இந்தோனேஷியாவில் 7500 ஆண்டுகள் பழமையான இந்து கோவில் கண்டுபிடிப்பு?

சமூக ஊடகம் சர்வதேசம்

இந்தோனேஷியாவில் 7500 ஆண்டுக்கு முன்பு கட்டப்பட்ட இந்து கோவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

Hindu Temple 2.png
Facebook LinkArchived Link 1Archived Link 2

2.48 நிமிடம் ஓடக்கூடிய வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளனர். நிலைத் தகவலில், “இஸ்லாமியப் பெருமக்கள் அதிகமாக வாழ்கின்ற இந்தோனேசியா நாட்டில் பூமிக்கடியில் 7500 ஆண்டுகளுக்கு முன்னர் நிறுவியருளிய சிவாலயம் கண்டுபிடிப்பு ! சைவ சமயத்தின், தமிழ்ச் சமுதாயத்தின் தனிப் பெருந்தலைவர், நால்வர் பெருமக்களுள் முதல்வர், மதுரை ஆதீனத்தை 2500 ஆண்டுகளுக்கு முன்பே நிறுவியருளிய சீர்காழித் திருஞானசம்பந்தப் பெருமான் தோன்றுவதற்கு முன்பே 5000 ஆண்டுகளுக்கு முற்பட்ட நிலையில். இந்தோனேசியாவில் இச் சிவாலயம் நிர்மாணிக்கப் பெற்றிருக்கிறது என்றால் “சைவ சமயம்” “இந்து சமயம்” என்பது எவ்வளவு மிகப் பெரிய தொன்மை வாய்ந்தது என்பதை நன்கு உணரலாம்!!” என்று குறிப்பிட்டுள்ளனர்.

இந்த வீடியோவை, Sreepriya Iyer என்பவர் 2019 அக்டோபர் 8ம் தேதி தன்னுடைய ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இதை 22 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் ஷேர் செய்துள்ளனர்.

உண்மை அறிவோம்:

இந்து மதத்தின் பழமை உறுதி செய்யப்பட்டுள்ளது என்ற வகையில் இந்த பதிவை வெளியிட்டுள்ளனர். மதங்களின் தோற்றம், வளர்ச்சி பற்றி எல்லாம் நாம் ஆய்வு மேற்கொள்ளவில்லை. இந்தோனேஷியாவில் 7500 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட கோவில் கண்டுபிடிப்பு என்று குறிப்பிட்டுள்ளனர். அது உண்மையா என்று மட்டுமே ஆய்வு மேற்கொண்டோம்.

வீடியோவைப் பார்த்தோம். அது எந்த தொலைக்காட்சி என்று சரியாகத் தெரியவில்லை. ஆனால், செய்தி வாசிப்பாளர் எடுத்த எடுப்பிலேயே “இந்தோனேஷியாவில் 1000ம் ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட இந்து கோவில் கண்டுபிடிக்கப்பட்டது” என்று சொல்கிறார். இதன் மூலம், 7500 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டது என்ற தகவல் தவறானது என்று உறுதியானது. இருப்பினும் செய்தியின் வேறு எந்த பகுதியிலாவது 7500 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டது என்று குறிப்பிடுகிறார்களா என்று பார்த்தோம்.

எந்த ஒரு இடத்திலும் 7500 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டது என்று கூறப்படவில்லை. இந்தோனேஷியாவின் இஸ்லாமியப் பல்கலைக் கழகத்துக்கு நூலகம் கட்டுவதற்காக பள்ளம் தோண்டும்போது இந்த கோவில் கண்டுபிடிக்கப்பட்டது. கோவில் சிலைகளைத் திருடி கள்ள மார்க்கெட்டில் விற்பனை செய்யப்படுகிறது. எனவே, பழமையான கோவிலைப் பாதுகாக்க பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது என்று குறிப்பிட்டிருந்தனர். மேலும் இந்த செய்தியை ஏபிசி என்ற ஊடகம் வெளியிட்டது என்றும் தெரியவந்தது.

இந்தோனேஷியாவில் நூலக கட்டிடம் அமைக்க பள்ளம் தோண்டியபோது இந்து கோவில் கண்டுபிடிக்கப்பட்டது என்ற தகவல் புதிது இல்லை. சமூக ஊடகங்களில் “சௌதி அரேபியாவில் கண்டுபிடிக்கப்பட்ட 3000ம் ஆண்டு பழமையான இந்து கோவில்” – என்று இந்த இந்தோனேஷிய கோவில் படங்களை வைரலாக்கி வந்தனர். அது தவறான தகவல் என்று நம்முடைய Fact Crescendo Tamil-ல் கட்டுரை வெளியிட்டிருந்தோம். அந்த கோவிலைப் பற்றித்தான் இவர்கள் குறிப்பிடுகிறார்கள் என்பது தெரிந்தது.

இந்த இந்தோனேஷிய கோவில் 7500 ஆண்டுகள் பழமையானது என்று கூற பதிவாளர் எந்த ஒரு ஆதாரத்தையும் அளிக்கவில்லை. அவர் அளித்திருந்த வீடியோவில் கோவில் 1000ம் ஆண்டு பழமையானது என்றே குறிப்பிட்டுள்ளார். வேறு ஏதேனும் செய்தி உள்ளதா என்று தேடினோம்.

கூகுளில், 7500ம் ஆண்டு பழமையான இந்து கோவில் இந்தோனேஷியாவில் கண்டுபிடிப்பு என்று ஆங்கிலத்தில் டைப் செய்து தேடினோம். 1000ம் ஆண்டுகளுக்கு முன்பு கண்டுபிடிக்கப்பட்ட இந்து கோவில் தொடர்பான செய்திகளே கிடைத்தன. நியூயார்க் டைம்ஸ், ஏ.பி.சி நியூஸ் உள்ளிட்ட ஊடகங்கள் இந்த செய்தியை வெளியிட்டது நமக்கு தெரியவந்தது. 

2010ம் ஆண்டு பிப்ரவரி மாதம் வெளியான நியூயார்க் டைம்ஸ் செய்தியை படித்துப் பார்த்தோம். அதில், “9ம் நூற்றாண்டைச் சேர்ந்த இந்து கோவில் இந்தோனேஷியாவின் ஜாவா பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இஸ்லாமிய பல்கலைக் கழகம் ஒன்று புதிய கட்டிடம் கட்ட பள்ளம் தோண்டியுள்ளது. அப்போது, வித்தியாசமான முறையில் கல் தட்டுப்படவே, இது குறித்து அகழ்வாராய்ச்சி துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அவர்கள் வந்து ஆய்வு செய்து இந்து கோவில்களைக் கண்டுபிடித்துள்ளனர். கட்டிடம் கட்டப்பட்ட விதத்தை வைத்து அவை 1100 பழமையானதாக இருக்கும் என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்” என்று குறிப்பிட்டு இருந்தனர். இதன் மூலம் இந்த கோவில் சுமார் 1100 ஆண்டு பழமையானது என்பது தெரிந்தது.

nytimes.comArchived Link 1
telegraph.co.ukArchived Link 2
abc.net.auArchived Link 3

இதன் மூலம், இந்தோனேஷியாவில் 1000ம் ஆண்டு பழமையான கோவில் கண்டுபிடிக்கப்பட்டது என்று செய்தியில் குறிப்பிட்ட தகவலை மறைத்து, 7500 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட இந்து கோவில் என்று தவறான தகவலை பரப்பியுள்ளது உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:

தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில், மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவு தவறானது என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம்.

Avatar

Title:இந்தோனேஷியாவில் 7500 ஆண்டுகள் பழமையான இந்து கோவில் கண்டுபிடிப்பு?

Fact Check By: Chendur Pandian 

Result: False

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •