
‘’2500, 1500 கூட்டினால் ரூ.5000 வரும் என்று உளறிய மு.க.ஸ்டாலின்,’’ எனும் தலைப்பில் சமூக ஊடகங்களில் பகிரப்படும் வீடியோ ஒன்றை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம்.
தகவலின் விவரம்:
இந்த வீடியோவில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், ‘’பொங்கல் பரிசாக அதிமுக அரசு ரூ.2500 அறிவித்துள்ளது. இதனுடன் மேலும் ஒரு ரூ.1500 சேர்த்து , ரூ.5000 ஆக வழங்கிட வேண்டும்,’’ என்று பேசும் காட்சி இடம்பெற்றுள்ளது. இதனை மேற்கோள் காட்டி பலரும் கணக்கு தெரியாமல் உளறும் மு.க.ஸ்டாலின் என்று சமூக வலைதளங்களில் கேலி செய்து, பதிவிட்டு வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
தமிழ்நாட்டில் தற்போது 2021 சட்டமன்ற தேர்தல் பிரசாரம் சூடுபிடித்துள்ளது. இதையொட்டி, பிரதான கட்சிகளான திமுக, அதிமுக ஆதரவாளர்கள் சமூக வலைதளங்களில் வித விதமான வதந்திகளை பரப்புவதும் வழக்கமாக உள்ளது.
இதையொட்டியே, நாம் ஆய்வு செய்யும் ஃபேஸ்புக் பதிவில் உள்ள வீடியோவும் பகிரப்பட்டு வருகிறது. உண்மையில், இதில் உள்ளது எடிட் செய்யப்பட்ட தகவலாகும்.
முழு வீடியோவை திமுக.,வே அதிகாரப்பூர்வமாக தனது ஃபேஸ்புக் பதிவில் பகிர்ந்துள்ளது. அதனை ஆதாரத்திற்காக கீழே இணைத்துள்ளோம்.
இதன்படி, மாலைமுரசு ஊடகம் இந்த செய்தியை சரிபார்க்காமல் வெளியிட்டுவிட்டு, பின்னர் நீக்கியதாக தெரிகிறது. இதேபோல, அதிமுக ஃபேஸ்புக், ட்விட்டர் கணக்குகள் மற்றும் அதிமுக ஐடி பிரிவு நிர்வாகி ராஜ் சத்யன் போன்ற பலரும் இந்த எடிட் செய்த வீடியோவை உண்மைத்தன்மை தெரியாமல் ஷேர் செய்து வருகின்றனர். இதனைப் பார்த்து மற்ற சமூக வலைதள பயனாளர்களும் பகிர்வதாக, நமக்குச் சந்தேகமின்றி தெளிவாகிறது.
எனவே, ராணிப்பேட்டை அனந்தலை பகுதியில் நடைபெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ‘’அதிமுக அரசை கொரோனா நிவாரணத் தொகையாக மக்களுக்கு ரூ.5000 வழங்க கேட்டுக் கொண்டிருந்தேன். அதனை தராமல், ஏற்கனவே ஒரு ரூ.1000 மட்டும் வழங்கினார்கள். தற்போது பொங்கல் பரிசாக, ரூ.2500 வழங்குவதாக, அறிவித்துள்ளனர். இதனுடன் மேலும் ரூ.1500 சேர்த்து வழங்கினால், ரூ.5000 என்ற நான் சொன்ன கொரோனா நிவாரணத் தொகை வந்துவிடும். அந்த கணக்கை அதிமுக அரசு பூர்த்தி செய்ய வேண்டும்,’’ என்று தெளிவாகவே பேசியுள்ளார்.
அவரது பேச்சில் சில பகுதிகளை நீக்கிவிட்டு, ரூ.2500 மற்றும் ரூ.1500 சேர்த்தால், ரூ.5000 வரும் என்று மு.க.ஸ்டாலின் பேசியதாகக் கூறி சமூக வலைதளங்களில் வதந்தி பரப்பி வருகிறார்கள், என்று சந்தேகமின்றி உறுதி செய்யப்படுகிறது.
குறிப்பிட்ட வீடியோவையும், அதன் உண்மையான வீடியோவையும் ஒப்பிட்டு கீழே ஆதாரத்திற்காக இணைத்துள்ளோம்.
முடிவு:
தகுந்த ஆதாரங்களின் அடிப்படையில் நாம் ஆய்வு மேற்கொண்ட தகவல் தவறானது என்று ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் நிரூபித்துள்ளது. நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை கண்டால், எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்புங்கள். நாங்கள், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

Title:2500 உடன் 1500 கூட்டினால் ரூ.5000 என்று மு.க.ஸ்டாலின் பேசினாரா?
Fact Check By: Pankaj IyerResult: False
