மு.க.ஸ்டாலின் ஒரு பேரிடர் என்று தி.மு.க மாணவரணி தலைவர் ராஜீவ் காந்தி கூறினாரா?
தமிழ்நாட்டின் மிகப்பெரிய பேரிடர் மு.க.ஸ்டாலின் என்று தி.மு.க செய்தித் தொடர்பாளர்களுள் ஒருவரும் திமுக மாணவரணித் தலைவருமான ராஜீவ் காந்தி கூறியதாக ஒரு புகைப்படம் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. அது தொடர்பாக ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:
உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive
தி.மு.க மாணவரணித் தலைவர் இராஜீவ் காந்தி புகைப்படத்துடன் ஜூனியர் விகடன் வெளியிட்ட செய்தி க்ளிப் ஒன்று பகிரப்பட்டுள்ளது. அதில், "இந்தியாவின் பேரிடர் மோடி... தமிழ்நாட்டின் பெரிய பேரிடர் மு.க.ஸ்டாலின்! வெளுத்து வாங்கும் இராஜீவ் காந்தி" என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
உண்மைப் பதிவைக் காண: twitter.com I Archive
இந்த புகைப்பட பதிவை ஃபேஸ்புக், ட்விட்டர் உள்ளிட்ட சமூக ஊடகங்களில் பலரும் 2023 டிசம்பர் 27ம் தேதி பதிவிட்டுள்ளனர்.
உண்மை அறிவோம்:
தி.மு.க மாணவரணித் தலைவராக இருக்கும் ராஜீவ் காந்தி தமிழ்நாடு முதலமைச்சரும் தி.மு.க தலைவருமான மு.க.ஸ்டாலினை பேரிடர் என்று விமர்சித்ததாக பலரும் சமூக ஊடகங்களில் பதிவிட்டு வருகின்றனர். இந்த புகைப்படத்தைப் பார்க்கும் போதே ஃபோட்டோஷாப் போல தெரிந்ததால் இது தொடர்பாக ஆய்வு செய்தோம்.
உண்மைப் பதிவைக் காண: Archive 1 I vikatan.com I Archive 2
முதலில் நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட பதிவில் குறிப்பிடப்பட்டுள்ள 31-12-2023 தேதியிடப்பட்ட ஜூனியர் விகடன் இதழைப் பார்த்தோம். அதில், "இந்தியாவின் பேரிடர் மோடி, தமிழ்நாட்டின் பொிய பேரிடர் நிர்மலா சீதாராமன்!" என்று இருந்தது. இதை எடிட் செய்து தமிழ்நாட்டின் பொிய பேரிடர் மு.க.ஸ்டாலின் என்று மாற்றியிருப்பது தெரிந்தது.
இதை உறுதி செய்துகொள்ள ஜூனியர் விகடன் நிர்வாகியைத் தொடர்புகொண்டு கேட்டோம். அவரும் சமூக ஊடகங்களில் பரவும் புகைப்படம் உண்மையில்லை, அது ஜூனியர் விகடன் வெளியிட்டது இல்லை. எடிட் செய்து பரவியுள்ளனர் என்றார்.
ராஜீவ் காந்தியின் ஃபேஸ்புக் பக்கத்தைப் பார்வையிட்டோம். அதில் ஜூனியர் விகடனில் "இந்தியாவின் பேரிடர் மோடி. தமிழ்நாட்டின் பெரிய பேரிடர் நிர்மலா சீதாராமன்" என்று வெளியான கட்டுரையை அவர் பகிர்ந்திருந்தார். அவருடைய ட்விட்டர் பக்கத்தில் நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட பதிவின் உண்மையான நியூஸ் கார்டு இருந்தது. இதை எடிட் செய்துதான் வதந்தியை பரப்பியிருப்பியுள்ளனர்.
இவை எல்லாம் நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட பதிவு போலியானது என்பதை உறுதி செய்கின்றன. இந்த ஆதாரங்கள் அடிப்படையில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை பேரிடர் என்று திமுக மாணவரணி தலைவர் ராஜீவ் காந்தி விமர்சித்ததாக பரவும் நியூஸ் கார்டு போலியானது என்று உறுதி செய்யப்படுகிறது.
முடிவு:
தமிழ்நாட்டின் பெரிய பேரிடர் மு.க.ஸ்டாலின் என்று ராஜீவ் காந்தி கூறியதாக பரவும் நியூஸ் கார்டு எடிட் செய்யப்பட்டது என்பதை தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில் ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.
சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…
Facebook I Twitter I Google News Channel
Title:மு.க.ஸ்டாலின் ஒரு பேரிடர் என்று தி.மு.க மாணவரணி தலைவர் ராஜீவ் காந்தி கூறினாரா?
Written By: Chendur PandianResult: False