
‘’நிர்மலா சீதாராமன் கூறியதாக பரவும் தகவல்கள்,’’ என்ற தலைப்பில் பகிரப்படும் ஒரு ஃபேஸ்புக் பதிவை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம்.
தகவலின் விவரம்:

Facebook Claim Link | Archived Link |
பாசிசபாஜக ஆட்சிஒழிக எனும் ஃபேஸ்புக் ஐடி மேற்கண்ட பதிவை வெளியிட்டுள்ளது. அதில், மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன், ஜிஎஸ்டி, நீட், ஆட்டோமொபைல் வீழ்ச்சி மற்றும் வெங்காயம் விலை உயர்வு பற்றி பல்வேறு விதமாக கருத்து வெளியிட்டதாகக் குறிப்பிட்டுள்ளனர். இதனை பலரும் உண்மை என நம்பி வைரலாக ஷேர் செய்து வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவில் கூறியுள்ளதுபோல, நிர்மலா சீதாராமன் சர்ச்சையான வகையில் பேசினாரா என தகவல் தேட தொடங்கினோம். முதலில், ஜிஎஸ்டி வரி பற்றி, ‘’வீட்டில் சமைத்து சாப்பிட்டால் ஜிஎஸ்டி வரி கிடையாது,’’ என்று நிர்மலா சீதாராமன் கூறினாரா என விவரம் தேடினோம். அப்போது, 2017ம் ஆண்டில் இதுதொடர்பான தகவல் பரவியதாக தெரியவந்தது.
அந்த காலகட்டத்தில் நிர்மலா சீதாராமன் பாதுகாப்புத் துறை அமைச்சராக இருந்தார். அவர், நிதியமைச்சராக நியமிக்கப்பட்டது 2019ம் ஆண்டில்தான். குறிப்பாக, வீட்டில் சமைத்து சாப்பிட்டால் ஜிஎஸ்டி வரி கிடையாது, என்று அவர் பேசியதாகக் கூறப்படும் தகவலில் முழு உண்மை இல்லை.
இதுதொடர்பாக, அவரே விளக்கம் அளித்து, தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றையும் வெளியிட்டிருந்தார்.

Nirmala Sitharaman Twitter Link | Archived Link |
இதுபற்றிய செய்தியை படிக்க இங்கே கிளிக் செய்யவும். இதன்படி, தமிழ் ஊடகம் ஒன்றுக்கு அளித்த பேட்டியை தவறான முறையில் அர்த்தப்படுத்தி பலரும் செய்தி வெளியிடுவதாக, நிர்மலா சீதாராமன் விளக்கம் தெரிவித்துள்ளார். எனவே, ஜிஎஸ்டி பற்றி அவர் கூறியதாக பகிரப்படும் தகவலில் முழு உண்மை என தெளிவாகிறது.
இதையடுத்து, நீட் மசோதா பற்றி நிர்மலா சீதாராமன் என்ன பேசினார் என்பது பற்றி விவரம் தேடினோம். அப்போது, கடந்த 2017ம் ஆண்டில் நிர்மலா சீதாராமன் சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய பேட்டி ஒன்றின் விவரம் கிடைத்தது. அதில், குடியரசுத் தலைவரின் ஒப்புதல் கோரி தமிழக அரசு அனுப்பி வைத்த நீட் மசோதா தொடர்பான கேள்விக்கு, ‘’அது எந்த நிலையில் தற்போது இருக்கிறது என்று எனக்குத் தெரியாது. அது எந்த இடத்தில் உள்ளது என்பது பற்றி விசாரித்துவிட்டுத்தான் இதுபற்றி மேற்கொண்டு பேச முடியும்,’’ என்று நிர்மலா சீதாராமன் பதில் அளித்துள்ளார்.
Puthiyathalaimurai News Link |
பிறகு, ஆட்டோமொபைல் துறை வீழ்ச்சிக்கு என்ன காரணம் என்று நிர்மலா சீதாராமன் பேசினாரா என விவரம் தேடினோம். அப்போது, இந்தியர்கள் பலரும் சொந்த கார் வைத்திருப்பதை விட, ஓலா, உபெர் போன்ற வாடகை நிறுவன கார்களை உபயோகிப்பது அதிகரித்துள்ளது. இதனால், ஆட்டோமொபைல் துறை சரிவை சந்தித்துள்ளதாக, நிர்மலா சீதாராமன் பேசிய வீடியோ ஆதாரம் கிடைத்தது.
News 18 Tamil Link | Maalaimalar News Link |
இறுதியாக, வெங்காயம் விலை உயர்வு பற்றி நிர்மலா சீதாராமன் பேசியது என்ன என்று ஏற்கனவே நாம் விரிவான ஆய்வு ஒன்றை செய்துள்ளோம். அவர் பேசியது ஒன்றாக இருக்க, ஊடகங்களும், எதிர்க்கட்சிகளும் அரசியல் காரணங்களுக்காக அதனை அப்படியே தவறாக சித்தரித்து தகவல் பரப்பியிருந்தன. இதுபற்றி நாம் வெளியிட்ட செய்தியின் லிங்க் கீழே தரப்பட்டுள்ளது.
Fact Crescendo Tamil Link |
இதுவரை கிடைத்த ஆதாரங்களின் அடிப்படையில் நமக்கு தெரியவந்த உண்மையின் விவரம்,
1) தமிழக அரசின் நீட் மசோதா மற்றும் ஆட்டோமொபைல் துறை வீழ்ச்சி பற்றி நிர்மலா சீதாராமன் பேசியது உண்மைதான்.
2) வெங்காயம் விலை உயர்வு மற்றும் வீட்டில் சாப்பிட்டால் ஜிஎஸ்டி கிடையாது, என்பது பற்றி நிர்மலா சீதாராமன் பேசியதை, தவறாகச் சிலர் திரித்து பரப்பியுள்ளனர்.
முடிவு:
உரிய ஆதாரங்களின்படி, நிர்மலா சீதாராமன் பேசியதில், பாதி உண்மை, பாதி தவறான தகவல் உள்ளதாக நிரூபிக்கப்பட்டுள்ளது. நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம்.

Title:நிர்மலா சீதாராமன் பற்றி பரவும் தகவல்கள் உண்மையா?
Fact Check By: Pankaj IyerResult: Partly False
