FACT CHECK: உத்தரப்பிரதேசம் போல சிறந்த மாநிலமாக தமிழகத்தை மாற்றுவதாக மோடி கூறினாரா?

அரசியல் | Politics சமூக ஊடகம் | Social தமிழ்நாடு | Tamilnadu

தமிழ்நாட்டை உத்தரப் பிரதேசம் போல சிறந்த மாநிலமாக மாற்ற பாஜக – அதிமுக கூட்டணிக்கு வாக்களிக்க வேண்டும் என்று பிரதமர் மோடி கேட்டுக்கொண்டார் என்பது உள்ளிட்ட சில நியூஸ் கார்டுகள் சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறன. அவை பற்றி ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

அசல் பதிவைக் காண: Facebook I Archive

பிரதமர் மோடியின் புகைப்படத்துடன் கூடிய புதிய தலைமுறை நியூஸ் கார்டுகள் பகிரப்பட்டுள்ளன. அதில், “தமிழ்நாட்டை உத்திர பிரதேசம் போல சிறந்த மாநிலமாக மாற்ற பாஜக – அதிமுக கூட்டணியை ஆதரிப்பீர் – பிரதமர் மோடி” என்று குறிப்பிடப்பட்டு இருந்தது. இந்த நியூஸ் கார்டை Senthilkumar Senthil Kumar என்பவர் 2021 மார்ச் 30ம் தேதி பதிவிட்டிருந்தார்.

அசல் பதிவைக் காண: Facebook I Archive

மற்றொரு கார்டில், “எடப்பாடி பழனிசாமி அவர்கள் பாரத தேசத்தின் நலனுக்காக தமிழ்நாட்டின் ஜி.எஸ்.டி பங்கை விட்டுக்கொடுத்த தேசபக்தர் – பிரதமர் மோடி” என்று இருந்தது. இந்த நியூஸ் கார்டை 2021 மார்ச் 30 அன்று Livin Neithal Tamizhan என்பவர் பதிவிட்டிருந்தார். பலரும் இந்த நியூஸ் கார்டுகளை ஷேர் செய்து வருகின்றனர்.

உண்மை அறிவோம்:

பிரதமர் மோடி தாராபுரம் வந்து தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு ஆதரவாக பிரசாரம் செய்து சென்றதைத் தொடர்ந்து அதன் அடிப்படையில் பல நியூஸ் கார்டுகள் சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகின்றன. அந்த வகையில் ஏற்கனவே, தமிழகத்தின் மருத்துவக் கல்லூரிகள் பாரத தேசம் முழுமைக்குமானது. எனவே, நீட் என்பது தேச வளர்ச்சியின் மைல்கல் என்று மோடி கூறியதாக ஒரு நியூஸ் கார்டு வைரல் ஆனது. அது போலியானது என்று கட்டுரை வெளியிட்டிருந்தோம்.

தற்போது அந்த நியூஸ் கார்டுடன் சேர்த்து மேலும் இரண்டு புதிய நியூஸ் கார்டுகளும் சமூக ஊடகங்களில் வைரலாக, பகிரப்பட்டு வருகின்றன. எனவே, அவை பற்றியும் ஆய்வு செய்தோம்.

இந்த நியூஸ் கார்டுகளை புதிய தலைமுறை வெளியிட்டதா என்று அதன் சமூக ஊடக பக்கங்களில் பார்த்தபோது, அதில் அப்படி எதுவும் இல்லை.  “வெற்றிவேல், வீரவேல் என்று தமிழில் கூறி தாராபுரம் பொதுக்கூட்டத்தில் உரையைத் தொடங்கினார் மோடி” என்று வெளியான நியூஸ் கார்டை எடிட் செய்திருப்பது தெரிந்தது.

அசல் பதிவைக் காண: Facebook I Archive

இதே போல் சிம்ப்ளிசிட்டி என்ற இணையதளத்தின் நியூஸ் கார்டு பயன்படுத்தியும் வதந்திகள் பரப்பப்பட்டு வந்தன. இதை நாங்கள் வெளியிடவில்லை இணையதளம் தரப்பில் இருந்து எங்களிடம் விளக்கம் அளித்திருந்தனர்.

அசல் பதிவைக் காண: Facebook I Archive

தாராபுரம் பொதுக் கூட்டத்தில் மோடி பேசிய வீடியோவை ஏற்கனவே கேட்டிருந்தோம். அதில் மோடி இப்படி பேசவில்லை என்பது தெரிந்திருந்தது. அதே போல் தினமலர் வெளியிட்ட செய்தியையும் பார்த்தோம். அதிலும் மோடி இப்படி எல்லாம் கூறவில்லை என்பது தெளிவானது.

அசல் பதிவைக் காண: dinamalar.com I Archive

இந்த இரண்டு கார்டுகளையும் புதிய தலைமுறை டிஜிட்டல் பிரிவு நிர்வாகி சரவணனின் வாட்ஸ் அப் எண்ணுக்கு அனுப்பி சந்தேகம் கேட்டோம். அவரும் இவை போலியானவை என்று உறுதி செய்தார். இதன் அடிப்படையில், உத்தரப்பிரதேசம் போல தமிழகத்தை மாற்றுவோம் என்றும், ஜிஎஸ்டி பங்கை விட்டுக்கொடுத்த முதல்வருக்கு நன்றி என்று மோடி கூறியதாகவும் பரவும் நியூஸ் கார்டுகள் போலியானவை என்று உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:

உத்தரப்பிரதேசத்தைப் போல தமிழகத்தை மாற்ற பாஜக – அதிமுக கூட்டணிக்கு வாக்களிக்கும்படி மோடி பேசியதாக பரவும் நியூஸ் கார்டு போலியானது என்பதை ஃபேக்ட் கிரஸண்டோ உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

Avatar

Title:உத்தரப்பிரதேசம் போல சிறந்த மாநிலமாக தமிழகத்தை மாற்றுவதாக மோடி கூறினாரா?

Fact Check By: Chendur Pandian 

Result: False