"அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதற்காக என் சார்பில் என் மனைவியை அனுப்புகிறேன்" என்று இந்து மக்கள் கட்சித் தலைவர் அர்ஜுன் சம்பத் கூறியதாக ஒரு நியூஸ்கார்டு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

Arjun 2.png
Facebook LinkArchived Link

நியூஸ் 7 தமிழ் தொலைக்காட்சியின் நியூஸ் கார்டு ஒன்று பகிரப்பட்டுள்ளது. அதில், "அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதற்காக என் சார்பில் என் மனைவியை அனுப்புகிறேன் - அர்ஜுன் சம்பத், இந்து மக்கள் கட்சி" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

நிலைத்தகவலில், ராமர் கோவில் கட்ட உன்னையும் உள்ளே அனுமதிக்க மாட்டான், உன் மனைவியையும் உள்ளே அனுமதிக்கமாட்டான் என்று சில ஆட்சேபகரமான கருத்தை பகிர்ந்துள்ளனர்.

இந்த பதிவை தமிழர் நிலம் என்ற ஃபேஸ்புக் பக்கம் 2019 நவம்பர் 9ம் தேதி வெளியிட்டுள்ளது. இந்த பதிவை பலரும் ஷேர் செய்து வருகின்றனர்.

உண்மை அறிவோம்:

இந்து மக்கள் கட்சித் தலைவர் அர்ஜுன் சம்பத் அவ்வப்போது சர்ச்சைக்குரிய வகையில் கருத்துக்களை தெரிவிப்பதும், அதைத் தொடர்ந்து சமூக ஊடகங்களில் அவரை விமர்சித்து பதிவு வெளியாவதும் வாடிக்கையாகிவிட்டது. இருப்பினும் இந்த முறை சற்று மோசமாக கருத்தை பகிர்ந்துள்ளனர். நியூஸ் 7 தமிழ் நியூஸ் கார்டில் இந்த பதிவு பகிரப்பட்டுள்ளது. உண்மையில் இந்த நியூஸ் கார்டை நியூஸ் 7 வெளியிட்டுள்ளதா என்று ஆய்வு மேற்கொண்டோம்

வழக்கமாக நியூஸ் 7 தமிழ் வெளியிடும் நியூஸ் கார்டில் பயன்படுத்தப்படும் தமிழ் ஃபாண்ட் இதில் இல்லை. மேலும், தகவல் உள்ள பகுதியில் வாட்டர் மார்க் லோகோ இருக்கும். அதுவும் இதில் இல்லை. இதனால் இது போலியானது என்பது உறுதியாகிறது. மற்றபடி புகைப்படம், சிறிய தலைப்பு எல்லாம் சரியாக இருந்தது. எனவே, நியூஸ் 7 தமிழ் வெளியிட்ட அசல் நியூஸ் கார்டை தேடினோம்.

Arjun 3.png
Facebook LinkArchived Link

இதற்காக, நியூஸ்7 தமிழின் ஃபேஸ்புக் பக்கத்தில் வெளியான நியூஸ்கார்டுகளை ஆய்வு செய்தோம். அப்போது, 2019 நவம்பர் 9ம் தேதி முற்பகல் 11.45க்கு வெளியான அர்ஜுன் சம்பத் தொடர்பான நியூஸ் கார்டு கிடைத்தது. அதில், "வரவேற்கக்கூடிய தீர்ப்பு என்றாலும் கொண்டாட்டத்தில் ஈடுபட மாட்டோம் - அர்ஜுன் சம்பத், இந்து மக்கள் கட்சி" என்று இருந்தது.

நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட நியூஸ் கார்டிலும் நியூஸ்7 தமிழ் வெளியிட்ட நியூஸ் கார்டிலும் தேதி, நேரம், புகைப்படம் சரியாக இருந்தது. இதன் மூலம் இந்த நியூஸ் கார்டை எடுத்து எடிட் செய்து வெளியிட்டுள்ளது உறுதி செய்யப்படுகிறது.

Arjun 4.png

நீதிமன்ற தீர்ப்பு தொடர்பாக அர்ஜுன் சம்பத் ஏதேனும் அறிக்கை, பேட்டி அளித்துள்ளாரா, அதில் இதுபோன்ற கருத்தைத் தெரிவித்துள்ளாரா என்று தேடினோம். அவருடைய ஃபேஸ்புக் பக்கத்தில் 9ம் தேதி அறிக்கை ஒன்று வெளியாகி இருந்தது. அதில், தீர்ப்புக்கு எதிராக கருத்து கூறிய விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் தொல் திருமாவளவன், கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர்களை விமர்சித்திருந்தார். கோவில் கட்ட தன்னுடைய மனைவியை அனுப்புவது பற்றியோ, தானே நேரில் சென்று கட்டுமானப் பணியில் ஈடுபடப் போவதாகவோ தெரிவிக்கவில்லை.

Archived Link

அதேபோல் நவம்பர் 10ம் தேதியும் தீர்ப்பு விவரம் தொடர்பாக அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அதில் கூட மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவில் இடம் பெற்றது போன்ற தகவல் இல்லை.

Archived Link

நம்முடைய ஆய்வில்,

ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட ஃபேஸ்புக் பதிவில் உள்ள நியூஸ் கார்டு போலியானது என்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

நியூஸ்7 தமிழ் வெளியிட்ட அர்ஜுன் சம்பத் தொடர்பான அசல் நியூஸ் கார்டு கிடைத்துள்ளது.

அயோத்தி தீர்ப்பு வெளிவந்த பிறகான அர்ஜுன் சம்பத் மற்றும் இந்து மக்கள் கட்சி வெளியிட்ட அறிக்கைகள் கிடைத்துள்ளன.

இந்த ஆதாரங்கள் அடிப்படையில், "அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதற்காக என் சார்பில் என் மனைவியை அனுப்புகிறேன்" என்று இந்து மக்கள் கட்சித் தலைவர் அர்ஜுன் சம்பத் கூறியதாக பகிரப்படும் தகவல் தவறானது என்று உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:

தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில், மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவு தவறானது என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம்.

Avatar

Title:ராமர் கோவில் கட்ட மனைவியை அனுப்புகிறேன் என்று அர்ஜுன் சம்பத் கூறினாரா?

Fact Check By: Chendur Pandian

Result: False