
‘’சிஏஏ கோலம் போட மறுத்ததால் அதிராம்பட்டினம் முஸ்லீம் பெண் அடித்துக் கொலை,’’ என்ற தலைப்பில் பகிரப்பட்ட ஒரு ஃபேஸ்புக் பதிவை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம்.
தகவலின் விவரம்:

Facebook Claim Link | Archived Video Link |
என்பவர் டிசம்பர் 30, 2019 அன்று இந்த பதிவை வெளியிட்டுள்ளார். இதில், முஸ்லீம் பெண் ஒருவரை சிலர் விசாரிக்கும் காட்சிகள் அடங்கிய ஒரு வீடியோவும், பிறகு, முஸ்லீம் பெண்கள் சிலரை போலீசார் கைது செய்து அழைத்துச் செல்லும் காட்சிகள் அடங்கிய ஒரு வீடியோவும் காண கிடைக்கிறது. குறிப்பாக, முஸ்லீம் பெண் ஒருவர் பேசும் வீடியோவில், ‘கொலை செய்யப்பட்ட பெண்ணின் கணவருடைய அக்கா நான், தெரியாமல் இந்த கொலை நடந்துவிட்டது,’ என்றும் அவர் பேசுவதைக் கேட்க முடிகிறது.
ஆனாலும், CAA, NRC க்கு எதிராகக் கோலம் போட மறுத்த இஸ்லாமிய பெண் அதிராம்பட்டினத்தில் அடித்துக் கொலை, என குறிப்பிட்ட நபர் எழுதியிருக்கிறார். இதனை பலரும் உண்மை என நம்பி வைரலாக ஷேர் செய்து வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
மேற்கண்ட வீடியோவின் கீழேயே சிலர், இது தவறான செய்தி என்றும், மாமியார் – மருமகள் பிரச்னையால் நிகழ்ந்த சம்பவம் என்றும் குறிப்பிட்டு கமெண்ட் பகிர்ந்துள்ளனர்.

இதுதொடர்பாக, வேறு ஏதேனும் செய்தி ஊடகங்களில் தகவல் வெளியிடப்பட்டதா என்ற சந்தேகத்தில் விவரம் தேடினோம். ஆனால், எதுவும் கிடைக்கப் பெறவில்லை. அதேசமயம், தீவிர வலதுசாரி இணையதளம் ஒன்றில், இந்த சம்பவம் மாமியார், மருமகள் பிரச்னையால் நிகழ்ந்த ஒன்று எனக் குறிப்பிட்டு வெளியிட்ட செய்தி ஒன்றை காண முடிந்தது.
வழக்கமாக நடக்காததை நடந்தது போல செய்தி வெளியிடும் அந்த இணையதளம் இச்செய்தியில் உண்மையை மட்டுமே குறிப்பிட்டிருந்தது மிகவும் வியப்பாக இருந்தது. உண்மையிலேயே, இது சிஏஏவை எதிர்த்துக் கோலம் போட மறுத்ததால் அடித்துக் கொல்லப்பட்ட நிகழ்வாக இருந்திருந்தால், குறிப்பிட்ட வலதுசாரி இணையதளம் இதுபற்றி பக்கம் பக்கமாக எழுதி செய்தி வெளியிட்டிருக்கும். ஆனால், அப்படி எதுவும் அந்த செய்தியில் காண கிடைக்கவில்லை.
எனவே, இந்த கொலை வேறு ஒரு விசயத்திற்காக நடந்துள்ளதாக, தெரியவருகிறது.
Tnnews24.com Link | Archived Link |
இதையடுத்து, உண்மை அறியும் நோக்கில் சம்பந்தப்பட்ட அதிராம்பட்டினம் போலீஸ் நிலையத்தை தொடர்பு கொண்டு பேசினோம். 04373 242 450 என்ற தொலைபேசி எண்ணில் நம்மிடம் பேசிய போலீஸ் அதிகாரி, ‘’இது குடும்ப பிரச்னையால் நடந்த கொலை. இதில், கோலம் போடும் போராட்டத்திற்கோ, சமீபத்திய அரசியல் நிகழ்வுகளுக்கோ எந்த தொடர்பும் இல்லை. கொல்லப்பட்டதும், கொலை செய்ததும் முஸ்லீம் சமூகத்தினர். அதுவும் குறிப்பாக, மாமியார், நாத்தனார் முறையில் உள்ள பெண்கள், மருமகளை அடித்துக் கொலை செய்திருக்கின்றனர் என்பது விசாரணையில் தெளிவாகியுள்ளது,’’ என்றனர்.
முடிவு:
உரிய ஆதாரங்களின்படி, குடும்பச் சண்டையால் நடந்த கொலையை சமீபத்திய அரசியல் நிகழ்வுகளுடன் தொடர்புபடுத்தி தவறான வதந்தி பரப்பியுள்ளனர் என்று உறுதி செய்யப்படுகிறது. நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை மற்றவர்களுக்கு பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம்.

Title:சிஏஏ கோலம் போட மறுத்ததால் அதிராம்பட்டினம் முஸ்லீம் பெண் அடித்துக் கொலையா?
Fact Check By: Pankaj IyerResult: False
