புதிய குடியுரிமை சட்ட திருத்தத்தின்படி எம்ஜிஆர் இந்திய குடிமகன் இல்லையா?

அரசியல் சினிமா

‘’புதிய குடியுரிமை சட்ட திருத்தத்தின்படி எம்ஜிஆர் இந்திய குடிமகன் இல்லை,’’ என்ற தலைப்பில் பகிரப்படும் ஃபேஸ்புக் பதிவு ஒன்றை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு மேற்கொண்டோம்.

தகவலின் விவரம்:

Facebook Claim Link Archived Link

Satheesh Kumar என்பவர் மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவை வெளியிட்டுள்ளார். இதில், எம்ஜிஆர் புகைப்படத்தை பகிர்ந்து, ‘’எம்ஜிஆர் இந்தியர் இல்லை- புதிய குடியுரிமைச் சட்டப்படி இலங்கை கண்டியில் பிறந்த எம்ஜிஆர் இந்தியர் இல்லை… இதுகூடத் தெரியாமல் அதிமுக முட்டாள்கள் குடியுரிமைச் சட்டத்திற்கு ஆதரவு,’’ என எழுதியுள்ளனர். இதனை பலரும் உண்மை என நம்பி வைரலாக பகிர்ந்து வருகின்றனர்.

உண்மை அறிவோம்:
தமிழக முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ராமச்சந்திரன். திமுகவில் இருந்து கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து சென்று, அஇஅதிமுக தொடங்கி, பின்னாளில் தமிழக அரசியலில் தனித்த செல்வாக்கு உள்ள அரசியல் தலைவராக மாறியவர். அவர் இறந்து 30 ஆண்டுகளுக்கும் மேல் கடந்துவிட்டாலும், இன்று வரையிலும் தமிழக அரசியலில் அவரது பெயர் மட்டுமே செல்வாக்கு மிக்க சக்தியாக திகழ்கிறது. 

எம்ஜிஆர் உயிரோடு வாழ்ந்த காலத்திலும், அவர் இறந்த பிறகும் இன்று வரை சொல்லப்படும் வதந்திகளில் குறிப்பிடத்தக்கவை பின்வருமாறு:

1) எம்ஜிஆர் தமிழர் கிடையாது. அவர் ஒரு மலையாளி.
2) எம்ஜிஆர் இந்தியரே கிடையாது. அவர் இலங்கையில் பிறந்தவர். இந்தியாவில் குடியேறிய வந்தேறி.
3) எம்ஜிஆர் படிக்க தெரியாதவர். சினிமா பிரபலத்தை வைத்தே தமிழக மக்களை ஏமாற்றினார்.
4) எம்ஜிஆர் கையில் கட்டியிருந்த வாட்ச் இன்றுவரை அவரது சமாதியில் ஓடும் சத்தம் டிக் டிக் என கேட்கிறது. 

மேற்கண்ட வதந்திகளில், 2வது வதந்திதான் இப்போது நாம் ஆய்வு செய்யும் ஃபேஸ்புக் பதிவில் இடம்பெற்றுள்ளது.

உண்மையில், எம்ஜிஆரின் பெற்றோர் இன்றைய கேரள மாநிலத்தில் உள்ள பாலக்காட்டை பூர்வீகமாகக் கொண்டவர்கள். அவரது தந்தை பெயர் கோபாலன் மேனன், தாய் பெயர் சத்யபாமா. எம்ஜிஆரின் தந்தை கோபாலன் மேனன், பிரிட்டிஷார் ஆட்சியில் பிரபல வழக்கறிஞராகவும், நீதிபதியாகவும் பணிபுரிந்தவர். பொய் புகார் ஒன்றில் அவர் சிறையில் அடைபட நேரிட்டதால், இந்தியா வேண்டாமென வெறுப்பில், இலங்கையின் கண்டி பகுதிக்குச் சென்று குடியேறினார். அங்கே பள்ளி ஒன்றில் தலைமை ஆசிரியராக பணிபுரிந்து வந்த நிலையில்தான் எம்ஜிஆர் பிறந்தார். எம்ஜிஆரின் குழந்தை பருவத்திலேயே, அவரது தந்தை திடீர் உடல்நலக் குறைவால் உயிரிழந்தார். எனவே, அவரது குடும்பம் வறுமையில் சிக்கியது. வேறு வழியின்றி, எம்ஜிஆரின் படிப்பு தடைபட, அவர் தனது தாய் சத்யபாமா உள்ளிட்ட குடும்ப உறுப்பினர்களை அழைத்துக் கொண்டு, மீண்டும் தமிழகத்தின் கும்பகோணம் பகுதியில் குடியேறினார். அங்கிருந்து சினிமா ஆர்வத்தில் நாடகங்களில் நடிக்க தொடங்கி, மதுரை, சேலம், சென்னை என மாறி மாறி இடம்பெயர்ந்து, பிரபல நடிகராக மாறினார். அதன்பின் நடந்தது தனி வரலாறு.

பிரிட்டிஷார் ஆட்சிக்காலம் என்பதால், இந்தியாவைச் சேர்ந்த எம்ஜிஆர் குடும்பம் இலங்கை சென்று பிறகு, இந்தியாவிற்கே திரும்பி வந்து குடியேறியது எளிதாக அமைந்தது.

இதுபற்றி விரிவாகப் படிக்க இங்கே கிளிக் செய்யவும். எம்ஜிஆர் வாழ்க்கை வரலாறு பற்றி பலரும் புத்தகம் எழுதியுள்ளனர். எம்ஜிஆரே அவர் கைப்பட ‘நான் ஏன் பிறந்தேன்‘ என்ற தலைப்பில் சுயசரிதை எழுதியிருக்கிறார். 

எம்ஜிஆரிடம் நேரடியாக பழகிய அவரது அனுதாபிகள் இன்றளவும் பலர் உயிரோடு உள்ளனர். அவர்களிடம் பேசினாலே இதுதொடர்பாக பல விவரங்கள் கிடைக்கும். 

உண்மை இப்படியிருக்க, ‘எம்ஜிஆர் இந்தியாவிற்கே தொடர்பில்லாத இலங்கை குடிமகனது குடும்பத்தில் பிறந்தவர், இந்தியாவில் குடியேறிய வந்தேறி, இந்திய குடியுரிமை பெறவே தகுதியற்றவர்,’ என்பதுபோல தகவல் பரப்பி வருகின்றனர். 

எம்ஜிஆரின் தந்தை, தாய் இந்தியர்கள்தான், பின்னாளில் இலங்கையில் குடியேறினாலும், அவர்கள் இந்தியர்கள்தான். இந்திய குடியுரிமை இருந்ததால்தான் எளிதாக மீண்டும் இந்தியாவிற்கு திரும்ப வந்து எம்ஜிஆர் குடும்பம் வாழ முடிந்தது.

சரி, மத்திய அரசு கொண்டுவந்துள்ள புதிய குடியுரிமை சட்ட திருத்தத்தில் ஒருவர் இந்திய குடியுரிமை பெற என்னென்ன காரணம் சொல்லப்பட்டுள்ளது என்பது பற்றிய விவரம் கீழே தரப்பட்டுள்ளது. 

NRC மற்றும் CAA பற்றி சுருக்கமாக படிக்க கீழே உள்ள லிங்க் பார்க்கவும்.

TheNewsMinute Link EconomicTimes Link 

Citizenship Amendment Bill 2019 பற்றி விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யவும்.

இதேபோல, NRC பற்றி விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யவும்.

எனவே, என்ஆர்சி மற்றும் சிஏஏ/சிஏபி பற்றி அடிப்படை விவரங்கள் தெரியாதவர்கள், பல வித வதந்திகளை சமூக ஊடகங்களில் பரப்பி வருகின்றனர். அதில், ஒன்றுதான், எம்ஜிஆர் இந்தியரே கிடையாது என்ற வதந்தியும். இதில் எந்த உண்மையும் இல்லை. எம்ஜிஆரின் பெற்றோர் இந்தியர்கள்தான் என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது. இந்திய பெற்றோருக்கு பிறந்த எம்ஜிஆர், பின்னாளில் இந்தியாவிற்கே திரும்பி வந்ததால் இந்தியராகிவிட்டார். புதிய குடியுரிமை சட்ட திருத்தத்தின்படி பார்த்தாலும், எம்ஜிஆர் இந்தியர் இல்லை எனச் சொல்ல முடியாது.

முடிவு:
உரிய ஆதாரங்களின்படி மேற்கண்ட ஃபேஸ்புக் செய்தி தவறான ஒன்று என நிரூபிக்கப்பட்டுள்ளது. நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை உறுதிப்படுத்தாமல் மற்றவர்களுக்கு பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். 

Avatar

Title:புதிய குடியுரிமை சட்ட திருத்தத்தின்படி எம்ஜிஆர் இந்திய குடிமகன் இல்லையா?

Fact Check By: Pankaj Iyer 

Result: False

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •