
சென்னையில் ரூ.4000ம் கோடி ஒதுக்கியும் மழை நீர் தேங்கியுள்ளது என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:

உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive
மழை நீர் தேங்கி நிற்கும் வீடியோ ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “ஒதுக்கப்பட்ட நிதியை தங்கள் வீட்டுக்கு ஒதுக்கி கொண்டதால் இந்த நிலை… தீர்வு உண்டா மீண்டும் திமுக ஆட்சிக்கு வந்தால்… #4000கோடி_என்னாச்சு” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த வீடியோவை பலரும் சமூக ஊடகங்களில் பதிவிட்டு வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
சென்னையில் ரூ.4000ம் கோடி செலவு செய்தும் மழை நீர் தேங்கி வருகிறது என்று பலரும் தி.மு.க அரசை விமர்சித்து வீடியோ பதிவுகளை சமூக ஊடகங்களில் வெளியிட்டு வருகின்றனர். இப்படி வெளியாகும் சில வீடியோக்கள் தமிழ்நாட்டைச் சார்ந்ததாக இருப்பது இல்லை. சில சமயம் தி.மு.க ஆட்சிக்கு முந்தைய வீடியோக்களை எல்லாம் வைரலாக்கும் போக்கு உள்ளது. எனவே, இந்த வீடியோ தொடர்பாக ஆய்வு செய்தோம்.
நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட வீடியோவை புகைப்படங்களாக மாற்றி கூகுள் லென்ஸ் தளத்தில் பதிவேற்றித் தேடினோம். அப்போது, 2020ம் ஆண்டு இந்த வீடியோவை சிலர் சமூக ஊடகங்களில் பதிவிட்டிருந்ததைக் காண முடிந்தது. அ.தி.மு.க ஆட்சிக் காலத்தில் மழை நீர் வடிகால் அமைக்க ஒதுக்கப்பட்ட நிதியை அ.தி.மு.க நிர்வாகிகள் தங்கள் வீட்டுக்கு ஒதுக்கிக் கொண்டதால் சென்னையில் மழை வெள்ளம் ஏற்பட்டதாக 2020 அக்டோபர் 29ம் தேதி எக்ஸ் தளத்தில் ஒருவர் இந்த வீடியோவை பதிவிட்டிருந்தார்.
2011ம் ஆண்டு மே முதல் 2021 மே முதல் வாரம் வரை தமிழ்நாட்டின் ஆட்சிப் பொறுப்பில் அ.தி.மு.க-தான் இருந்தது. அதிலும் 2020ம் ஆண்டு எடப்பாடி பழனிசாமி தமிழ்நாட்டின் முதலமைச்சராக இருந்தார். 2021 மே மாதம் தான் தமிழ்நாட்டின் முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்றார். எனவே, 2020ம் ஆண்டு ஏற்பட்ட வெள்ளத்திற்கும் 2021ல் பொறுப்புக்கு வந்த தி.மு.க அரசுக்கும் தொடர்பில்லை.
தொடர்ந்து தேடிய போது சென்னை திருவல்லிக்கேணியில் இந்த வீடியோ எடுக்கப்பட்டதாக வெளியான யூடியூப் பதிவு ஒன்று கிடைத்தது. அதுவும் 2020ம் ஆண்டு யூடியூபில் பதிவிடப்பட்டிருந்தது. இவை எல்லாம் நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட பதிவு தவறானது என்பதை உறுதி செய்தன.
அ.தி.மு.க ஆட்சிக்காலத்தில் மழை நீர் வடிகால் சரியாக அமைத்திருந்தால் வெள்ளம் ஏற்பட்டிருக்காது என்று வெளியான வீடியோவை தி.மு.க ஆட்சியில் மழை வெள்ளம் என்று தவறாகப் பகிர்ந்திருப்பது தெளிவானது. இதன் அடிப்படையில் நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட பதிவு தவறானது என்று உறுதி செய்யப்படுகிறது.
முடிவு:
2020ம் ஆண்டு அ.தி.மு.க ஆட்சிக் காலத்தின் போது சென்னையில் மழை நீர் தேங்கியிருந்த வீடியோவை எடுத்து தி.மு.க ஆட்சியில் மழை நீர் தேங்கியுள்ளது என்று தவறாக சமூக ஊடகங்களில் பதிவிட்டிருப்பதை தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில் ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.
சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…
Facebook I X Post I Google News Channel I Instagram
Title:சென்னையில் மழை வெள்ளம் என்று பரவும் வீடியோ 2025ல் எடுக்கப்பட்டதா?
Fact Check By: Chendur PandianResult: False


