் காண: thehansindia.com I Archive
படத்தில் உள்ளவர்கள் கழுத்தில் சிவ சேனா கட்சியின் துண்டு தொங்குவதைக் காண முடிகிறது. சிவ சேனா தொண்டர்கள் கர்நாடக கொடியை எரித்தது தொடர்பாக பல்வேறு வீடியோக்களும் நமக்குக் கிடைத்தன. இவை எல்லாம் இந்த புகைப்படம் 2023ல் கனடா அரசைக் கண்டித்து உ.பி பா.ஜ.க-வினர் நடத்திய போராட்டத்தில் கர்நாடக மாநில கொடி எரிக்கப்பட்டதாகப் பரவும் புகைப்படம் தவறானது என்பது உறுதியானது.
அடுத்து உத்தரப்பிரதேச மாநிலம் கோரக்பூர் மாவட்ட பாஜக சார்பில் கனடா அரசைக் கண்டித்து போராட்டம் நடத்தப்பட்டதா, அதில் கர்நாடக கொடி எரிக்கப்பட்டதா என்று தேடிப் பார்த்தோம். கனடா நாட்டை கண்டித்து போராட்டம் நடத்தப்பட்டதாகக் கூட எந்த ஒரு செய்தியும் நமக்குக் கிடைக்கவில்லை. இதன் அடிப்படையில் இந்த தகவல் மற்றும் புகைப்படம் என இரண்டும் தவறானது என உறுதியானது!
முடிவு:
உத்தரப்பிரதேசத்தில் கனடா கொடியை எரிப்பதற்கு பதில் கர்நாடக கொடியை எரித்த பாஜக-வினர் என்று பரவும் படம் தவறானது என்பதை தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில் ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.
சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…
Facebook I Twitter I Google News Channel
Title:உ.பி-யில் கர்நாடகக் கொடியை எரித்து பா.ஜ.க-வினர் ஆர்ப்பாட்டம் என்று பரவும் புகைப்படம் உண்மையா?
Written By: Chendur PandianResult: False