
சீமானை நினைத்து வெட்கப்படுகிறேன் என்று ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள்தண்டனை அனுபவித்து வரும் பேரறிவாளனின் தாயார் கூறியதாக தனியார் தொலைக்காட்சி ஒன்றின் நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் வைரலாக பரவி வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:

Facebook Link | Archived Link |
நியூஸ் 7 தொலைக்காட்சியின் நியூஸ் கார்டு ஒன்று பகிரப்பட்டுள்ளது. அக்டோபர் 16, 2019 காலை 10.10க்கு அந்த நியூஸ்கார்டு வெளியானதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. அற்புதம்மாள் மற்றும் சீமான் படங்கள் அதில் உள்ளன. “சீமானை நினைத்து வெட்கப்படுகிறேன். இரண்டு நாட்களாக சாப்பிடவில்லை – அற்புதம்மாள், (பேரறிவாளனின் தாயார்) என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. பேரறிவாளன் என்பது எழுத்துப் பிழையோடு உள்ளது.
இந்த பதிவை இமய வரம்பி என்பவர் 2019 அக்டோபர் 17ம் தேதி வெளியிட்டுள்ளார். பலரும் இதை ஷேர் செய்து வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
ராஜீவ் காந்தியை நாங்கள்தான் கொலை செய்தோம் என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியது அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனால், ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனையாக அனுபவித்துவரும் ஏழு தமிழர்களின் விடுதலையில் பாதிப்பை ஏற்படுத்தும் என்று அரசியல் விமர்சகர்கள் கருத்து கூறிவருகின்றனர். இந்த நிலையில் சில தினங்களுக்கு முன்பு சீமானை நடிகர் ரஜினிகாந்த் விமர்சித்தது போன்று ஒரு நியூஸ் கார்டு வைரல் ஆனது. அது போலியானது என்று நம்முடைய ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் பிரிவில் செய்தி வெளியிட்டிருந்தோம்.
puthiyathalaimurai.com | Archived Link |
இந்த நிலையில், சீமானின் பேச்சுக்கு சிறையில் உள்ள பேரறிவாளனின் தாயார் அற்புதம்மாள் அதிருப்தி தெரிவித்தது போல ஒரு நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் பரவி வருகிறது. இந்த நியூஸ் கார்டு பார்க்க அசல் போல தெரியும் அளவுக்கு எடிட் செய்யப்பட்டுள்ளது. ஆனால், வழக்கமான நியூஸ் கார்டில் இடம் பெறும் வாட்டர் மார்க் லோகோ உள்ளிட்ட சில விஷயங்கள் இதில் இடம்பெறவில்லை. அத்துடன் எழுத்துப் பிழையோடு உள்ளது.
பழைய நியூஸ் கார்டில் உள்ளதை சரியாக அழிக்காமல் விட்டுள்ளனர். இதனால், ஆங்காங்கே பழைய நியூஸ் கார்டில் உள்ள எழுத்துகளின் மிச்சங்கள் தெரிகின்றன. இருப்பினும், இன்றைய பரபரப்பான காலக்கட்டத்தில் இது உண்மையா பொய்யா என்று யாரும் ஆய்வு செய்வது இல்லை. எனவே, இது உண்மை என்று நம்பி ஷேர் செய்து வருகின்றனர்.
ராஜீவ் காந்தி கொலையை நாங்கள்தான் செய்தோம் என்று சீமான் கூறியதை அடுத்து சீமான் பற்றி அற்புதம்மாள் ஏதும் பேட்டி அளித்துள்ளாரா என்று தேடினோம். அது போல எந்த ஒரு செய்தியும் நமக்கு கிடைக்கவில்லை. ஏழு பேர் விடுதலையை ஆளுநர் நிராகரித்தார் என்று வாய்மொழியாக மாநில அரசுக்கு அறிவிக்கப்பட்டது என்ற செய்திகள் மட்டுமே கிடைத்தன.
Search Link | News 18 Tamil Nadu | Archived Link |
நியூஸ் 7 தமிழ் ஃபேஸ்புக் பக்கத்தில் அக்டோபர் 16ம் தேதி வெளியான நியூஸ் கார்டுகளை ஆய்வு செய்தோம். நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட நியூஸ் கார்டில் உள்ளது போன்று சீமான் படத்துடன் கூடிய நியூஸ் கார்டு ஒன்று கிடைத்தது. ஆனால், அதில் அற்புதம்மாள் படத்துக்கு பதில் தொல்.திருமாவளவன் படம் இருந்தது.

அதில், “ராஜீவ் கொலையில் சர்வதேச சதி உள்ளது என்பதை பலரும் சொல்லி இருக்கின்றனர். ராஜீவ்காந்தியை கொன்றதாக விடுதலைப்புலிகள் எந்த இடத்திலும் சொல்லவில்லை – விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் பேட்டி” என்று இருந்தது. இந்த நியூஸ் கார்டை எடுத்து போலியாக அற்புதம்மாள் பெயரில் நியூஸ் கார்டை உருவாக்கி சமூக ஊடகங்களில் வெளியிட்டுள்ளது இதன் மூலம் உறுதியானது.

நம்முடைய ஆய்வில்,
சீமான் பேச்சு தொடர்பாக அற்புதம்மாள் எந்த ஒரு கருத்தையும் கூறியதாக செய்திகள் இல்லை என்பது உறுதியாகி உள்ளது.
ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட நியூஸ் கார்டில் எழுத்துப்பிழை இருந்ததும், தொலைக்காட்சியின் வாட்டர் மார்க் லோகோ உள்ளிட்டவை இடம் பெறாததும் உறுதி செய்யப்பட்டுள்ளது.
2019 அக்டோபர் 16ம் தேதி வெளியான அசல் நியூஸ் கார்டு கிடைத்துள்ளது.
இந்த ஆதாரங்கள் அடிப்படையில், சீமானை நினைத்து வெட்கப்படுகிறேன் என்று அற்புதம்மாள் கூறியதாக சமூக ஊடகங்களில் பரவும் நியூஸ் கார்டு போலியானது என்று உறுதி செய்யப்படுகிறது.
முடிவு:
தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில், மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவு தவறானது என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம்.

Title:சீமானை நினைத்து வெட்கப்படுகிறேன்; அற்புதம்மாள் பெயரில் பரவும் நியூஸ் கார்டு!
Fact Check By: Chendur PandianResult: False
