
எப்படி ஆட்சி நடத்தக்கூடாது என தி.மு.க-வைப் பார்த்து கற்றுக்கொள், என தனது தந்தை கூறியதாக ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி கூறியதாக ஒரு பதிவு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:
Facebook Link | Archived Link |
ஆந்திர முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டியின் புகைப்படம் பகிரப்பட்டுள்ளது. நிலைத்தகவலில், “எப்படி ஆட்சி நடத்தக்கூடாது என திமுகவை பார்த்து கற்றுக்கொள் என என் தந்தை ராஜசேகர ரெட்டி கூறுவார் – ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி” என்று உள்ளது.
இந்த பதிவை, Sasi Travels Pms என்ற ஐ.டி கொண்ட நபர் தன்னுடைய ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இதை பலரும் ஷேர் செய்து வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
2019 நாடாளுமன்றத் தேர்தலுடன் ஆந்திர மாநில சட்டமன்ற தேர்தலும் நடந்தது. இதில் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் அமோக வெற்றி பெற்றது. ஜெகன் மோகன் ரெட்டி அம்மாநில முதல்வராக பொறுப்பேற்றார். பதவி ஏற்பு விழாவில் பங்கேற்குமாறு தமிழக எதிர்க்கட்சித் தலைவரும் தி.மு.க தலைவருமான மு.க.ஸ்டாலினுக்கு அழைப்பு விடுத்திருந்தார். அதை ஏற்று மு.க.ஸ்டாலினும் பதவி ஏற்பு விழாவில் பங்கேற்றார்.
deccanchronicle.com | Archived Link 1 |
அப்படி இருக்கும்போது, “எப்படி ஆட்சி நடத்தக்கூடாது என்று தி.மு.க-வைப் பார்த்து கற்றுக்கொள் என்று என் தந்தை ஒய்.எஸ்.ராஜசேகர ரெட்டி கூறுவார்” என்று ஜெகன் மோகன் ரெட்டி தெரிவித்ததாக தகவல் சமூக ஊடகங்களில் பரவி வருகிறது. இந்த தகவலை ஜெகன் மோகன் ரெட்டி எப்போது கூறினார், எந்த பத்திரிகை, தொலைக்காட்சி ஊடகத்திலாவது அது தொடர்பாக செய்தி வெளியாகி உள்ளதா என்று எந்த ஒரு ஆதாரத்தையும் அளிக்கவில்லை. பலரும் இதை ஷேர் செய்து வருவதால் இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம்.
ஆந்திர பிரதேசத்தின் முதல்வராக இருந்த ஒய்.எஸ்.ராஜசேகர ரெட்டி 2009ம் ஆண்டு நிகழ்ந்த ஒரு ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்தார். 2004 தேர்தலின்போது தன்னுடைய அரசியல் வாழ்வை ஆரம்பித்தார் ஜெகன் மோகன் ரெட்டி. 2009ம் ஆண்டு அவர் நாடாளுமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார். தி.மு.க-வுக்கும் ஒய்.எஸ்.ராஜசேகர ரெட்டி மற்றும் ஜெகன் மோன் ரெட்டிக்கும் இடையே எந்த ஒரு பிரச்னை இருந்ததாக செய்திகள் இல்லை. அப்படி இருக்கும்போது தி.மு.க-வை ஜெகன் மோகன் ரெட்டி விமர்சித்ததாக சமூக ஊடகங்களில் எதன் அடிப்படையில் செய்தி பரவுகின்றது என்று ஆராய்ந்தோம்.
கூகுளில் “தி.மு.க-வை விமர்சித்த ஜெகன் மோகன் ரெட்டி, எப்படி ஆட்சி நடத்தக் கூடாது என்று தி.மு.க-வைப் பார்த்து கற்றுக்கொள் என என் தந்தை ராஜசேகர ரெட்டி கூறுவார் ” என்று டைப் செய்து தேடினோம். அப்படி எந்த ஒரு செய்தியும் நமக்கு கிடைக்கவில்லை.
Search Link 1 | Search Link 2 |
thenewsminute.com | Archived Link 1 |
dinamani.com | Archived Link 2 |
tamil.news18.com | Archived Link 3 |
அதே நேரத்தில், ஜெகன் மோகன் ரெட்டி பதவி ஏற்பு விழாவில் பங்கேற்ற மு.க.ஸ்டாலின், மிக விரைவில் தமிழகத்தின் முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் வர வேண்டும் என்று பேசிய ஜெகன் மோகன் ரெட்டி என்று தி.மு.க ஆதரவு நிலைப்பாடுடைய செய்திகளே கிடைத்தன.
இது தொடர்பாக தி.மு.க இளைஞரணி நிர்வாகி ஒருவரிடம் பேசினோம். “பதவி ஏற்பு விழாவில் பங்கேற்க வேண்டும் என்று ஜெகன் மோகன் ரெட்டி அழைப்பு விடுத்தார். அதை ஏற்று தலைவரும் இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலினும் பதவி ஏற்பு விழாவில் பங்கேற்றனர். “எப்படி ஆட்சி நடத்தக்கூடாது என்பதற்கு தி.மு.க-வைப் பார்க்க வேண்டும்” என்று ஒய்.எஸ்.ராஜசேகர ரெட்டி கூறியிருந்தால் எதற்காக தன்னுடைய பதவி ஏற்பு விழாவுக்கு எங்கள் தலைவரை அழைக்க வேண்டும், விரைவில் தமிழக முதல்வராக வர வேண்டும் என்று தன்னுடைய விருப்பத்தைக் கூற வேண்டும்.
ஜெகன் மோகன் ரெட்டிக்கும் தி.மு.க-வுக்கும் இடையே ஆழ்ந்த நட்பு உள்ளது. ஜெகன் மோகன் ரெட்டி மீது தமிழக மக்கள் மத்தியில் நல்ல அபிப்ராயம் உள்ளது. அவர் பெயரில் வதந்தியை பரப்பினால் நம்புவார்கள் என்று இப்படி செய்திருக்கலாம். அந்த ஃபேஸ்புக் பதிவில் துளி கூட உண்மை இல்லை” என்றார்.
நம்முடைய ஆய்வில்,
தி.மு.க-வை விமர்சித்து ஜெகன் மோகன் ரெட்டி பேசியதாக எந்த ஒரு செய்தியும் கிடைக்கவில்லை.
தன்னுடைய பதவி ஏற்பு விழாவில் மு.க.ஸ்டாலின் பங்கேற்க வேண்டும் என்று ஜெகன் மோகன் ரெட்டி அழைப்பு விடுத்த செய்தி நமக்கு கிடைத்துள்ளது.
ஜெகன் மோகன் ரெட்டி அழைப்பை ஏற்று மு.க.ஸ்டாலின் விழாவில் பங்கேற்ற செய்தி நமக்கு கிடைத்துள்ளது.
விரைவில் தமிழக முதல்வராக மு.க.ஸ்டாலின் வர வேண்டும் என்று ஜெகன் மோகன் ரெட்டி கூறிய செய்தி நமக்கு கிடைத்துள்ளது.
இந்த ஆதாரங்கள் அடிப்படையில், “எப்படி ஆட்சி நடத்தக்கூடாது என திமுகவைப் பார்த்து கற்றுக்கொள் என என் தந்தை ராஜசேகர ரெட்டி கூறுவார்” என ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி கூறியதாக சமூக ஊடகங்களில் பரவும் தகவல் பொய்யானது என்று உறுதி செய்யப்படுகிறது.
முடிவு:
தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில், மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவு தவறானது என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம்.

Title:திமுகவை விமர்சித்த ஜெகன் மோகன் ரெட்டி- ஃபேஸ்புக் வைரல் பதிவு உண்மையா?
Fact Check By: Chendur PandianResult: False
