
தூத்துக்குடியில் போலீசார் துப்பாக்கியால் சுடும்போது குறுக்கே போனதால் 13 பேர் இறந்ததாக பா.ம.க இளைஞர் அணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறியதாக ஒரு பதிவு சமூக ஊடகங்களில் அதிக அளவில் ஷேர் ஆகி உள்ளது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:
ஸ்டெர்லைட் சம்பவம்
நடிகர் எம்.எஸ்.பாஸ்கர் படத்தின் மேல், “போலீசார் துப்பாக்கியால் சுடும்போது குறுக்கே போனதால் 13 பேர் இறந்தனர் – அன்புமணி” என்று உள்ளது. படத்துக்கு கீழே, “கேவலம் பதவிக்காகவும் பணத்துக்காவும் விலை போகும் விலைமாது போல் வாழும் இவனை செருப்பால் அடிக்கனும் சார்!” என்று கூறப்பட்டுள்ளது.
முட்டாள்கள் தேசம் என்ற ஃபேஸ்புக் குழு இந்த பதிவை மார்ச் 27ம் தேதி பகிர்ந்துள்ளது. தேர்தல் நேரம் என்பதால் பலரும் இந்த பதிவு உண்மை என்று நம்பி பகிர்ந்துள்ளனர்.
உண்மை அறிவோம்:
நாடாளுமன்றத் தேர்தல் கூட்டணி முடிவாவதற்கு முன்பு வரை தமிழக அரசை மிகக் கடுமையாக விமர்சித்தவர் அன்புமணி ராமதாஸ். தமிழக முதல்வர், அமைச்சர்களை பற்றி அவர் விமர்சித்தது சமூக ஊடகங்களில் வைரல் ஆகின.
தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாகவும் ஆளும் எடப்பாடி பழனிசாமி அரசை மிகக் கடுமையாக பா.ம.க நிறுவனர் ராமதாஸ், இளைஞர் அணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் மிகக் கடுமையாக விமர்சித்தனர். அப்படி இருக்கையில், இந்த ஃபேஸ்புக் பதிவு சந்தேகத்தை ஏற்படுத்தியது. இதனால், தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு தொடர்பாக அன்புமணி பேசியது பற்றி கூகுளில் தேடினோம்.


கடந்த 2018ம் ஆண்டு மே 23ம் தேதி சென்னையில் பேட்டி அளித்த அன்புமணி ராமதாஸ், “தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு திட்டமிட்ட படுகொலை. முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உடனடியாக பதவியில் இருந்து இறங்க வேண்டும்” என்றார்.
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூடி தமிழக அரசு உத்தரவு பிறப்பித்தது. அப்போது கூட, “நாசகார ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராகப் போராடிய அப்பாவி பொது மக்கள் 13 பேரை காவல்துறையை ஏவி கொடூரமாகப் படுகொலை செய்ததால் ஏற்பட்ட அவப்பெயரைத் துடைத்துக்கொள்ளவே இப்படி ஒரு ஆணையைத் தமிழக அரசு பிறப்பித்துள்ளது. ஆனால், இது யாருக்கும் பயனளிக்காத, அப்பட்டமான ஏமாற்று வேலை” என்று அன்புமணி ராமதாஸ் மிகக் கடுமையாக விமர்சித்திருந்தார். இது தொடர்பாக இந்து தமிழில் வெளியான செய்தியைப் பார்க்க இங்கே கிளிக் செய்யுங்கள்.
ஒருவேளை, அ.தி.மு.க-வுடன் கூட்டணி அமைந்த பிறகு இப்படி ஏதேனும் பேசினாரா என்று கூகுளில் தேடினோம். ஆனால், அப்படி எந்த ஒரு செய்தியும் கிடைக்கவில்லை.

அதேநேரத்தில், “தமிழக அரசு மீதான ஊழல் புகார்களை ஆளுநரிடம் அளித்ததைத் திரும்பப்பெறவில்லை. தவறு செய்தவர்கள் தண்டிக்கப்பட வேண்டும். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்பதே எங்களின் நிலைப்பாடு. கூட்டணி சேர்வதால் பாமக தனது கொள்கைகளிலிருந்து பின் வாங்காது” என்று அன்புமணி ராமதாஸ் அளித்த பேட்டி நமக்கு கிடைத்தது. இது தொடர்பான செய்தியைப் படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்.
நமக்குக் கிடைத்த தகவல்கள் அடிப்படையில், துப்பாக்கியால் சுடும்போது மக்கள் 13 பேர் குறுக்கே போனதால் உயிரிழந்தனர் என்று அன்புமணி ராமதாஸ் கூறியதாக வெளியான பதிவு தவறானது என்று உறுதி செய்யப்படுகிறது.
முடிவு:
தகுந்த ஆதாரங்களின் அடிப்படையில், மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவு தவறானது என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம்.

Title:தூத்துக்குடியில் போலீசார் துப்பாக்கியால் சுடும்போது குறுக்கே போனதால் 13 பேர் இறந்தனர்! – அன்புமணி கூறியதாக பரவும் வதந்தி
Fact Check By: Praveen KumarResult: False
