
என் வெற்றிக்குக் காரணம் என் காதலிதான் என்று மு.க.ஸ்டாலின் கூறியதாகவும் அதன் அடிப்படையில் பாத்திமா பாபு புகைப்படத்துடன் புதிய தலைமுறை நியூஸ் கார்டு வெளியிட்டதாக ஒரு பதிவு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:

உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive
புதிய தலைமுறை வெளியிட்டது போன்று மு.க.ஸ்டாலின் – பாத்திமா பாபு ஒன்றாக இருப்பது போன்ற புகைப்படத்துடன் நியூஸ் கார்டு ஒன்று சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. அதில், “என் வெற்றிக்கு காரணம் என் காதலிதான் – முதல்வர் மு.க.ஸ்டாலின்” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த நியூஸ் கார்டை பலரும் சமூக ஊடகங்களில் பதிவிட்டு வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் டி.வி செய்தி வாசிப்பாளராக இருந்து நடிகையாக மாறிய பாத்திமா பாபுவை இணைத்து 35-40 ஆண்டுகளுக்கும் மேலாக வதந்தி பரப்பப்பட்டு வருகிறது. இது பற்றி இருவருமே விளக்கம் அளித்துவிட்டனர். என்னைப் பற்றி நான் சொல்வதுதான் உண்மை என்று பாத்திமா பாபு காட்டமாகவே பதில் அளித்துவிட்டார். ஆனாலும், அதை நாங்கள் நம்பமாட்டோம் என்று விஷமிகள் தொடர்ந்த வதந்தி பரப்பி வருகின்றனர். இது தொடர்பாக நம்முடைய ஃபேக்ட் கிரஸண்டோவில் 2019ம் ஆண்டே கட்டுரை வெளியிட்டிருந்தோம்.
இந்த வதந்தி தொடர்பாக பாத்திமா பாபு அளித்த விளக்கத்தை 2018ம் ஆண்டில் தினமணி வெளியிட்டிருந்தது. அதில், “தூர்தர்ஷனில் செய்தி வாசிப்பாளராக இருந்த சமயத்தில் ஒருமுறை நான் சித்திரப்பாவை எனும் தொடரில் நடிக்க ஒப்புக் கொண்டிருந்தேன். தூர்தர்ஷன் வழக்கப்படி சீரியல் முடியும் வரை எனக்கு செய்தி வாசிக்க வாய்ப்பு அளிக்கப்படவில்லை. அந்த இடைவெளியில் என்னைச் செய்தி வாசிப்பாளராகக் காண முடியாத காரணத்தால் இப்படி ஒரு வதந்தியை பரப்பியிருக்கிறார்கள். சித்திரப்பாவை தொடர் 13 வாரங்களில் முடிந்ததும் நான் மீண்டும் செய்தி வாசிப்பாளராகத் தொடர்ந்தேன்.

உண்மைப் பதிவைக் காண: dinamani.com I Archive
திருமணத்திற்கு முன்பே என் கணவரான பாபு தான் என்னை தூர்தர்ஷன் அலுவலகத்துக்கு அழைத்துச் செல்வதும், வீட்டுக்கு திரும்ப அழைத்துச் செல்வதுமாக இருந்தார். அப்படியிருக்கையில் இப்படி ஒரு வதந்தி எப்படி பரவியது, பரப்பப்பட்டது என்று எனக்குப் புரியவில்லை. நான் அப்போதும், இப்போதும் என்னை இவ்விஷயமாக விசாரிக்கும் எனது நண்பர்களுக்கு மேலே சொன்ன காரணத்தைத் தான் விளக்கமாக அளித்து வருகிறேன்.
அதை நம்புவதும், நம்பாததும் அவரவர் பாடு. ஆனால், இதன் காரணமாக ஒரு கட்சியின் செயல்தலைவராகப் பட்டவரின் கேரக்டரைக் கொலை செய்வது தவறு. நான் விளக்கம் அளித்த பிறகும் சிலர் அதே வதந்தியை உண்மை போலக் கூறி அவரது நற்பெயருக்குக் களங்க விளைவிப்பார்களானால் அதைப் பற்றி நான் ஒன்றும் சொல்வதற்கில்லை. என்னைப் பற்றி நான் சொல்வது தான் உண்மை, அதைத் தான் நீங்கள் நம்ப வேண்டும். அதை விட்டு விட்டு வெளியில் பலரும் கதை கட்டுவதைப் போல மசாலா தடவிய கற்பனைப் பொய்யைத்தான் நம்புவீர்கள் என்றால், அதைப் பற்றி எனக்குக் கவலை இல்லை. அது உங்கள் இஷ்டம். இதற்கு மேல் இதைப் பற்றி கேள்வி வந்தால் நாம் பதில் சொல்வதாக இல்லை” என்று கூறியிருந்தார்.
இந்த நிலையில், என் வெற்றிக்குக் காரணம் என் காதலி என்று மு.க.ஸ்டாலின் கூறியதாக பலரும் சமூக ஊடகங்களில் பதிவிட்டு வருகின்றனர். இப்படி பதிவிடுபவர்கள் யார் என்று பார்க்கும் போது அது ஒரு புதிய கட்சியைச் சார்ந்தவர்கள் என்பது தெரிந்தது. பார்க்கும் போதே இந்த நியூஸ் கார்டு போலியானது என்று தெரிந்தது. ஆதாரங்கள் அடிப்படையில் உறுதி செய்ய ஆய்வு செய்தோம்.

இப்படி ஒரு நியூஸ் கார்டை புதிய தலைமுறை வெளியிட்டிருந்ததா என்று தேடிப் பார்த்தோம். அப்போது, 2025 டிசம்பரில் “என் வெற்றிக்கு காரணம் என் மனைவிதான் – முதல்வர் மு.க.ஸ்டாலின்” என்று குறிப்பிட்டு நியூஸ் கார்டை வெளியிட்டிருந்தது தெரிந்தது. அந்த நியூஸ் கார்டை எடிட் செய்து தவறாகப் பதிவிட்டிருப்பது உறுதியானது.

இதை மேலும் உறுதிசெய்ய புதிய தலைமுறை டிஜிட்டல் பொறுப்பாளருக்கு இந்த நியூஸ் கார்டை அனுப்பினோம். அவரும் இது போலியானது என்று உறுதி செய்தார். மேலும், இந்த போலியான நியூஸ் கார்டு மிகவும் கீழ்த்தரமாக உள்ளது. அதனால் எங்கள் சமூக ஊடக பக்கங்களில் வெளியிட்டுவிட்டு அதை அகற்றிவிட்டோம். வாட்ஸ்அப் சந்தாதாரர்களுக்கு மட்டும் இதை அனுப்பியுள்ளோம்” என்று கூறி அதை நமக்கும் அனுப்பினார். இந்த ஆதாரங்கள் அடிப்படையில் நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட பதிவு தவறானது என்று உறுதி செய்யப்படுகிறது.
முடிவு:
என் வெற்றிக்குக் காரணம் என் காதலிதான் என்று மு.க.ஸ்டாலின் கூறியதாக பரவும் நியூஸ் கார்டு போலியானது என்பதை தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில் ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.
சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…
FacebookI X PostI Google News ChannelI Instagram


