
‘’ராஜீவ் காந்தி உயிரோடு இருந்தால் சிறையில் வாடும் 7 தமிழர்களை மன்னித்திருப்பார்,’’ என்று கூறி வைரலாக பரவி வரும் ஒரு ஃபேஸ்புக் பதிவை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம்.
தகவலின் விவரம்:
Facebook Claim Link | Archived Link |
Babu Raj Babu என்பவர் கடந்த டிசம்பர் 12ம் தேதி இந்த பதிவை வெளியிட்டுள்ளார். இதனை பலரும் உண்மை என நம்பி வைரலாக ஷேர் செய்ய ஒருசிலர் கமெண்ட் பிரிவில், ‘இப்படி ரஜினி பேசவில்லை, ஸ்டாலின் பேசியதை ரஜினி பெயரில் பகிர்ந்து மக்களை குழப்ப வேண்டாம்,’ என கருத்து தெரிவித்துள்ளதை காண நேரிட்டது.
உண்மை அறிவோம்:
மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவில் கூறியுள்ளதுபோல சமீபத்தில் எங்கேனும் ரஜினிகாந்த், ராஜீவ் காந்தி படுகொலை வழக்கில் தண்டிக்கப்பட்ட 7 தமிழர்கள் பற்றி கருத்து தெரிவித்தாரா என விவரம் தேடினோம். ஆனால், அப்படி எங்கேயும் செய்தி, டிசம்பர் மாதத்தில் இதுவரையிலும் வெளியாகவில்லை.
சமீபத்தில் இதுபற்றி ரஜினி கருத்து கூறவில்லை என்பது உறுதியானது. அப்படி அவர் பேசியிருந்தால் முன்னணி ஊடகங்களில் அது வைரலான செய்தியாக வெளியிடப்பட்டிருக்கும். ஆனால், எந்த ஊடகமும் இப்படி செய்தி வெளியிடவில்லை.
இதற்கு முன், கடந்த 2018ம் ஆண்டில், ராஜீவ் படுகொலை வழக்கில் சிறையில் வாடும் 7 பேர் பற்றி ரஜினிகாந்த் சர்ச்சையான வகையில் கருத்து கூறியிருந்தார். அதாவது, முதலில் எந்த 7 பேர் எனக் கேள்வி எழுப்பிய ரஜினிகாந்த், பிறகு, மனிதாபிமான அடிப்படையில் அந்த 7 பேரையும் விடுக்கும்படி வலியுறுத்தியிருந்தார். அதுதொடர்பான வீடியோ ஆதாரம் கீழே இணைக்கப்பட்டுள்ளது.
இதேபோல, 7 பேரை மனிதாபிமான அடிப்படையில் விடுவிக்கும்படி அவர் பேசிய வீடியோ கீழே தரப்பட்டுள்ளது.
ரஜினியின் இந்த கருத்து அப்போது ஊடகங்களில் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இதுபற்றி இந்தியா டுடே வெளியிட்ட செய்தியின் வீடியோ கீழே தரப்பட்டுள்ளது.
மனிதாபிமான அடிப்படையில் அந்த 7 பேரை விடுவிக்கும்படி ரஜினிகாந்த் வலியுறுத்தியுள்ளாரே தவிர, ராஜிவ் காந்தி உயிரோடு இருந்திருந்தால்… என்று எங்கேயும் பேசவில்லை.
Maalaimalar News Link |
இதுவரை கிடைத்த ஆதாரங்களின் அடிப்படையில் நமக்கு தெரியவந்த உண்மையின் விவரம்,
1) 2018ம் ஆண்டு ராஜிவ் காந்தி படுகொலை வழக்கு பற்றியும், அதில் தண்டிக்கப்பட்ட 7 பேர் பற்றியும் ரஜினி கருத்து தெரிவித்திருக்கிறார். ‘’மனிதாபிமான அடிப்படையில் 7 பேரை விடுவியுங்கள்,’’ என்று பேசியிருக்கிறார்.
2) ஆனால், 2019 டிசம்பர் காலக்கட்டத்தில் ரஜினி இதுபற்றி எதுவும் பேசவில்லை. அப்படி அவர் பேசியிருந்தால் அது மிகவும் வைரலாக பரவியிருக்கும். அதேபோல, ‘’ராஜிவ் காந்தி உயிரோடு இருந்திருந்தால் அந்த 7 பேரை விடுதலை செய்திருப்பார்,’’ என்று ரஜினி கூறவில்லை.
எனவே, 2018ம் ஆண்டில், ராஜிவ் படுகொலை வழக்கில் தொடர்புடைய 7 பேருக்கு ஆதரவாக ரஜினிகாந்த் பேசியிருக்கிறார்; ஆனால், அவர் வெளிப்படுத்திய வார்த்தைகள் மற்றும் கருத்து வேறு வகையில் இருந்திருக்கிறது. நாம் ஆய்வு செய்யும் ஃபேஸ்புக் செய்தியில் உள்ளது போல அவர் பேசவில்லை என தெரிகிறது.
ரஜினி பற்றி பகிரப்படும் மேற்கண்ட செய்தியில் பாதி உண்மை, பாதி தவறான தகவல் உள்ளதாக உறுதி செய்யப்படுகிறது.
முடிவு:
உரிய ஆதாரங்களின்படி, நாம் ஆய்வு செய்த ஃபேஸ்புக் செய்தியில், பாதி உண்மை, பாதி தவறான தகவல் உள்ளதாக நிரூபிக்கப்பட்டுள்ளது. நமது வாசகர்கள் இத்தகைய குழப்பமான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை உறுதிப்படுத்தாமல் மற்றவர்களுக்கு பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம்.

Title:ராஜீவ் காந்தி உயிரோடு இருந்தால் மன்னித்திருப்பார் என்று ரஜினி பேசினாரா?
Fact Check By: Pankaj IyerResult: Partly-False
