
பீகாரில் ஒரே வாரத்தில் ஐந்து பாலங்கள் இடிந்து விழுந்தது என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:
உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive
பிரம்மாண்ட பாலம் ஒன்று இடிந்து விழும் வீடியோ ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “பீகாரில் இந்த வாரத்தில் மட்டும் ஜந்து பாலங்கள் இடிந்து விழுந்தது பாஜக நிதிஷ் இரட்டை எஞ்சின் ஆட்சி” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த வீடியோவை பலரும் சமூக ஊடகங்களில் பதிவிட்டு வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
பீகாரில் ஒரே வாரத்தில் ஐந்து பாலங்கள் இடிந்து விழுந்தது என்று வீடியோவை சிலர் சமூக ஊடகங்களில் பதிவிட்டு வருகின்றனர். இப்படி ஒரு பிரம்மாண்ட பாலம் பீகாரில் இடிந்து விழுந்ததாக செய்திகள் இல்லை. சிறிய பாலம் இடிந்து விழுந்தாலே அது பற்றி பொிய அளவில் செய்திகள் வெளியாகும் சூழலில், இவ்வளவு பெரிய பாலம் இடிந்திருந்தால் அது பற்றி சிறிய பெட்டிச் செய்தி கூட வெளியாகாமல் இருப்பது சந்தேகத்தை ஏற்படுத்தியது.
பீகார் பாலம் இடிந்தது தொடர்பாக தேடியபோது பல வீடியோக்கள் நமக்கு கிடைத்தன. அதில் எதுவும் நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட வீடியோவுடன் ஒத்துப்போகவில்லை. மேலும், வீடியோவை பார்க்கும் போது செயற்கை நுண்ணறிவு (ஏஐ) மூலம் உருவாக்கப்பட்டது போல உள்ளது. பாலத்தின் தூண் அருகே இரண்டு பேர் நிற்பது போன்று உள்ளது. பாலம் இடிந்து விழும் போது தூண் அருகிலிருந்து சிதறி ஓடுகின்றனர்.
அப்படி ஓடுபவர்கள் திடீரென்று ஒரே நபராக மாறிவிடுகின்றனர். மேலும், சாலையின் மையில் உள்ள கேமரா கோணத்திலிருந்து மட்டுமே பாலம் தெரிகிறது. விழுந்திருந்தால் கேமரா பகுதியில் உள்ள பாலமும் இடிந்து விழுந்திருக்க வேண்டும். ஆனால், அந்த இடத்தில் பாலமே இல்லாதது போல உள்ளது. இவை எல்லாம் சந்தேகத்தை ஏற்படுத்த ஆய்வு செய்தோம்.
வீடியோ காட்சியை புகைப்படங்களாக மாற்றி கூகுள் லென்ஸ் உள்ளிட்ட ரிவர்ஸ் இமேஜ் தேடல் தளங்களில் பதிவேற்றித் தேடினோம். அப்போது ஜூலை 15, 2025 அன்று வெளியான சில ஃபேஸ்புக் பக்கங்களில் இது ஏஐ மூலம் உருவாக்கப்பட்ட வீடியோ என்று குறிப்பிட்டு பதிவிடப்பட்டிருந்தது.
இந்த வீடியோ காட்சிகளை ஏஐ வீடியோக்களைக் கண்டறிய உதவும் hivemoderation.com என்ற இணையதளத்தில் பதிவேற்றித் தேடினோம். அது இந்த வீடியோ 99.9 சதவிகிதம் ஏஐ மூலம் உருவாக்கப்பட்டது தான் என்று உறுதி செய்தது. இவை எல்லாம் நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட பதிவு தவறானது என்பதை உறுதி செய்தன.
முடிவு:
பீகாரில் நிதிஷ் குமார் – பாஜக கூட்டணி ஆட்சியில் கட்டப்பட்ட பாலம் இடிந்து விழுந்தது என்று பரவும் வீடியோ ஏஐ மூலம் உருவாக்கப்பட்டது என்பதை தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில் ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.
சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…
Facebook I X Post I Google News Channel I Instagram

Title:பீகாரில் இடிந்து விழுந்த பாலம் என்று பரவும் வீடியோ உண்மையா?
Fact Check By: Chendur PandianResult: False
