
பஹல்காம் தாக்குதலுக்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா வெட்கப்பட வேண்டும் என்று தமிழ்நாடு பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை கூறியதாக ஒரு நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:
உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive
அண்ணாமலை புகைப்படத்துடன் புதிய தலைமுறை வெளியிட்டது போன்ற நியூஸ் கார்டு ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. அதில், “பஹல்காம் தாக்குதல் அமித்ஷா ஜி வெட்கப்பட வேண்டும். நாடு எங்கே செல்கிறது ஒரு சுற்றுலா பயணிகளை காப்பாத்த முடியல இவர்கள் என்ன ஆட்சி செய்கிறார்கள் வேதனையாக இருக்கிறது! – தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை” என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
நிலைத் தகவலில், “இப்பத்தான் நீங்க ஒரு ஐபிஎஸ் அதிகாரி னு நிரூபிச்சிருக்கீங்க அண்ணாமலை ஜீ !” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த நியூஸ் கார்டை பலரும் சமூக ஊடகங்களில் பகிர்ந்து வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
தமிழ்நாடு பாஜக தலைவராக இருந்த அண்ணாமலை மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை விமர்சித்துப் பேசியதாக நியூஸ் கார்டை பலரும் பகிர்ந்து வருகின்றனர். இதற்கு வாய்ப்பே இல்லை என்பது நமக்கு தெரியும். மேலும், நியூஸ் கார்டின் தமிழ் ஃபாண்ட் வழக்கமாக புதிய தலைமுறை வெளியிடும் நியூஸ் கார்டில் உள்ளது போல இல்லை. மேலும் வாக்கிய அமைப்பிலும் பிழை உள்ளது. இவை எல்லாம் இந்த நியூஸ் கார்டு போலியானது என்பதை உறுதி செய்கின்றன.
ஆதாரங்கள் அடிப்படையில் இதை உறுதி செய்ய ஆய்வு செய்தோம். முதலில் இப்படி ஏதேனும் பேட்டியை அண்ணாமலை அளித்துள்ளாரா என்று கூகுளில் தேடினோம். ஆனால், அப்படி எந்த ஒரு செய்தியும் நமக்குக் கிடைக்கவில்லை. அமித்ஷாவை விமர்சித்திருந்தால் அது மிகப்பெரிய செய்தியாகியிருக்கும். துண்டு செய்தி கூட நமக்குக் கிடைக்கவில்லை.
அடுத்ததாக இந்த நியூஸ் கார்டை புதிய தலைமுறை வெளியிடவில்லை என்பதை உறுதி செய்துகொள்ள ஆய்வு செய்தோம். அதன் சமூக ஊடக பக்கங்களை பார்வையிட்டோம். அதில் நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட நியூஸ் கார்டு இல்லை. 2025 ஏப்ரல் 23ம் தேதி நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்டது போன்ற நியூஸ் கார்டு ஒன்றை புதிய தலைமுறை வெளியிட்டிருந்தது.
அதில், “தகுந்த நேரத்தில் பதிலடி கொடுக்கப்படும்: அண்ணாமலை. பஹல்காம் தாக்குதலுக்கு மத்திய அரசு தகுந்த நேரத்தில் பதிலடி கொடுக்கும். மத்திய அரசு கொடுக்கும் பதிலடி மிகவும் முக்கியமானதாக இருக்கும். அமித்ஷா பதவி விலக வேண்டும் என பேசுபவர்கள் அரசியலுக்காக பேசுகிறார்கள்” என்று இருந்தது.
நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட நியூஸ் கார்டை புதிய தலைமுறை டிஜிட்டல் பொறுப்பாளருக்கு வாட்ஸ்அப் மூலம் அனுப்பினோம். அவரும் இது போலியான நியூஸ் கார்டு என்பதை உறுதி செய்தார். இந்த ஆதாரங்கள் அடிப்படையில் பஹல்காம் தாக்குதல் சம்பவம் தொடர்பாக அமித்ஷா வெட்கப்பட வேண்டும் என்று அண்ணாமலை கூறியதாகப் பரவும் தகவல் மற்றும் நியூஸ் கார்டு தவறானது என்பது உறுதி செய்யப்படுகிறது.
முடிவு:
பஹல்காமில் நடத்தப்பட்ட தாக்குதலுக்கு அமித்ஷா வெட்கப்பட வேண்டும் என்று அண்ணாமலை பேச்சு என்று பரவும் நியூஸ் கார்டு போலியானது என்பதை தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில் ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.
சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…
Facebook I X Post I Google News Channel I Instagram

Title:பஹல்காம் தாக்குதலுக்கு அமித்ஷா வெட்கப்பட வேண்டும் என்று அண்ணாமலை கூறினாரா?
Written By: Chendur PandianResult: False
