மாணவிகளை அடித்த ஏ.பி.வி.பி நபருடன் ரஜினி? – ஃபேஸ்புக்கில் பரபரப்பு

அரசியல் | Politics இந்தியா | India சமூக ஊடகம் | Social

டெல்லியில் போலீசுடன் கலந்து மாணவர்கள் மீது ஏ.பி.வி.பி நிர்வாகி தாக்குதல் நடத்தினார் என்றும் அவர் ரஜினிகாந்துடன் புகைப்படம் எடுத்துள்ளார் என்றும் ஒரு பதிவு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

Rajini 2.png
Facebook LinkArchived Link

டெல்லியில் காவலர் உடையில் ஏ.பி.வி.பி நிர்வாகி உள்ளார் என்று கூறும் படம் மற்றும் நடிகர் ரஜினிகாந்துன் ஒருவர் தேசிய கொடியோடு இருக்கும் படத்தை இணைத்து பகிர்ந்துள்ளனர். நிலைத் தகவலில், “போலிஸ் உடையில் போலிஸ் லத்தியை கொண்டு இளம் மாணவிகளை அடித்த #RSS #abvp trained பொறுக்கியுடன் தொடர்பு எப்படி .. Rajinikanth பதில் சொல்லாமல் போவது சரிதானா. போலிஸ் வேடத்தில் ABVP பயங்கரவாதிகள்… மாணவர்களை கடுமையாக தாக்கியவன், இப்போ சொல்லுடா யாரு சமூகவிரோதினு?” என்று குறிப்பிட்டுள்ளனர்.

இந்த பதிவை, We support Ntk என்ற பக்கம் டிசம்பர் 18, 2019 அன்று வெளியிட்டுள்ளது. பலரும் இதை ஷேர் செய்து வருகின்றனர்.

உண்மை அறிவோம்:

டெல்லி கலவரத்தின் போது, பொது மக்களைப் போன்று சாதாரண உடை, ஹெல்மெட்டில் போலீஸ் அணிவதுபோன்ற பாதுகாப்பு கவசம் அணிந்து ஒருவர் நிற்கும் படம் எடுக்கப்பட்டது. சமூக ஊடகங்களில் இந்த நபர் பா.ஜ.க-வின் மாணவர் பிரிவான ஏ.பி.வி.பி நிர்வாகி என்றும் ஆர்.எஸ்.எஸ் தன்னார்வலர் என்றும் பகிரப்பட்டது. ஆனால், இந்த நபர் காவலர்தான் என்றும் ஏ.பி.வி.பி நிர்வாகி என்று பகிரப்படும் தகவல் தவறானது என்று டெல்லி போலீசார் உறுதி செய்திருந்தனர்.

Archived Link

இது தொடர்பாக நம்முடைய ஃபேக்ட் கிரஸண்டோ தமிழில் ஆய்வு கட்டுரை வெளியிட்டிருந்தோம். அந்த கட்டுரையைக் காண இங்கே கிளிக் செய்யுங்கள்.

இந்த நிலையில், ஏ.பி.வி.பி நபர் என்று கூறப்படும் பரத் ஷர்மா நடிகர் ரஜினிகாந்துடன் இருக்கும் படத்தை அவருடைய ஃபேஸ்புக் பக்கத்தில் இருந்து எடுத்தது போன்ற படத்தை We support Ntk என்ற ஃபேஸ்புக் பக்கம் வெளியிட்டுள்ளது.

Rajini 3.png

பரத் ஷர்மா தொடர்பான ஆய்வு மேற்கொண்டபோது, ஞாயிற்றுக்கிழமை வரை அவருடைய ஃபேஸ்புக் பக்கம் ஆக்டிவாக இருந்ததைக் காண முடிந்தது. அதன்பிறகு, அவருடைய பக்கம் நீக்கப்பட்டு இருந்தது. வதந்தி அதிகமாக பரவியதால் அந்த பக்கம் நீக்கப்பட்டு இருக்கலாம் என்று தெரிந்தது. அதன்பிறகு மீண்டும் பக்கத்தை ஆக்டிவேட் செய்திருந்தார். அவருடைய பக்கத்தில் மொத்தம் இரண்டே இரண்டு படங்கள்தான் இருந்தன. அப்படி இருக்கும்போது இந்த படத்தை இவர்கள் எப்படி எடுத்திருக்க முடியும் என்ற சந்தேகம் எழுந்தது. 

Rajini 4.png

மேலும், படத்தில் உள்ளவருக்கும் ஏ.பி.வி.பி நிர்வாகி பரத் ஷர்மாவுக்கும் வித்தியாசமும் இருந்தது. இதனால், படத்தை ரிவர்ஸ் இமேஜ் தேடலில் பதிவேற்றித் தேடினோம். 

அப்போது லதா ரஜினிகாந்த் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் 2019 மார்ச் 12ம் தேதி இந்த படம் பதிவிடப்பட்டது தெரிந்தது. அதில், படத்தில் இருப்பவர் ஆஷிஷ் ஷர்மா என்றும், குழந்தைகள் அமைதிக்காக டெல்லியிலிருந்து நாடு முழுவதும் நடைப்பயணம் மேற்கொண்டுள்ளார் என்றும் குறிப்பிட்டிருந்தார். தி வீக் இதழில் இவரைப் பற்றிய செய்தி மற்றும் ரஜினிகாந்துடன் இருக்கும் படம் வெளியாகி உள்ளது.

Archived Linktheweek.inArchived Link 2

நம்முடைய ஆய்வில்,

போலீசாருடன் நிற்கும் நபர் ஏ.பி.வி.பி நிர்வாகி என்று பகிரப்படும் தகவல் வெறும் வதந்தி என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது.

ஏ.பி.வி.பி நிர்வாகி ஃபேஸ்புக் பக்கத்தில் நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட ரஜினிகாந்துடன் இருக்கும் படம் இல்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

தேசியக் கொடியுடன் ரஜினிகாந்துடன் நிற்கும் நபரின் பெயர் ஆஷிஷ் ஷர்மா என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்த ஆதாரங்கள் அடிப்படையில், டெல்லியில் போலீசாருடன் சேர்ந்து மாணவர்களை தாக்கிய ஏ.பி.வி.பி நிர்வாகி ரஜினிகாந்துடன் நிற்கிறார் என்று பகிரப்படும் தகவல் தவறானது என்று உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:

தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில், மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவு தவறானது என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம்.

Avatar

Title:மாணவிகளை அடித்த ஏ.பி.வி.பி நபருடன் ரஜினி? – ஃபேஸ்புக்கில் பரபரப்பு

Fact Check By: Chendur Pandian 

Result: False