
கொரோனாவுக்கு கண்டுபிடிக்கப்பட்ட தடுப்பூசியை பாரத் பயோடெக் நிறுவனத்தின் துணைத் தலைவர் ஶ்ரீனிவாஸ் போட்டுக்கொண்டதாக ஒரு பதிவு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:

ஒருவரின் கையில் ரத்த பரிசோதனைக்காக சிரஞ்ச் மூலம் ரத்தம் எடுக்கும் புகைப்படம் பகிரப்பட்டுள்ளது.
நிலைத் தகவலில், “ஹைதராபாத்தில் இருக்கும் பாரத் பயோடெக் ( Bharat Biotech) என்ற நிறுவனம் தயாரித்த கோவாசின் (COVAXIN) என்ற மருந்துக்கு மனிதர்கள் மீது சோதனை செய்ய அனுமதி அளிக்கப்பட்டது. இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில், தேசிய வைராலஜி இன்ஸ்டிடியூட் ஆகியவை பரத் பயோடெக் நிறுவனம் உடன் இணைந்து இந்த மருந்தை உருவாக்கி உள்ளது.
இந்த நிறுவனத்தின் துணைத்தலைவர் டாக்டர் விகே ஸ்ரீனிவாஸ் இந்த மருந்தை தனது உடலில் செலுத்தி சோதனை செய்து வருகிறார். இந்தியாவில் கொரானா தடுப்பு ஊசியை முதலில் செலுத்திக் கொண்ட நபர் இவர்தான். தனது மருந்து மீது கொண்ட அதீத நம்பிக்கையால் தானே முதல் மனிதராக சோதனை முயற்சியில் இறங்கியிருக்கிறார் டாக்டர் ஸ்ரீநிவாசன்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த பதிவை, Vadakans Or Kirukans என்பவர் 2020 ஜூலை 3ம் தேதி பகிர்ந்துள்ளார். பலரும் இதை ஷேர் செய்து வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
கொரோனாவுக்கு தடுப்பூசி கண்டுபிடித்துள்ளதாக பாரத் பயோடெக் என்ற நிறுவனம் அறிவித்துள்ளது. ஆனால் இந்த மருந்தை மனிதர்களுக்கு செலுத்தி பக்கவிளைவுகள் இன்றி செயல்படுகிறதா என்று இன்னும் பரிசோதிக்கவில்லை என்றும் அறிவித்துள்ளது. பரிசோதனைக்கான ஆயத்தப் பணிகளை ஜூலை 7ம் தேதிக்குள் தொடங்கி, அடுத்த மாதம் (ஆகஸ்ட்) 14ம் தேதிக்கு முன்னதாக தடுப்பூசியை அறிமுகம் செய்ய வேண்டும் என்று இந்த நிறுவனத்தை ஐ.சி.எம்.ஆர் கேட்டுக்கொண்டுள்ளது.

உலகமே அச்சப்படும் கொரோனாவுக்கு தடுப்பூசி இந்தியாவில் கண்டுபிடிக்கப்பட்டால் மகிழ்ச்சியே. இன்னும் கிளினிக்கல் பரிசோதனைக்கு அனுப்பப்படாத மருந்தை நிறுவனத்தின் துணைத் தலைவரே போட்டுக் கொண்டார் என்று பகிர்ந்து வருவது அதிகப்படியான ஆர்வத்தைக் காட்டுகிறது.
படத்தைப் பார்க்கும்போது தடுப்பூசி போடுவது போலத் தெரியவில்லை. வழக்கமாக ரத்த பரிசோதனையின்போது கையில் ரத்தக் குழாய் தெரிய வேண்டும் என்பதற்காக கையில் இருக்கமாக ஒரு கருப்புப் பட்டையைக் கட்டுவார்கள். படத்தைப் பார்க்கும்போது ரத்தம் எடுப்பது போலவே உள்ளது. இது சந்தேகத்தை ஏற்படுத்தவே ஆய்வு மேற்கொண்டோம்.

பொதுவாக தடுப்பூசி குழந்தைகளுக்கு தொடை மற்றும் கையில் போடப்படும். பெரியவர்களுக்கு இடுப்பு தசை மற்றும் கையின் புஜம் பகுதியில் உள்ள தசைப் பகுதியில் மட்டுமே போடப்படும். ஆனால் இந்த படம் வழக்கமாக ரத்த பரிசோதனைக்கு ரத்தம் எடுக்கும் இடத்தில் போடப்படுவது போல உள்ளது.
எனவே, முதலில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள தடுப்பூசி உடலின் எந்த பகுதியில் போடக் கூடியது என்று ஆய்வு செய்தோம். அப்போது இந்த தடுப்பூசி Intramuscular injection என்று தெரியவந்தது. அதாவது கையின் புஜம் பகுதிக்கு மேல், இடுப்பு பகுதியில் 90 டிகிரி நேராக வைத்து மட்டுமே இந்த ஊசி போடப்படும் என்று தெரியவந்தது. எனவே, இது கட்டாயம் தடுப்பூசி போட்டபோது எடுத்ததாக இருக்காது என்பது உறுதியாகிறது.

இந்த படம் இவர்களுக்கு எங்கு கிடைத்தது, பாரத் பயோடெக் நிறுவனம் இது தொடர்பாக அறிவிப்பு எதையாவது வெளியிட்டதா என்று அதன் இணையதள பக்கத்தை ஆய்வு செய்தோம். அதில் எந்த தகவலும் இல்லை. அதன் ட்விட்டர் பக்கத்தைப் பார்த்தபோது, அதில் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டிருந்தனர்.
வாட்ஸ்அப் உள்ளிட்ட சமூக ஊடகங்களில் பாரத் பயோடெக் தொடர்பாக பரவும் படம், தகவல் பாரத் பயோடெக் நிறுவனத்தால் வெளியிடப்பட்டது இல்லை. பகிரப்படும் படம், வழக்கமாக தயாரிப்பு பணியில் ஈடுபடும் அனைத்து பணியாளர்களுக்கும் மேற்கொள்ளப்படும் வழக்கமான ரத்த பரிசோதனையின்போது எடுக்கப்பட்டது. கோவிட் 19க்கு எதிராக ஆற்றல் மிக்க பாதுகாப்பான மருந்தை தயாரிக்க பணியாற்றி வருகிறோம்” என்று குறிப்பிட்டிருந்தனர்.
இதன் மூலம் இந்தியா கொரோனா வைரஸ் கிருமிக்கு எதிரான தடுப்பூசியை கண்டுபிடித்துவிட்டது என்ற மகிழ்ச்சியின் காரணமாக அதிக உற்சாகத்தில் தவறான தகவல் பரப்பியிருக்கலாம் என்று தெரிகிறது. நமக்கு கிடைத்த ஆதாரங்கள் அடிப்படையில் நிறுவனத்தின் துணைத் தலைவர் வி.கே.ஶ்ரீனிவாசன் தடுப்பூசி போட்டுக்கொண்டபோது எடுத்த படம் என்று பகிரப்படும் தகவல் தவறானது என்று உறுதி செய்யப்படுகிறது.
முடிவு:
தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில், மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவு தவறானது என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049044263) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

Title:பாரத் பயோடெக் துணைத் தலைவர் ஶ்ரீனிவாஸ் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டாரா?
Fact Check By: Chendur PandianResult: False
