
கிரிக்கெட் போட்டியை பார்க்க வந்த பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் ரசிகர்கள் கிரிக்கெட் மைதானத்தில் மோதிக்கொண்டனர் என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. அது பற்றி ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:

உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive
விளையாட்டு மைதானத்தில் இரண்டு தரப்பினர் மோதிக்கொள்ளும் காட்சி பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் இரு அணி ரசிகர்களும் மைதானத்தில் மோதல்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த வீடியோவை Siriskantharasa Nisanth என்ற ஃபேஸ்புக் ஐடி கொண்டவர் 2022 செப்டம்பர் 8ம் தேதி பதிவிட்டுள்ளார். இவரைப் போல பலரும் இந்த வீடியோவை பதிவிட்டு வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
ஆசிய கிரிக்கெட் போட்டி ஐக்கிய அரபு எமிரேட்சில் நடந்து வருகிறது. இதில் பாகிஸ்தான் – ஆப்கானிஸ்தான் இடையே நடந்த போட்டியில் பாகிஸ்தான் வெற்றி பெற்றது. இதைத் தொடர்ந்து பாகிஸ்தான் – ஆப்கானிஸ்தான் ரசிகர்களுக்கு இடையே ஸ்டேடியத்தினுள்ளேயே மோதல் ஏற்பட்டது. இந்த நிலையில், ஆப்கானிஸ்தான் – பாகிஸ்தான் ரசிகர்கள் மோதிக்கொள்ளும் காட்சி என்று பல வீடியோக்கள் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகின்றன.
அந்த வகையில் நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட வீடியோ சற்று வித்தியாசமாக இருந்தது. இந்த ஸ்டேடியத்தை பார்க்கும் போது இங்கிலாந்தில் உள்ள ஸ்டேடியம் போல இருந்தது. ஐக்கிய அரபு எமிரேட்சில் உள்ள ஸ்டேடியம் இப்படி இருப்பதாக வீடியோவில் பார்த்தது இல்லை. தமிழ் ஊடகங்கள் சிலவும் கூட இந்த வீடியோவை பகிர்ந்து வருகின்றன என்பதால் ஆய்வு செய்தோம்.
வீடியோ காட்சிகளை புகைப்படங்களாக மாற்றி, கூகுள் ரிவர்ஸ் இமேஜ் தேடலில் பதிவேற்றித் தேடினோம். அப்போது, இந்த வீடியோ பாகிஸ்தான் – ஆப்கானிஸ்தான் வீரர்களுக்கு இடையே நடந்த மோதல் காட்சிதான். ஆனால் 2022ல் எடுக்கப்பட்டது இல்லை, 2019ம் ஆண்டு எடுக்கப்பட்டது என்று தெரிந்தது. 2019 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் போது பாகிஸ்தான் – ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையே போட்டி நடந்தது. அந்த போட்டியின் போது இரு நாட்டு ரசிகர்களும் மோதிக் கொண்டனர் என்று அந்த வீடியோ 2019ம் ஆண்டு யூடியூபில் பதிவேற்றம் செய்யப்பட்டிருப்பது தெரிந்தது.
அது மட்டுமின்றி இந்த வீடியோவை 2019ம் ஆண்டில் இங்கிலாந்தின் முன்னணி நாளிதழான சன் கூட தன்னுடைய செய்தியில் வெளியிட்டிருந்ததை காண முடிந்தது. அதிலும், உலக கோப்பை கிரிக்கெட் போட்டியின் போது மோதிக்கொண்ட பாகிஸ்தான் – ஆப்கானிஸ்தான் ரசிகர்கள் என்று குறிப்பிட்டிருந்தனர். அந்த செய்தி மற்றும் வீடியோவை காண இங்கே கிளிக் செய்யுங்கள்.
நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட பதிவில், ஆசிய கிரிக்கெட் போட்டியின் போது பாகிஸ்தான் – ஆப்கானிஸ்தான் வீரர்கள் மோதிக் கொண்டனர் என்று குறிப்பிடவில்லை. என்றாலும், 2022 ஆசிய கிரிக்கெட் போட்டியின் போது இரு ரசிகர்களும் மோதிக்கொண்ட சூழலில், இந்த வீடியோ பகிரப்படுவது ஆசிய கிரிக்கெட் போட்டியின் போது எடுக்கப்பட்டது என்ற புரிதலை ஏற்படுத்தும். 2019ம் ஆண்டு உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் போது நடந்த மோதல் என்று குறிப்பிட்டிருந்தால் குழப்பங்களைத் தவிர்த்திருக்கலாம்.
முடிவு:
2019ம் ஆண்டு உலகக் கோப்பையின் போது பாகிஸ்தான் – ஆப்கானிஸ்தான் ரசிகர்கள் மோதிக்கொண்ட வீடியோவை ஆசிய கோப்பை கிரிக்கெட் நடக்கும் சூழலில் பகிர்வது தவறான புரிதலை ஏற்படுத்தும் வகையில் இருப்பதை தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில் ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.
சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…
Facebook I Twitter I Google News Channel

Title:பாகிஸ்தான் – ஆப்கானிஸ்தான் ரசிகர்கள் மோதல் என்று பரவும் பழைய வீடியோ!
Fact Check By: Chendur PandianResult: Missing Context
