புலம்பெயர் தொழிலாளர்கள் சாலையில் படுத்து உறங்கும் புகைப்படமா இது?

அரசியல் இந்தியா சமூக ஊடகம்

கொரோனா ஊரடங்கு காலத்தில் உத்தரப் பிரதேசத்தில் புலம்பெயர் தொழிலாளர்கள் சாலையில் படுத்து தூங்கிய புகைப்படம் என்று ஒரு படம் சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. அதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

Facebook LinkArchived Link

சாலை ஓரத்தில் குடும்பத்தோடு சிலர் படுத்து தூங்கும் புகைப்படம் பகிரப்பட்டுள்ளது. நிலைத்தகவலில் “இது நாட்டை ஆளத் தகுதியற்ற பிஜேபி கண்ட புதிய இந்தியா…! உ.பியில் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. 

இந்த பதிவை Sehana Kss என்பவர் 2020 மே 19ம் தேதி பகிர்ந்துள்ளார். இரண்டு மாதங்கள் ஆன நிலையில் தற்போதும் இந்த புகைப்படம் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது.

உண்மை அறிவோம்:

கொரோனா ஊரடங்கு அறிவிக்கப்பட்ட பிறகு லட்சக் கணக்கான தொழிலாளர்கள் தங்கள் சொந்த ஊருக்கு கால்நடையாகவே திரும்பினர். இது தொடர்பாக நீதிமன்றம் தலையிட்ட நிலையில் தொழிலாளர் சிறப்பு ரயில்கள், பஸ்கள் இயக்கப்பட்டன. புலம்பெயர் தொழிலாளர்கள் தங்கள் சொந்த ஊர் சேர்ந்த நிலையில் ஜூலை 2020ல்ம் இந்த படம் பகிரப்பட்டு வரவே இது உண்மையா என்று ஆய்வு செய்தோம்.

படத்தைக் கூர்ந்து கவனிக்கும்போது அருகில் குடிசைப்பகுதி போலத் தெரிகிறது. படுத்திருக்கும் யாருக்கு அருகிலேயும் சொந்த ஊர் திரும்பும் தொழிலாளர்களிடம் உள்ளது போன்று சூட்கேஸ், பை எதுவும் இல்லை. மேலும் படத்தில் உள்ள வாகனங்கள் எல்லாம் 10 – 20 ஆண்டுகளுக்கு முன்பு பயன்பாட்டில் இருந்த வேன், லாரி போலத் தெரிகிறது. எனவே, வேறு இடத்தில் எடுக்கப்பட்ட படத்தை இப்போது புலம்பெயர் தொழிலாளர் சம்பவத்தோடு தொடர்புபடுத்தி பகிர்ந்திருக்கலாம் என்று தெரிந்தது.

psihoyos.photoshelter.comArchived Link

படத்தை ரிவர்ஸ் இமேஜ் தேடலில் பதிவேற்றித் தேடினோம். பலரும் இந்த படத்தை தற்போதைய சூழலுடன் தொடர்புபடுத்தி பகிர்ந்திருந்தனர். இவற்றுக்கு நடுவே பம்பாயில் வீடற்ற மக்கள் சாலையில் படுத்து தூங்குகின்றனர் என்று psihoyos.photoshelter.com என்ற ஒரு இணையதளத்தில் இந்த படம் பகிரப்பட்டிருந்தது. இந்த படம் Louie Psihoyos என்பவர் அல்லது நிறுவனத்தால் காப்பி ரைட் பெறப்பட்டதாகவும் குறிப்பிடப்பட்டு இருந்தது. ஆனால், இந்த புகைப்படம் எப்போது எடுக்கப்பட்டது என்ற தகவல் அதில் இல்லை.

பம்பாய் பெயரை மும்பை என்று மாற்றிப் பல ஆண்டுகள் ஆகும் நிலையில், இது பழைய படமாக இருக்கலாம் என்ற சந்தேகம் வந்தது.

வேறு ஏதாவது பதிவு உள்ளதா என்று வேறு தேடு பொறியில் பதிவேற்றித் தேடினோம். அப்போது அஸ்ஸாம் மக்களுக்காக பிரார்த்தனை செய்யுங்கள் என்று ஒரு வீடியோ 2019ம் ஆண்டு யூடியூபில் பதிவேற்றம் செய்யப்பட்டு இருந்ததைக் காண முடிந்தது. Hassan’s Official என்ற யூடியூப் பக்கம் 2019 ஜூலை 16ம் தேதி வெளியிட்ட வீடியோ ஒன்றில் இந்த புகைப்படம் பயன்படுத்தப்பட்டு இருந்தது. அதற்கும் முன்னதாக 2019 ஜனவரியில் வீடற்றவர்களுக்கு வீடு கட்டிக் கொடுங்கள் என்ற சமூக கருத்தை கூறும் வகையில் இந்த படத்தை ஃபேஸ்புக் பதிவர் ஒருவர் பயன்படுத்தி இருந்ததையும் காண முடிந்தது. Louie Psihoyos காப்பிரைட் செய்யப்பட்ட படத்தை எடுத்து இவர்கள் பயன்படுத்தியிருக்கலாம் என்று தெரிகிறது.

நம்முடைய ஆய்வில்,

இந்த புகைப்படம் பம்பாயில் எடுக்கப்பட்டது என்றும் புகைப்படம் காப்பிரைட் செய்யப்பட்டது என்றும் ஒரு இணையதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

2019ம் ஆண்டு வெளியான யூடியூப் வீடியோவில் இந்த புகைப்படம் பயன்படுத்தப்பட்டுள்ளது உறுதியாகிறது.

இதன் அடிப்படையில் இந்த புகைப்படம் 2020 கொரோனா ஊரடங்கு காலகட்டத்தில் எடுக்கப்பட்டது இல்லை என்று உறுதியாகிறது. மேலும் இந்த புகைப்படம் உத்தரப்பிரதேசத்தில் எடுக்கப்பட்டது இல்லை மும்பையில் எடுக்கப்பட்டது என்றும் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் பழைய படத்தை எடுத்து உ.பி-யில் எடுக்கப்பட்டது என்று தவறான தகவல் சேர்த்து பகிர்ந்திருப்பது உறுதியாகிறது.

முடிவு:

தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில், மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவு தவறானது என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049044263) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

Avatar

Title:புலம்பெயர் தொழிலாளர்கள் சாலையில் படுத்து உறங்கும் புகைப்படமா இது?

Fact Check By: Chendur Pandian 

Result: False